"நீ உடனே பின்னாடி போ.." துப்பாக்கி சூடு நடந்தபோது சரியான நேரத்தில் டைகர் ஷெராப் செய்த அந்த ஒரு செயல்
மும்பை: நடிகர் டைகர் ஷெராஃப் சென்ற கார் மீது நேற்று துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட நிலையில், இது தொடர்பாக சில கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது துப்பாக்கி சூட்டிற்கு பிறகு காயமடைந்த தனது டிரைவரை உடனடியாக பின் இருக்கைக்கு அனுப்பிய, டைகர் ஷெராஃப் தானே காரை ஓட்டி சென்றுள்ளார். இது தொடர்பான புதிய வீடியோ இப்போது வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் ஜூஹு பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடிகர் டைகர் ஷெராஃப் சென்ற கார் மீது துப்பாக்கி சூடு நடந்தது. கால்பந்து விளையாடிவிட்டு டைகர் ஷெராஃப் காரில் புறப்பட்டபோது, அவரது காரை நோக்கி வந்த சிலர் நான்கு முறை துப்பாக்கியால் சுட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தாக்குதலில் டைகர் ஷெராஃப் காயமின்றி தப்பினார். ஆனால், அவரது டிரைவர் காயமடைந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

டிரைவரான டைகர் ஷெராப்
இதற்கிடையே துப்பாக்கிச்சூடு நடந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இப்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அதாவது துப்பாக்கி சூட்டிற்கு முன்பு டைகர் ஷெராப் முன்புறம் டிரைவகுக்கு அருகே அமர்ந்துள்ளார். துப்பாக்கி சூட்டில் டிரைவர் காயமடைந்த நிலையில், சற்றும் தாமதிக்காமல் உடனடியாக டிரைவரை பின் இருக்கைக்கு போக சொன்ன டைகர் ஷெராப் அவரே காரை ஓட்ட ஆரம்பித்தார். பதற்றமான அந்த பகுதியில் இருந்து முதலில் வெளியேறினார்.
டிரைவருக்கு காயமடைந்ததால் அவரே இதுபோல காரை ஓட்ட ஆரம்பித்திருக்கிறார். காரை சுற்றிலும் சாலையிலும் ரத்தம் இருக்கும் வீடியோவும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. டைகர் ஷெரீப் வெளியே வந்தபோது அவரை பார்க்க சில ரசிகர்கள் காத்திருந்த நிலையில், அந்த நேரத்தை பயன்படுத்தி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.
பதற்றம்
சல்மா ஷேக் என்ற பெண் தான் இந்த வீடியோவை பதிவு செய்திருக்கிறார். "டைகர் மீது துப்பாக்கி சூடு நடந்தியுள்ளனர்" என அவர் கத்துவது தெளிவாக கேட்கிறது. டைகருக்கு உதவும்படி அந்த பெண் கத்துவது என அனைத்து குழப்பங்களும் வீடியோவில் பதிவாகி இருக்கிறது.
லாரன்ஸ் பிஷ்னோய்
இதற்கிடையே இந்த தாக்குதலுக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை சேர்ந்தவர்கள் பொறுப்பேற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் சல்மான் கானுடன் டைகர் ஷெராப் நெருக்கமாக இருப்பதாகவும் இதன் காரணமாகவே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக பிஷ்னோய் கும்பல் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல் தொடர்பாக மும்பை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த துப்பாக்கி சூட்டை தொடர்ந்து டைகர் ஷெராப்பை மகாராஷ்டிர துணை முதல்வர் ஷிண்டே நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். துப்பாக்கி குண்டு பவுடர் காரணமாக டைகர் ஷெராப்பிற்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த ஷிண்டே, இதற்கு காரணமானவர்கள் மீது மிக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
பின்னணி
கடந்த சில ஆண்டுகளாகவே பிஷ்னோய் கும்பல் சல்மான் கானுக்கு நேரடியாக கொலை மிரட்டல்களை விடுத்து வருகிறது. மேலும், அவருக்கு நெருக்கமானவர்களையும் கொல் முயல்கிறது. இவை எல்லாவர்றுக்கும் 1998ல் நடந்த ஒரு சம்பவம் தான் காரணம். அப்போது ஷூட்டிங் சென்ற சல்மான் கான் அரிய வகை கலைமானை வேட்டையாடியதாக குற்றஞ்சாட்டப்பட்டது. நீதிமன்ற வழக்கில் சல்மான் கான் வேட்டையாடவில்லை என தீர்ப்பு வந்தது. இருப்பினும், கலைமானை பிஷ்னோய் சமூகத்தினர் கடவுளுக்கு இணையாக கருதுகிறார்கள். சல்மான் குற்றம் செய்ததாக கூறி, அவருக்கு இந்த கும்பல் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகிறது.


Click it and Unblock the Notifications
