ஜி20 கூட்டம்.. இரவிலும் சுறுசுறுப்பு.. மும்பையில் திரைச்சீலைகளால் மறைக்கப்பட்ட குடிசைகள்.. சர்ச்சை
மும்பை: 2023ம் ஆண்டுக்கான ஜி20 மாநாட்டுக்கு இந்தியா தலைமை பொறுப்பை ஏற்ற நிலையில் வெளிநாட்டு பிரதிநிதிகள் மும்பை வந்துள்ளனர். இந்நிலையில் தான் அவர்களின் கண்களில் படாமல் இருக்க குடிசை பகுதிகள் திரைச்சீலைகள் மற்றும் ஜி20 விளம்பர பேனர்களால் மறைக்கப்பட்டது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
உலகில் வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் இணைந்து ஜி20 அமைப்பை உருவாக்கி உள்ளன. வர்த்தகம், உள்நாட்டு பாதுகாப்பு, எரிசக்தி, காலநிலை மாற்றம் உள்பட பல்வேறு விஷயங்கள் பற்றி இந்த அமைப்பு விவாதித்து வருகிறது.
இந்த கூட்டமைப்பில் மொத்தம் 20 நாடுகள் உள்ளன. இந்தியா, அமெரிக்கா, சீனா, பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம், இத்தாலி, ஜப்பான், இந்தோனேசியா உள்ளிட்ட 20 நாடுகள் உள்ளன.

ஜி20 உச்சி மாநாடு
இந்த ஜி20 உச்சிமாநாடு ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான உச்சி மாநாடு மாநாடு கடந்த மாதம் இந்தோனேசியாவில் 2 நாட்கள் நடந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் உள்பட 20 நாடுகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் பங்கேற்றனர். பல்வேறு விஷயங்கள் பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது. குறிப்பாக, உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கையை கைவிட்டு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என பிரதமர் மோடி பேசினார்.

இந்தியாவுக்கு தலைமை பொறுப்பு
ஜி20 உச்சிமாநாட்டை பொறுத்தமட்டில் சுழற்சி முறையில் தலைமை பொறுப்பு வழங்கப்படும். அதன்படி 2023ம் ஆண்டுக்கான ஜி 20 உச்சிமாநாட்டின் தலைமை பொறுப்பு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த தலைமை பொறுப்பை இந்த மாத துவக்கத்தில் இந்தியா அதிகாரப்பூர்வமாக ஏற்றது. அடுத்த ஆண்டு தலைநகர் டெல்லியில் ஜி20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் முன்கூட்டியே துவங்கிவிட்டது. ஜி20 லோகோ, கருப்பொருள் ஆகியவற்றை பிரதமர் மோடி ஏற்கனவே வெளியிட்டுள்ளார். பாஜகவின் தேர்தல் சின்னமான தாமரை வடிவம் இடம்பெற்றுப்பது ஒரு புறம் விவாதத்தை கிளப்பி வந்தாலும் கூட மத்திய அரசு ஜி20 உச்சி மாநாடு தொடர்பான பணிகளை தீவிரமாக செய்து வருகிறது.

மும்பையில் ஜி20 முதல் கூட்டம்
இந்நிலையில் தான் ஜி20 உச்சிமாநாட்டுக்கு முன்பாக உலகின் பல்வேறு நாட்டு பிரதிநிதிகளின் மாநாடுகள் இந்தியாவின் பல இடங்கில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்தியாவின் G20 தலைமையின் மேம்பாட்டு பணிக்குழுவின் முதல் கூட்டம் நேற்று முன்தினம் மும்பையில் துவங்கியது. இந்த மாநாடு இன்று முடிவடைய உள்ளது. இந்நிலையில் தான் மும்பை மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் உள்ள கலாசாரத்தை வெளிநாட்டு பிரதிநிதிகள் சுற்றுப்பார்க்க விரும்பினர்.

குடிசை பகுதிகள் திரைச்சீலைகளால் மறைப்பு
இந்த வேளையில் நகரை தூய்மையாக வைக்க வேண்டும் என அதிகாரிகள் விரும்பினர். அதன்படி வெளிநாட்டு பிரதிநிதிகள் செல்லும் இடங்கள் அவசரஅவசரமாக சுத்தம் செய்யப்பட்டன. நகரில் உள்ள குடிசைப்பகுதிகளை மறைக்க திரைச்சீலைகள் கட்டப்பட்டன. மேலும் பல இடங்களில் ஜி20 தொடர்பான விளம்பர பேனர்கள் வைத்து குடிசை பகுதிகள் மறைக்கப்பட்டன. இதுபற்றி அந்த பகுதி மக்கள் கூறுகையில், ‛‛இரவோடு இரவாக தூய்மை பணியாளர்கள் சுத்தம் செய்தனர். காலையில் தான் அவர்கள் சுத்தம் செய்வது தெரியவந்தது. இவர்கள் அனைவரும் சாலை பகுதியில் மட்டும் சுத்தம் செய்தனர். கடந்த 50 ஆண்டுகளில் இதுபோன்ற தூய்மை பணியை நாங்கள் பார்த்தது இல்லை'' என்றார்.

குஜராத்தை தொடர்ந்து மும்பையில்...
இதற்கிடையே தான் குடிசை பகுதிகளை மறைக்க திரைச்சீலைகள் கட்டப்பட்டது தொடர்பான போட்டோக்கள் இணையதளத்தில் வெளியாகி உள்ளன. இது விமர்சனத்தை கிளப்பி உள்ளது. பலரும் மும்பையின் உண்மை நிலையை மறைக்க முயற்சித்ததாக குற்றம்சாட்டி வருகின்றனர். முன்னதாக குஜராத்துக்கு பிரிட்டன் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் உள்ளிட்டவர்கள் வந்தபோதும் குடிசை பகுதிகள் திரைச்சீலைகள் கொண்டு மறைக்கப்பட்டன. இது சர்ச்சையை கிளப்பிய நிலையில் தற்போது அதுபோன்ற சம்பவம் மும்பையில் நடந்துள்ளது.












Click it and Unblock the Notifications