குரங்கு அம்மை.. பயம் தேவையில்லை.. தடுப்பூசி தேவைப்படாது.. மருத்துவ நிபுணர் விளக்கம்
மும்பை: இந்தியாவில் இதுவரை 9 பேருக்கு குரங்கு அம்மை நோய் தொற்று பரவியுள்ள நிலையில், இந்த நோய் குறித்து பொது மக்கள் அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று பிரபல மருத்துவ நிபுணர் ககன்தீப் கங்க் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மாகாணங்களில் அடுத்தடுத்து சுதாதார அவசர நிலையை அறிவிக்கும் அளவுக்கு குரங்கு அம்மை நோய் மிக தீவிரமாக பரவி வருகிறது.
அடுத்த கொரோனா என்று மட்டும் தான் சொல்லவில்லை.. அந்த அளவுக்கு குரங்கு அம்மை நோயும் வேகமாக பரவி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்தியாவில் முதல் பலி
எனினும் மிக தீவிரமாக பரவும் தன்மை இல்லை என்று ஒரு புறம் சொல்லப்பட்டாலும் உலக நாடுகள் முதல் மாநில அரசுகள் வரை அதற்கான தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு கொண்டுதான் இருக்கிறது. இந்த குரங்கு அம்மை நோய் இந்தியாவில் பரவியது மட்டும் அல்லாமல் உயிர் பலியும் வாங்கியுள்ளது. கேரளாவில் முதன் முதலாக குரங்கு அம்மை பாதிக்கப்பட்ட அந்த நபர் தான் இந்தியாவில் குரங்கு அம்மை நோயால் பலியான முதல் நபர். தொடர்ந்து இந்தியாவில் குரங்கு அம்மை நோய் பரவிக்கொண்டு தான் இருக்கிறது.

9 பேருக்கு குரங்கு அம்மை
குறிப்பாக டெல்லியில் 4 பேர் கேரளாவில் 5 பேர் என மொத்தம் 9 பேர் இந்தியாவில் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குரங்கு அம்மை இந்தியாவில் ஒவ்வொன்றாக அதிகரிக்கத் தொடங்கியிருக்கும் நிலையில், இந்த நோய்த்தொற்று குறித்து மக்கள் மத்தியில் மெல்ல மெல்ல அச்சமும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. எனினும் நோயின் தீவிர தன்மையை உணர்ந்து மத்திய சுகாதாரத்துறையும் தொடர்ந்து தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. பரிசோதனை எண்ணிக்கைகளையும் அதிகப்படுத்தியுள்ளது.

மருத்துவ நிபுணர் விளக்கம்
இந்த நிலையில், பிரபல மருத்துவ நிபுணர் ககன் தீப் கங்க் குரங்கு அம்மை குறித்தும் தடுப்பூசி போட வேண்டியது அவசியமா? என்பது குறித்தும் ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு விரிவாக விளக்கம் அளித்தார். ககன் தீப் கங்க் கூறியதாவது;-குரங்கு அம்மை பாதிப்பால் சில உயிரிழப்புகள் ஏற்படுவதை நாம் கேள்வி பட்டாலும் கூட, குரங்கு அம்மையை பற்றிய புரிதலுக்காக இன்னும் ஆழமாக நாம் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. சில நேரங்களில் இதுபோன்ற வைரஸ் தாக்குதல்களால் மூளை அழற்சி ஏற்படுகின்றது. இது பரவலாக தெரிந்த ஒன்று என்றாலும் கணிக்க முடியாததாகவும் உள்ளது. பிற உயிரிழப்புகள் எச்.ஐ.ஐ , புற்றுநோய் பாதிப்பு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படுகிறது.

பரவலை குறைப்பதற்கான சூத்திரம்
பாலியல் ரீதியான தொடர்புகள் உள்ளவர்கள் மத்தியில் குரங்கு அம்மை பரவுகிறது என்றாலும், ஸ்கின் டு ஸ்கின் தொடர்பு மூலமாகவும் இந்நோய் பரவும் என்பதால் இது அதிகமாக பரவுகிறது. குரங்கு அம்மை பரவும் சங்கிலியை கண்டறிய தொடர்பு கண்டறிதல் அவசியம். எந்த அளவுக்கு தொடர்பு கண்டறிதலை துரிதப்படுத்துகிறமோ? அந்த அளவுக்கு பரவும் வேகம் குறையும். எனவே குரங்கு அம்மை பரவலை குறைப்பதற்கான சூத்திரம் என்னவென்றால் அதிக அளவு பரிசோதனையே ஆகும். 300 பேருக்கு பரிசோதனை செய்தால் வெறும் ஒன்றிரண்டு பாதிப்புகள் மட்டுமே உள்ளது. எனவே, குரங்கு அம்மை பரவலாக பரவும் என அச்சப்பட வேண்டிய காரணம் இல்லை. இதில் மற்றொரு நல்ல விஷயம் என்னவென்றால், கொரோனாவை விட மிகவும் குறைவாக பரவும் தன்மை கொண்டிருப்பதே. இதனால், குரங்கு அம்மை பரவலை கட்டுப்படுத்தும் வாய்ப்புகள் சிறப்பாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

தடுப்பூசி தேவையா?
குரங்கு அம்மைக்கு தடுப்பூசி எந்த அளவுக்கு முக்கியத்தும் என்பது பற்றி பேசிய கங்க், 'வைரசின் தன்மையை இப்போதுதான் புரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறோம். பெரியம்மைக்கு போடும் தடுப்பூசி கூட குரங்கு அம்மை பரவலுக்கு கேடயமாக போட முடியும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இருந்தாலும் பெரியம்மை தடுப்பூசியால் பலன்கள் இருந்தாலும் இது குறிப்பிடத்தக்க பக்க விளைவுகளையும் கொண்டுள்ளது. குறிப்பிடத்தக்க பக்க விளைவுகளை ஏற்படுத்தும் ஒரு தடுப்பூசியை, பெரியம்மைக்கு தடுப்பூசியாக பயன்படுத்துவது என்பது எளிதானதாக இருக்காது. கொரோனா வைரசை பொருத்தவரை அந்த வைரசில் உள்ள ஸ்பைக் புரோட்டின் மிக முக்கியமானது. எனவே, அதை தடுப்பூசியில் உள்ளடக்கி போடுவது போதிய பாதுகாப்பு அளித்தது.

பக்க விளைவு கொண்ட தடுப்பூசி
ஆனால், பெரியம்மை மற்றும் குரங்கு அம்மை நோயை பொறுத்தவரை ஒட்டுமொத்த வைரசிற்கு எதிராகவும் பக்க விளைவுகளை கொண்ட தடுப்பூசியை நாம் பயன்படுத்துகிறோம். எனவே பாதுகாப்பான தடுப்பூசிகள் என்பது கொரோனா வைரஸ் தடுப்பூசியை விட அதிகமாக இருக்க வேண்டும். எனவே இந்த தடுப்பூசிகளின் ஆபத்து மற்றும் பலன்களை சமநிலைப்படுத்தாமல் கண்மூடித்தனமாக இந்த தடுப்பூசிகளை நாம் போட முடியாது. இது எல்லாவற்றிற்கும் மேலாக நல்ல விஷயம் என்னவென்றால் குரங்கு நோய் அரிதானது என்பதே ஆகும். தானாகவே குணம் அடைந்து விடும் என்பதால் பெரும்பாலனோருக்கு தடுப்பூசி போட வேண்டிய அவசியம் இருக்காது.












Click it and Unblock the Notifications