கிராமங்களில் அதிகரிக்கும் ஆதரவு.. காரைக்குடியில் கரை சேர்வாரா சீமான்? சவால் கொடுக்கும் காங்கிரஸ்!
சிவகங்கை: காரைக்குடி தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் களமிறங்கி இருக்கிறார். தமிழ்நாடு முழுவதும் சீமான் பிரச்சாரத்திற்கு சென்றாலும், காரைக்குடி தொகுதியில் நாதகவினர் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். இருந்தாலும் கூட்டணி பலத்துடன் இருக்கும் காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடி மற்றும் தனிப்பெரும் செல்வாக்குடன் திகழும் அமமுக வேட்பாளர் தேர்போகி பாண்டி ஆகியோர் கடும் சவாலாக இருக்கின்றனர்.
2024ஆம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் நாதக சார்பாக போட்டியிட்ட எழிலரசி, காரைக்குடி தொகுதியில் மட்டும் 28 ஆயிரம் வாக்குகளை கைப்பற்றினார். அதற்கு முன்பாக 2021 சட்டசபைத் தேர்தலில் நாதக சார்பாக போட்டியிட்ட துரை மாணிக்கம் சுமார் 24 ஆயிரம் வாக்குகளை பெற்றார். இதன் காரணமாகவே சீமான் சொந்த ஊரான சிவகங்கை மாவட்டம் பக்கம் வந்துள்ளார்.

காரைக்குடி தொகுதியை பொறுத்தவரை முக்குலத்தோர் சமூக மக்கள் பெரும்பான்மையாக வசித்து வருகின்றனர். ஏற்கனவே சிட்டிங் எம்எல்ஏ காங்கிரஸ் கட்சியின் மாங்குடி எளிமையானவர். தொகுதியில் இருந்து யார் வேண்டுமானாலும் அணுகலாம் என்ற பெயர் எடுத்திருக்கிறார். அதேபோல் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் காரைக்குடியில் சட்டக் கல்லூரி மற்றும் டைடல் பார்க் கொண்டு வந்துள்ளார்.
இது இளைஞர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. மீண்டும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக மாங்குடி களத்தில் இருக்கிறார். அவருக்கு ஆதரவாக கார்த்தி சிதம்பரம் மற்றும் திமுக நிர்வாகிகள் பணியாற்றி வருகின்றனர். மறுபக்கம் 2021 தேர்தலில் அமமுக சார்பாக போட்டியிட்ட தேர்போகி பாண்டி சுமார் 45 ஆயிரம் வாக்குகளை பெற்றார். அதிமுக கூட்டணி சார்பாக எச்.ராஜா போட்டியிட்டு 54 ஆயிரம் வாக்குகளை பெற்றார்.
இம்முறை அதிமுக - பாஜக கூட்டணியில் அமமுகவும் இணைந்துள்ளது. இதனால் காரைக்குடி தொகுதியில் தேர்போகி பாண்டி அமமுக சார்பாக களமிறக்கப்பட்டுள்ளார். இதனால் தேர்போகி பாண்டிக்கும் வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது. இது போதாதென்று தவெக வேட்பாளர் பிரபு கடந்த ஓராண்டுக்கும் மேலாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
பிரபுவுக்கு காரைக்குடி, தேவகோட்டை உள்ளிட்ட பகுதிகளில் நல்ல ஆதரவு இருக்கிறது. இவரின் குடும்பமும் காங்கிரஸ் குடும்பம் என்பதால், அந்த செல்வாக்கையும் பயன்படுத்தி கொள்கின்றனர். இப்படி 3 பெரிய வேட்பாளர்கள் இடையில் சீமான் நிற்கிறார். சீமானுக்கு கிராமங்களில் கணிசமான ஆதரவு இருந்து வருகிறது. அதேபோல் காரைக்குடி தொகுதியில் இஸ்லாமியர்களும் சீமானுக்கு ஆதரவாக இருக்கின்றனர்.
சீமான் மற்ற தொகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டாலும், காரைக்குடி தொகுதியில் அதிக எண்ணிக்கையிலான நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கிராமம் கிராமமாக சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர். கிராமங்களில் சீமான் இம்முறை சட்டமன்றம் செல்ல வேண்டும் என்று பேச்சுகளும் அதிகரித்துள்ளது. இதனால் காரைக்குடியில் ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கையின் போது வேட்பாளர்களுக்கு திக் திக் மொமண்ட் உருவாகும் என்று பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications