எங்கள் அடுத்த பிளான் இதுதான்.. பாஜகவுடன் கைகோர்க்க திட்டமா? தலைமறைவு அமைச்சர் ஷிண்டே பரபர! ட்விஸ்ட்
மும்பை: மகாராஷ்டிராவில் நிலவும் அரசியல் பிரச்சினை வேறு லெவலுக்கு சென்று கொண்டு இருக்கும் நிலையில், இது குறித்துத் தலைமறைவு அமைச்சர் ஷிண்டே சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் நேற்று தொடங்கிய அரசியல் குழப்பம் நிமிடத்திற்கு நிமிடம் பல்வேறு திருப்பங்களைச் சந்தித்து வருகிறது.
இந்த அரசியல் குழப்பத்தால் அங்கு நடைபெறும் மகா விகாஸ் அரசே கவிழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள மூத்த தலைவர்கள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு கொரோனா தொற்று- காங். மூத்த தலைவர் கமல்நாத்

மாயம்
இந்த அத்தனை அரசியலில் குழப்பங்களைத் தொடங்கி வைத்தவர் ஏக்நாத் ஷிண்டே. சிவசேனாவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான அவர், திடீரென நேற்று மாயமானர். அவருடன் 15 முதல் 20 எம்எல்ஏக்கள் வரை தலைமறைவானதாகச் சொல்லப்பட்டது. இருப்பினும், தன்னிடம் 46 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாக ஷிண்டே தெரிவித்தார். இதற்கிடையே தலைமறைவான இரு எம்எல்ஏக்கள் இன்று சிவசேனா தலைமையகம் திரும்பினர்.

ஆட்சி கவிழ்ப்பு?
தங்களைக் கடத்தி சென்றதாகவும் அங்கிருந்து தப்பி வந்ததாகவும் அவர்கள் கூறி பரபரப்பை ஏற்படுத்தினர். அதேபோல இன்று மதியம் அமைச்சரவை கூட்டமும் நடைபெற்றது. அதில் சுமார் 9 அமைச்சர்கள் வரை பங்கேற்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் எப்போது வேண்டுமானாலும் கூட்டணி அரசு கவிழும் சூழல் உருவானது. இதையடுத்து தற்போது நிலவும் அரசியல் சூழல் குறித்து சிவசேனா மூத்த தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.

எம்எல்ஏக்கள் கூட்டம்
குழப்பமான சூழல் நிலவி வரும் நிலையில், இன்று மாலை சிவசேனா எம்எல்ஏக்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து அனைத்து எம்எல்ஏக்களுக்கும் கடிதம் எழுதப்பட்டுள்ளது. மும்பையில் உள்ள முதல்வர் உத்தவ் தாக்கரேவின் அதிகாரப்பூர்வ இல்லமான வர்ஷாவில் இந்தக் கூட்டம் நடைபெறும் என்றும் இதில் கூட்டத்தில் கலந்து கொள்ளாதவர்கள் கட்சியில் இருந்து விலக விரும்புவதாகக் கருதப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதில் கலந்து கொள்ளத் தவறினால் கட்சி ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

நடவடிக்கை
இன்று மாலை எத்தனை எம்எல்ஏக்கள் வருகிறார்கள் என்பதைப் பொறுத்தே ஆட்சி நீட்டிக்குமா இல்லையா என்பது தெரிய வரும். ஏற்கனவே சிவசேனா சட்டசபை தலைவர் பதவியில் இருந்து ஷிண்டே நீக்கப்பட்டுள்ளார். இன்று எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளாத பட்சத்தில் அவர் மீது அடுத்தகட்ட நடவடிக்கை பாயும் எனக் கூறப்படுகிறது. இதனிடையே ஷிண்டே பாஜக உடன் இணையலாம் என்றும் கூட தகவல் வெளியானது.

பாஜக உடன் பேச்சுவார்த்தை?
இந்தச் சூழலில் ஏக்நாத ஷிண்டே சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளார். தன்னிடம் 6-7 சுயேச்சை எம்எல்ஏக்கள் உட்பட 46 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளதாக ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், "எனக்கு எம்எல்ஏக்கள் கொடுக்கும் ஆதரவு வரும் காலத்தில் உயரும். அதேபோல சிலர் நாங்கள் பாஜகவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறி வருகின்றனர். ஆனால் இப்போது வரை பாஜகவிடம் இருந்து எங்களுக்கு எந்த முன்மொழிவும் வரவில்லை. அவர்களுடன் நாங்கள் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை.

தாக்ரே ராஜினாமா?
அதேபோல கிளர்ச்சி எம்எல்ஏக்கள் குழு சிவசேனா தரப்பு அல்லது முதல்வர் உத்தவ் தாக்கரேவுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. எனக்கு ஆதரவாக இருக்கும் எம்எல்ஏக்கள் உடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளேன். அதன் பின்னர் அடுத்தகட்ட திட்டம் குறித்து முடிவு எடுக்கப்படும். என்னிடம் போதுமான எண்ணிக்கையில் எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது, முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமா இல்லையா என்பதை தாக்கரே தான் முடிவு செய்ய வேண்டும்" என்றும் அவர் கூறினார்.