விநாயகர் சதுர்த்தி வருவதால் பாதுகாப்பு கொடுப்பதில் சிக்கல்.. தவெக மதுரை மாநாட்டின் தேதி மாற்றம்?
மதுரை: தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு தேதி மாற்றப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. ஆகஸ்ட் கடைசி வாரத்தில் விநாயகர் சதுர்த்தி விழா இருப்பதால், தவெக மாநாடு தேதியை மாற்ற கோரி காவல்துறை தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும், அதற்கு தவெக தரப்பில் ஆலோசனை முடிவு சொல்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் அரசியல் கட்சியின் 2வது மாநில மாநாடு மதுரையில் நடக்கவுள்ளது. ஆகஸ்ட் 25ஆம் தேதி மதுரை எலியார்பத்தி பகுதியில் நடத்த தவெக திட்டமிட்டுள்ளது. இதற்கான பூமி பூஜை கடந்த மாதம் புஸ்ஸி ஆனந்த தலைமையில் மதுரை மாவட்டச் செயலாளர்களான கல்லணை மற்றும் தங்கப்பாண்டி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

இதன்பின் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து அனுமதி கோரி கடிதம் அளித்தார். இதனைத் தொடர்ந்து எலியார்பத்தியில் 120 ஏக்கர் நிலம் ஒப்பந்தம் செய்யப்பட்டு, அதனைச் சுத்தம் செய்யும் பணிகளை தவெக நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு நாளும் பணிகள் ஆய்வு செய்யப்பட்டு வந்தன.
ஆனால் இதுவரை தவெக 2வது மாநில மாநாட்டிற்கு மதுரை காவல்துறை தரப்பில் அனுமதி அளிக்கப்படவில்லை. இதுதொடர்பாக காவல்துறை தரப்பில் கடந்த வாரம், விரைவில் நேரில் சென்று ஆய்வு செய்த பின் முறையான அனுமதி அளிக்கப்படும் என்று தெரிவித்தார். இந்த மாநாட்டில் மொத்தமாக 15 லட்சம் தொண்டர்களை அழைத்து வர மாவட்ட நிர்வாகிகளுக்கு தவெக தலைமை அறிவுறுத்தியுள்ளது.
குறிப்பாக தென் மாவட்டங்களில் இருந்து அதிகளவிலான நிர்வாகிகள் வர வேண்டும் என்று விஜய் உத்தரவிட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் 2வது மாநாட்டிலேயே தவெகவின் முதற்கட்ட வேட்பாளர்களை அறிமுகம் செய்யவும் ஆலோசித்து வருகிறார். இந்த மாநாடு தவெக தலைவர் விஜய் மேற்கொள்ள உள்ள சுற்றுப்பயணத்திற்கு மிகப்பெரிய அடித்தளமாக இருக்கப் போகிறது.
அதுமட்டுமல்லாமல் மாநாட்டின் மூலமாக சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தையும் தொடங்க தவெக திட்டமிட்டிருக்கிறது. ஆனால் ஆகஸ்ட் கடைசி வாரத்தில் விநாயகர் சதுர்த்தி வருவதால், ஆகஸ்ட் 25ஆம் தேதி தவெக மாநாடு நடத்த அனுமதி கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏனென்றால் விநாயகர் சதுர்த்தி பாதுகாப்புப் பணிகளில் காவல்துறையினர் ஈடுபட்டிருப்பார்கள்.
இதனால் தவெக மாநாடு வேறு தேதிக்கு மாற்றப்படுமா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் புஸ்ஸி ஆனந்த் இன்று மதுரை வந்து மாநாட்டு பணிகளை ஆய்வு செய்து, மாவட்ட எஸ்பி அரவிந்தனை நேரில் சந்தித்தார். அப்போது மாநாடு வரைபடம், தொண்டர்களின் வருகை எண்ணிக்கை, ஒப்பந்தப் பத்திரம் உள்ளிட்டவற்றைச் சமர்ப்பித்ததாகக் கூறப்படுகிறது.
இதன்பின் காவல்துறை தரப்பில் விநாயகர் சதுர்த்தி பாதுகாப்புப் பணிகளில் காவல்துறை ஈடுபட வேண்டி இருப்பதால், மாநாடு தேதியை மாற்ற முடியுமா என்று கேட்கப்பட்டுள்ளது. அதற்கு புஸ்ஸி ஆனந்த், விஜய் திருமண நாள் மற்றும் விஜயகாந்த் பிறந்தநாள் என்று செண்டிமெண்ட் பார்த்து தேதி முடிவு செய்யப்பட்டுள்ளது. அதனால் தவெக தலைவர் விஜயிடம் கேட்டு பதில் அளிக்கிறோம் என்று கூறியதாகத் தகவல் கிடைத்துள்ளது.












Click it and Unblock the Notifications