தாராவி மறுசீரமைப்புத் திட்டம்: மும்பை மாதுங்காவில் 10 டவர்கள் கட்டுமானப் பணிகள் தொடக்கம்!

Subscribe to Oneindia Tamil

மும்பை: மும்பையின் மாதுங்கா பகுதியில் தாராவி மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ் மறுவாழ்வுப் பணிகளுக்கான பூமி பூஜை, அதானி என்டர்பிரைசஸின் பிரணவ் அதானி தலைமையில் நடைபெற்றது. இத்திட்டத்தின் கீழ், 10,432 மறுவாழ்வு வீடுகள் மற்றும் 1,379 வணிக வளாகங்களைக் கொண்ட 10 டவர்கள் கட்டப்பட உள்ளன.

மும்பையில் உள்ள தாராவி பகுதியைச் சேர்ந்த தகுதியான குடியிருப்பாளர்களுக்கான மறுவாழ்வு வீடுகளைக் கட்டும் பணி திங்கட்கிழமை தொடங்கியது. மும்பையின் மாதுங்காவில் உள்ள 22 ஏக்கர் ரயில்வே தளத்தில் நடைபெற்ற பூமி பூஜை நிகழ்ச்சியுடன் கட்டுமானப் பணிகள் தொடங்கின. அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் (AEL) நிறுவனத்தின் இயக்குநர் பிரணவ் அதானி இதனை தொடங்கி வைத்தார். இது தாராவி மறுசீரமைப்புத் திட்டத்தின் முக்கியமான முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.

Dharavi Redevelopment

அதானி நவ்பாரத் டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட் (ANDPL) நிறுவனம் மூலம் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின்கீழ், 10 மறுவாழ்வு டவர்கள் கட்டப்பட உள்ளன. இவற்றில் 10,432 மறுவாழ்வு குடியிருப்புகளும், 1,379 வணிக மற்றும் தொழில்துறை யூனிட்களும் அமைக்கப்பட உள்ளன. அதே பகுதியில் மறுவாழ்வு அளிக்கும் திட்டத்தின்கீழ், தகுதியான குடியிருப்பாளர்களுக்கு 350 சதுர அடி பரப்பளவிலான வீடுகள் வழங்கப்படும்.

இந்த நிகழ்ச்சியில் மகாராஷ்டிர அரசின் நகர்ப்புற வளர்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அசீம் குமார் குப்தா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். தாராவி மறுசீரமைப்புத் திட்டம் மற்றும் குடிசை மறுவாழ்வு ஆணையத்தின் (DRP/SRA) தலைமைச் செயல் அதிகாரி மகேந்திர கல்யாண்கரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

திட்ட விவரங்களின்படி, 6 மற்றும் 1 ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த தகுதியான குடியிருப்பாளர்களுக்கு மாதுங்கா தளத்தில் முதற்கட்டமாக வீடுகள் வழங்கப்பட உள்ளன. இதைத் தொடர்ந்து, தாராவியைச் சேர்ந்த பிற தகுதியான குடியிருப்பாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் சுமார் 4,500 குடியிருப்புகள் ஒதுக்கப்படும்.

பூமி பூஜை நிகழ்ச்சியில் பேசிய பிரணவ் அதானி, குடும்பங்களுக்குப் பாதுகாப்பான வீடுகளையும் சிறந்த எதிர்காலத்திற்கான வாய்ப்புகளையும் வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கம் என்று தெரிவித்தார்.

"ஒவ்வொரு குடும்பமும் பாதுகாப்பாக உணரக்கூடிய, எதிர்காலத்தைத் திட்டமிடக்கூடிய ஒரு வீட்டுக்குத் தகுதியுடையவர்கள். தாராவி குடும்பங்களுக்கு இது எவ்வளவு முக்கியமானது என்பதை நாங்கள் அறிவோம்" என்று அவர் கூறினார். மேலும், திட்டமிடப்பட்டுள்ள குடியிருப்பு மற்றும் வணிக வசதிகள், குடும்பங்கள் தங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக்கொள்ள உதவும் வகையில் புதிய குடியிருப்புப் பகுதிகளை உருவாக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

முதல் ஐந்து டவர்கள் 2029 மார்ச் மாதத்திற்குள் ஒப்படைக்கப்படும். இந்த 10 மறுவாழ்வு கோபுரங்களும் மகாராஷ்டிர அரசின் கீழ் செயல்படும் DRP/SRA அமைப்பிடம் மூன்று கட்டங்களாக ஒப்படைக்கப்பட உள்ளன.

