மகாராஷ்டிராவில் 52 வருடங்களில் இல்லாத வெற்றி.. சரித்திரம் படைத்த பாஜக.. காங்கிரஸ் படுதோல்வி
மும்பை: மகாராஷ்டிராவில் பாஜக, ஷிண்டேவின் சிவசேனா, அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அடங்கிய ஆளும் 'மகாயுதி' கூட்டணி ஒட்டுமொத்தமாக 235 வெற்றி மற்றும் முன்னிலை வகிக்கிறது. இதில் பாஜக மட்டுமே 133 (100 வெற்றி +33 முன்னிலை) இடங்களில் வெற்றி மற்றும் முன்னிலை வகிக்கிறது. இந்த தேர்தலில் பாஜக கூட்டணி பெறும் வெற்றி என்பது 1972க்கு பிறகு நடைபெறும் இமலாய வெற்றியாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் எந்த கட்சியும், எந்த கூட்டணியும் கடந்த 52 வருடங்களில் இப்படி ஒரு வெற்றி பெறவில்லை..
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 2019ம் ஆண்டு சட்டசபை தேர்தல் முடிந்து ஆட்சியமைத்த போது தொடங்கிய அரசியல் குழப்பம் இன்று வரை நீடிக்கிறது. இந்த அரசியல் குழப்பத்தால் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இரண்டாக உடைந்துள்ளன. ஒரு தரப்பு காங்கிரஸ் கட்சியையும், ஒரு தரப்பு பாஜகவையும் ஆதரிக்கின்றன.

இந்நிலையில் 288 தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிரா சட்டசபையின் பதவி காலம் வரும் நவம்பர் 26-ந் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து மகாராஷ்டிராவில் நவம்பர் 20-ந் தேதி ) சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதில் பா.ஜனதா, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அடங்கிய ஆளும் 'மகாயுதி' கூட்டணியும், காங்கிரஸ், உத்தவ் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் (எஸ்.பி.) ஆகிய எதிர்க்கட்சிகள் அடங்கிய 'மகாவிகாஸ் அகாடி' கூட்டணியும் தேர்தலில் களம் இறங்கின. அதேநேரம் பகுஜன் சமாஜ் கட்சி, பகுஜன் விகாஸ் அகாடி, வஞ்சித் பகுஜன் அகாடி, முஸ்லிம் மஜ்லீஸ் உள்ளிட்ட சிறிய கட்சிகளும் போட்டியிட்டன. எனினும் காங்கிரஸ் மற்றும் பாஜக அணிகளுக்கு இடையில் தான் கடும் போட்டி நிலவியது
மகாராஷ்டிராவில் எப்படியும் ஆட்சியை கைப்பற்றும் முனைப்பில், பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் மற்றும் பா.ஜனதா மாநில முதல்வர்கள் கூட்டணி தலைவர்கள் என பலர் மாநிலத்தில் பிரசாரத்தை மேற்கொண்டனர். மறுபக்கம் ஆட்சியை கைப்பற்றும் நோக்கில், எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா காந்தி, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, உத்தவ் தாக்கரே, சரத்பவார் என முக்கிய தலைவர்களும் வாக்கு சேகரித்தனர்.
இதனிடையே மொத்தமுள்ள 288 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. மாநில தேர்தல் களத்தில் மொத்தம் 4 ஆயிரத்து 131 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தேர்தலில் 66.05 சதவீத வாக்குகள் பதிவாகின. பின்னர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு, வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.
இந்நிலையில் மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகின. அந்த கணிப்புகள் அப்படியே இந்த முறை இருந்தது. பரபரப்பான சூழ்நிலையில் இன்று காலை ஓட்டு எண்ணிக்கை நடந்தது. ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு ஓட்டு எண்ணிக்கை மையம் என்ற அடிப்படையில் 288 மையங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் வாக்குகள் காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். அந்த வகையில், தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் ஆரம்பம் முதலே பாஜக கூட்டணி முன்னிலை வகித்து வந்தது,.
இரவு நிலவரப்படி மொத்தம் உள்ள 288 தொகுதிகளிலும் முன்னிலை நிலவரம் வெளிவந்துள்ளது. இதில் பாஜக கூட்டணி 234 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 50 இடங்களில் வெற்றி மற்றும் முன்னிலையில் உள்ளன. இதில் பாஜக கூட்டணியை பொறுத்தவரை பாஜக 133 (100 இடங்களில் வெற்றி +33 இடங்களில் முனனிலை) இடங்களிலும், அஜித் பவாரின் என்சிபி 41 இடங்களிலும், ஷிண்டேவின் சிவசேனா 57 இடங்களிலும், ஜேஎஸ்எஸ் 2 இடங்களிலும், ஆர்ஒய்எஸ்பி ஒரு இடத்திலும்,ஆர்எஸ்விஏ கட்சி ஒரு இடத்திலும் வெற்றி மற்றும் முன்னிலை வகிக்கின்றன.
காங்கிரஸ் கூட்டணியை பொறுத்தவரை காங்கிரஸ் 15 இடங்களிலும், சரத்பவாரின் என்சிபி 10 இடங்களிலும், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா 20 இடங்களிலும், எஸ்பி கட்சி 2 இடத்திலும் , சிபிஐஎம் 1 இடத்திலும், பிடபிள்யூபிஐ கட்சி ஒரு இடத்திலும் வெற்றி மற்றும் முன்னிலையில் உள்ளன. இதர கட்சிகள் 4 இடங்களில் வெற்றி மற்றும் முன்னிலையில் உள்ளன. கடந்த முறையைவிட இந்த முறை நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு முன்னிலை பாஜக வென்றுள்ளது. தேவேந்திர பட்னாவிஸ் இந்த முறை பாஜக சார்பில் முதல்வராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 1972க்குப் பிறகு மகாராஷ்டிராவில் எந்தக் கட்சிக்கும்/கூட்டணிக்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக இந்த வெற்றி பார்க்கப்படுகிறது. கடைசியாக 1972ல் காங்கிரஸ் 56.36% வாக்குகளுடன் 222 இடங்களை வென்றது.
1972 ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநில சட்டமன்றத் தேர்தல் மார்ச் 1972 இல் நடந்தது. இதில் காங்கிரஸ் கட்சி நான்காவது முறையாக வென்றது . மொத்தம் 270 தொகுதிகளில் போட்டியிட்டது. அதில் 222 இடங்களில் வென்றது. வசந்த்ராவ் நாயக் மீண்டும் முதல்வராக பதவியேற்றார். அப்போது பாஜகவின் முந்தைய இயக்கமான பாரதிய ஜனசங்கம் 7 இடங்களில் மட்டுமே வென்றது. இப்போது 2024 தேர்தலில் பாஜக 133 இடங்களில் வெற்றி பெற்றும் முன்னிலை வகிக்கிறது. இப்படி ஒரு வெற்றியை பாஜக இதுவரை மகாராஷ்டிராவில் பெற்றதே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications