எல்லார்கிட்டயும் ஒரு ஆடியோ வீடியோ இருக்கு! பாஜகவில் இது தான் பிரச்சினையே! போட்டுடைத்த டாக்டர்.சரவணன்
மதுரை : பாஜகவில் இன்னும் சில பழைமைவாதிகள் இருக்கிறார்கள்.. எல்லோரிடமும் ஏதாவது ஒரு ஆடியோ வீடியோ இருக்கிறது எனவும், நிறைய கட்சிகளில் இருந்து தான் இணைய வேண்டும் என அழைப்பு வருவதாக திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்எல்ஏ டாக்டர் சரவணன் கூறியிருக்கிறார்.
மதுரையில் திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுகவைச் சேர்ந்த மதுரை டாக்டர் சரவணன் 2021 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் போட்டியிட அக்கட்சி சார்பில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இதனால் உடனடியாக சென்னையில் பாஜகவில் இணைந்தார் சரவணன். கட்சியில் சேர்ந்த நான்கே மணி நேரத்தில் அவர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் அந்த தேர்தலில் அவர் வெற்றி பெறவில்லை. இருந்த போதும் பாஜக சார்பாக தீவிர அரசியல் செய்து வந்தார்.

திமுகவில் ஐக்கியம்?
ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், பிளக்ஸ் பேனர்கள், போஸ்டர்கள் என அவர் வருகைக்குப் பின்னர் பாஜக மதுரை மாவட்ட அரசியல் சூடு பிடித்தது. இதனிடையே கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி ராணுவ வீரர் மரணம் தொடர்பாக விரும்பத்தகாத சம்பவம் அன்று நடைபெற்றது ராணுவ வீரருக்கு அஞ்சலி செலுத்த வந்த பி டி ஆர் பழனிவேல் தியாகராஜரின் கார் மீது பாஜகவினர் காலனியை வீசினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் அன்று இரவே மதுரை டாக்டர் சரவணன் அமைச்சர் பயனியல் தியாகராஜனை சந்தித்து வருத்தம் தெரிவித்தார் பாஜகவில் இருந்தும் நீக்கப்பட்டார். இதனையடுத்து அவர் திமுகவில் இணையப் போவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் தற்போது வரை அதுகுறித்த நிகழ்வுகள் அரங்கேறவில்லை.

இணைவது எப்போது?
இந்த நிலையில் திமுகவில் தான் எப்போது சேர போகிறேன் பாஜகவில் நடந்த பிரச்சனை என்ன என்பது குறித்து டாக்டர் சரவணன் பேசியிருக்கிறார். ஒன் இந்தியா தமிழுக்கு அவர் அளித்த பிரத்தியேக பேட்டியில், திமுகவில் இணைவதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. கடந்த சில நாட்களுக்கு முன்புதான் பாஜகவில் இருந்து சில சித்தாந்தங்கள் பிடிக்காததால் விலகினேன். ஆரம்பத்தில் இருந்தே திராவிட சித்தாந்தத்தில் இருந்து அரசியல் செய்து வந்ததால் சில நிகழ்வுகள் காரணமாக பாஜகவில் என்னால் தொடர முடியவில்லை இன்னும் யோசிக்க வேண்டிய காலம் இருக்கிறது. அதனால் இன்னும் ஒரு சில மாதங்களில் எனக்கான ஆதரவாளர்கள் இருக்கிறார்கள். அவர்களுடன் ஆலோசிக்க வேண்டியுள்ளது. அரசியல் தாண்டி சமூக சேவகராகவும் மருத்துவராகவும் எனக்குத் தெரிந்த என் நலன் விரும்பிகள் ஏராளமானோர் இருக்கிறார்கள். அவர்களிடம் ஆலோசிக்க வேண்டி இருக்கிறது அவர்களுடன் ஆலோசித்த பிறகு நிச்சயம் ஒரு நல்ல முடிவு எடுப்பேன்.

மீண்டும் பாஜக
மதுரையில் பிரம்மாண்ட அரசியல் செய்தேன். தமிழக அளவில் திரும்பிப் பார்க்கும் அளவுக்கு மதுரை பாஜக அரசியல் பிரபலமாக இருந்தது. டெல்லி ஊடகங்கள் கூட சிறந்த மாவட்ட பாஜக தலைவர் என என்னை பற்றி பேசின. இதனால் பாஜகவில் இருக்கும் சில நண்பர்கள் நான் கட்சியை விட்டு போக விரும்பவில்லை. இதன் காரணமாக தொடர்ந்து எனக்கு அழைப்புகள் வந்து கொண்டே இருக்கிறது. நிறைய பேர் நீங்கள் மீண்டும் கட்சிக்கு வர வேண்டும் என அழைக்கிறார்கள். அது அப்போதைக்கு தெரியும் சேர்ந்தாலும் எந்த தவறும் இல்லை. பாஜகவினர் கொடுத்த விளக்கங்களும் ஏற்றுக் கொள்ளத் தக்க வகையில் தான் இருக்கிறது. அண்ணாமலை அவர்கள் ஒரு இளைஞர். ஐபிஎஸ் வேலையை விட்டு விட்டு வந்திருக்கிறார். சிறந்த உழைப்பாளி. அவர் தலைமையை ஏற்றுக் கொண்டு மீண்டும் கட்சியில் சேர்வதில் எந்த தவறும் இல்லை. ஆனால் சிறிது யோசிக்க வேண்டி இருக்கிறது.

ஓபிஎஸ் அணி
எனது மகனின் திருமணத்திற்கு அனைவருக்குமே வரவேற்பளித்தேன் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், நாம் தமிழர் சீமான், மதிமுக துரை வைகோ உள்ளிட்ட அனைவருக்குமே தனித்தனியாக வரவேற்பு கொடுத்தேன். ஓ பன்னீர்செல்வம் அவர்களுக்கும் அந்த வகையில் தான் வரவேற்பு கொடுத்தேன். இருந்தபோதும் முன்னாள் முதலமைச்சர் அவர்கள் திருமணத்திற்கு வந்து மணமக்களை வாழ்த்தினார். அவருக்கும் எனக்குமான பழக்கம் நல்ல முறையில் இருக்கிறது. அவர் அணியில் சேர்ந்தாலும் என்ன தவறு இருக்கப் போகிறது. எதுவாக இருந்தாலும் ஆதரவாளர்களுடன் பேசி தான் முடிவு எடுப்பேன்.

திமுக அரசியல்
திமுகவை பொருத்தவரை கட்சியில் சேர்வதற்கு தடை என்று பெரிய அளவில் எதுவும் இல்லை. அதே நேரத்தில் சில சிக்கல்கள் இருக்கிறது.பெரிய அளவில் விளம்பர அரசியல் செய்வது எனது ஸ்டைல். அதை நான் கடந்த காலங்களிலும் செய்திருக்கிறேன். அது கை கொடுத்தும் இருக்கிறது. திமுகவில் இணைவது குறித்து எனது ஆதரவாளருடன் பேசி முடிக்கப்படும். தைக்கு பிறகு நிச்சயம் அது தொடர்பான அறிவிப்பு இருக்கும் அப்போதும் எனது நடவடிக்கைகள் அந்தக் கட்சி சிறப்பாக செயலாற்ற வேண்டும் என்ற வகையிலேயே இருக்கும்.

பாஜகவில் என்ன பிரச்சினை?
பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது உள்ளிட்ட பல கருத்துக்கள் முன்வைக்கப்படுகிறது. உங்கள் கருத்து என்ன என கேட்டபோது,"பாஜகவில் உட்கட்சி பிரச்சினைகள் அதிகம் இருக்கும். சூர்யா சிவா சொன்னது போல நம்மை விட இவன் முன்னே சென்று விடுவானோ என உள்ளே இருப்பவர்களை குழி பறிப்பார்கள் போன்ற விஷயங்கள் இருக்கும். எல்லோரும் ஒரு ஆடியோ ஒரு வீடியோ வைத்திருப்பார்கள். அண்ணாமலை அவர்கள் கூட திராவிட டைப் ஆப் அரசியல் செய்ய வேண்டும் எனக் கூறுவார். நான் சிறப்பாக செயல்படுகிறேன் என்று பல இடங்களில் அவர் கூறியிருப்பதாக நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர் நல்ல தலைவர் தான். ஆனால் கட்சியில் சில பழமைவாதிகள் இருக்கிறார்கள். மதுரையிலும் சில பழமைவாதிகள் இருக்கிறார்கள். டாக்டர் எங்கே மீண்டும் கட்சிக்கு வந்து விடுவார்களோ என வாட்ஸ் ஆப்பில் கூட ஏதாவது ஒரு செய்தியை பரப்பி வருகின்றனர். எல்லா கட்சியிலும் அடுத்தவர் வளர்ச்சி பிடிக்காத சிலர் இருக்கத்தான் செய்வார்கள் ஆனால் அந்த கட்சியில் சிறந்த தலைவர்கள் இருப்பார்கள். கட்சிக்கு பலமானவர்களை நிச்சயம் அவர்கள் சேர்ப்பார்கள். அந்த வகையில் தை மாதத்திற்கு பிறகு எனக்கும் சில கட்சிகளில் இருந்து அழைப்பு வந்திருக்கிறது. தனியாக இயக்கம் ஆரம்பிங்கள் என்று கூட கோரிக்கைகள் வைக்கிறார்கள். ஆனால் இது போன்ற முடிவுகள் எதுவாக இருந்தாலும் எனது ஆதரவாளர்களுடன் ஆலோசனைக்குப் பிறகு இருக்கும்" என்றார்.












Click it and Unblock the Notifications