முதல் ஐந்து கோபுரங்கள் 2029 மார்ச் மாதத்திற்குள் ஒப்படைக்கத் திட்டமிடப்பட்டுள்ளன. அடுத்த இரண்டு கோபுரங்கள் 2029 ஆகஸ்ட் மாதத்திற்குள் ஒப்படைக்கப்படும். மீதமுள்ள மூன்று கோபுரங்கள் 2030 ஆகஸ்ட் மாதத்திற்குள் ஒப்படைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒவ்வொரு கோபுரமும் 37 முதல் 39 மாடிகளைக் கொண்டிருக்கும். இதில் 10 முதல் 12 பயணிகள் மின்தூக்கிகளும், தீ விபத்தின்போது பயன்படுத்துவதற்காக இரண்டு பிரத்யேக மின்தூக்கிகளும் அமைக்கப்படும். வணிக மற்றும் தொழில்துறை அலகுகளுக்காக மேலும் இரண்டு மின்தூக்கிகள் அமைக்கப்படும்.

இத்திட்டத்தில் மழலையர் பள்ளி, சமூகக் கூடம், கட்டிடத்தின் மேடைத்தளத்தில் தோட்டங்கள், அமர்வதற்கான இடங்கள், குடியிருப்போர் சங்க அலுவலகங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட வசதிகளும் இடம்பெற உள்ளன.

பராமரிப்புச் செலவுகளுக்கு உதவும் வணிக இடங்கள்

கட்டிடங்கள் மற்றும் பொதுவான உள்கட்டமைப்புகளை நீண்டகாலம் பராமரிப்பதற்கான ஏற்பாடுகளும் இத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு மறுவாழ்வு கட்டிடத்திலும் உள்ள வணிக இடங்களில் 10 சதவீதம், பொதுவான வசதிகளைப் பராமரிப்பதற்கான வருவாயை உருவாக்க ஒதுக்கப்படும்.

வீடுகள் ஒப்படைக்கப்பட்ட பின்னர் முதல் 10 ஆண்டுகளுக்கு, கட்டிடங்கள் மற்றும் பொதுவான உள்கட்டமைப்புகளை ANDPL நிறுவனம் பராமரிக்கும்.

தாராவி மறுசீரமைப்புத் திட்டம், அப்பகுதி குடும்பங்களுக்கு நவீன வீடுகளையும் அத்தியாவசிய உள்கட்டமைப்பு வசதிகளையும் வழங்குவதற்கான முக்கியமான முன்னேற்றத்தைக் குறிக்கிறது என்று மகேந்திர கல்யாண்கர் தெரிவித்தார்.

"பாதுகாப்பான, நவீன வீடுகளையும், சிறந்த வாழ்க்கைத் தரத்திற்குத் தேவையான உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளையும் வழங்குவதில்தான் எங்களது கவனம் உள்ளது" என்று அவர் கூறினார்.

உலகளாவிய வடிவமைப்பு மற்றும் பொறியியல் நிபுணத்துவம்

இத்திட்டத்தில் பல்வேறு கட்டிடக்கலை, பொறியியல் மற்றும் நகர்ப்புறத் திட்டமிடல் நிறுவனங்களின் நிபுணத்துவம் பயன்படுத்தப்படுகிறது.

