மகாராஷ்டிராவில் திடீரென அதிகரித்த கொரோனா.. ஒரே நாளில் 4000-த்திற்கும் அதிக கேஸ்கள் பதிவாகி பரபரப்பு
மும்பை: 39 நாட்களுக்கு பிறகு மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 4 ஆயிரத்துக்கும் அதிகமான கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதே போன்று ஒரு மாதத்திற்கு பிறகு மும்பை நகரில் 24 மணி நேரத்தில் 600 கொரோனா கேஸ்கள் பதிவாகியுள்ளன.
கொரோனா காரணமாக அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் முதலிடத்தில் இருப்பது மகாராஷ்டிரா. ஆனால் சமீபகாலமாக நாடு முழுக்க பாதிப்பு குறைந்து வரும் நிலையில் மகாராஷ்டிராவிலும் பாதிப்பு குறைந்தது.
ஆனால், இப்போது கேஸ்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

39 நாட்களுக்கு பிறகு
ஜனவரி 6ம் தேதி மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 4 ஆயிரத்து 382 பேருக்கு கொரோனா நோய் தொற்று பதிவானது. அதன் பிறகு 4000த்திற்கும் குறைவாகத்தான் கேஸ்கள் பதிவான நிலையில் ஞாயிற்றுக்கிழமை, ஒரே நாளில் 4 ஆயிரத்து 92 புதிய கேஸ்கள் பதிவாகியுள்ளன.

மும்பை நகரம்
மும்பை நகரத்தில் 645 கேஸ்கள் பதிவாகியுள்ளன. ஜனவரி 14ஆம் தேதி மும்பை நகரத்தில் 607 கேஸ்கள் பதிவாகி இருந்த நிலையில் சரியாக ஒரு மாதம் கழித்து இதுபோல அதிக அளவுக்கு பதிவாகி உள்ளது. மும்பை நகரத்தில் இதுவரை கொரோனா நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 லட்சத்து 14 ஆயிரத்து 76 என்ற அளவில் உள்ளது.

பரிசோதனை
மகாராஷ்டிரா மாநிலம் முழுக்க கேஸ்கள் எண்ணிக்கை 20 லட்சத்து 64 ஆயிரத்து 278 என்ற அளவில் உள்ளது. மகாராஷ்டிராவில் கடந்த வாரம் நாளொன்றுக்கு சராசரியாக 54 ஆயிரம் பரிசோதனைகள் செய்யப்பட்டு வந்தன. இதனால் இந்த நம்பர்கள் அதிகரிப்பு தெரியவந்துள்ளது.

மக்கள் ஒத்துழைப்பு தேவை
கொரோனா இரண்டாவது அலை வராமல் தடுக்க வேண்டுமென்றால் மக்கள் சமூக இடைவெளியை பராமரிக்க வேண்டும். முக கவசம் அணிய வேண்டும், கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவ வேண்டும். ஆனால் சமீபகாலமாக தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் இதை மக்கள் பின்பற்றவில்லை. எனவே இந்த வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்து கொள்வதன் மூலம் மிகப்பெரிய ஆபத்திலிருந்து காப்பாற்றிக் கொள்ளலாம் என்று மருத்துவ வல்லுநர்கள் கூறுகிறார்கள்.