அமெரிக்காவைச் சேர்ந்த வடிவமைப்பு நிறுவனமான சசாகி (Sasaki), இங்கிலாந்தைச் சேர்ந்த பொறியியல் ஆலோசனை நிறுவனமான புரோ ஹப்போல்ட் (Buro Happold), மும்பையைச் சேர்ந்த ஸ்டுடியோபாட் (StudioPOD), கட்டிடக் கலைஞர் ஹபீஸ் கான்ட்ராக்டர், P&T மற்றும் ARC ஸ்டுடியோ ஆகியவை இதில் இடம்பெற்றுள்ளன. சிங்கப்பூரைச் சேர்ந்த நகர்ப்புறத் திட்டமிடல் நிபுணர்களும் இத்திட்டத்தில் பங்களிக்கின்றனர்.

தாராவி மறுசீரமைப்புக்கான விரிவான திட்டத்தின்கீழ், கடைகள், பள்ளிகள், சுகாதார வசதிகள், வழிபாட்டுத் தலங்கள், பூங்காக்கள், பொதுப் போக்குவரத்து மற்றும் பிற சமூக உள்கட்டமைப்பு வசதிகளைக் கொண்ட கலப்புப் பயன்பாட்டு நகர்ப்புறக் குடியிருப்புப் பகுதி உருவாக்கப்பட உள்ளது. அத்தியாவசியச் சேவைகள் அனைத்தும் 15 நிமிட நடைபயண தூரத்தில் கிடைக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளன.

மறுசீரமைப்புத் திட்டத்தை முன்கூட்டியே அறிய உதவும் தாராவி அனுபவ மையம்

மகாத்மா காந்தி பிறந்தநாளான காந்தி ஜெயந்தியன்று மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தாராவி அனுபவ மையத்தைத் திறந்து வைத்ததைத் தொடர்ந்து, தற்போது மறுவாழ்வு கட்டுமானப் பணிகளுக்கான பூமி பூஜை நடைபெற்றுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் தாராவிக்கென உருவாக்கப்பட்ட பிரத்யேக பாடல் வெளியிடப்பட்டது. மேலும், அப்பகுதி மக்களின் வாழ்க்கை, கலாச்சாரம் மற்றும் வரலாற்றைப் பதிவு செய்யும் காபி டேபிள் புத்தகமும் வெளியிடப்பட்டது.

22,500 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்த அனுபவ மையம், முன்மொழியப்பட்ட மறுசீரமைப்புத் திட்டத்தை மக்கள் முன்கூட்டியே அறிந்துகொள்ள உதவுகிறது. இங்கு முழு அளவிலான மாதிரி வீடுகள், முப்பரிமாணக் காட்சிப்படுத்தல் மற்றும் ஊடாடும் காட்சிப் பலகைகள் மூலம் வீடுகள், பணியிடங்கள், வசதிகள், போக்குவரத்து மற்றும் திறந்தவெளிப் பகுதிகள் குறித்த விவரங்களைப் பார்வையாளர்கள் அறிந்துகொள்ள முடியும்.

அனுபவ மையம் தொடங்கப்பட்டுள்ள நிலையில், இனி கட்டுமானப் பணிகளை நிறைவேற்றுவதிலும் நீண்டகாலப் பராமரிப்பிலும் கவனம் செலுத்தப்படும் என்று ANDPL நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அனில் சர்தானா தெரிவித்தார்.

"கட்டுமானப் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், திட்டத்தைச் சிறப்பாக நிறைவேற்றுவதிலும் நீண்டகாலப் பராமரிப்பிலும் எங்களது கவனம் இருக்கும். வீடுகள் ஒப்படைக்கப்பட்ட பின்னர் ஒவ்வொரு கட்டிடத்தையும் அதன் பொதுவான உள்கட்டமைப்புகளையும் 10 ஆண்டுகளுக்கு நாங்கள் பராமரிப்போம்" என்று அவர் கூறினார்.

ஆசியாவின் மிகப்பெரிய முறைசாரா குடியிருப்புப் பகுதிகளில் ஒன்றான தாராவியில், வீட்டு வசதிகளையும் மக்கள் பயன்பாட்டு உள்கட்டமைப்புகளையும் மேம்படுத்துவதே தாராவி மறுசீரமைப்புத் திட்டத்தின் நோக்கமாகும். இப்பகுதியில் பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+