"56இல் வெறும் 13 தான்!" கைவிட்ட சொந்த கட்சி எம்எல்ஏக்கள்! குழம்பி நிற்கும் தாக்கரே! அடுத்து என்ன
மும்பை: மகாராஷ்டிராவில் அரசியல் குழப்பம் தொடரும் நிலையில், தாக்கரே ஆட்சியைக் கவிழும் ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் இரு நாட்களுக்கு முன்பு தொடங்கிய அரசியல் குழப்பம் நிமிடத்திற்கு நிமிடம் பல்வேறு திருப்பங்களைச் சந்தித்து வருகிறது.
இந்த அரசியல் குழப்பத்தால் அங்கு நடைபெறும் மகா விகாஸ் அரசே கவிழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அடுத்தடுத்து ஷிண்டே பக்கம் சாயும் எம்எல்ஏக்கள்.. அதிர்ச்சியில் தாக்கரே.. பரபரக்கும் மகாராஷ்டிரா

ஷிண்டே
இந்த அத்தனை அரசியலில் குழப்பங்களைத் தொடங்கி வைத்தவர் ஏக்நாத் ஷிண்டே. சிவசேனாவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான அவர், இரு நாட்களுக்கு முன்பு திடீரென தலைமறைவானார். முதலில் அவருடன் 15 முதல் 20 எம்எல்ஏக்கள் அவருக்கு ஆதரவாக இருப்பதாகச் சொல்லப்பட்டது. இருப்பினும், தன்னிடம் 46 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாக ஷிண்டே தெரிவித்தார்.

சிக்கல்
முதலில் தங்கள் எம்எல்ஏக்கள் கண்டிப்பாகத் திரும்ப வருவார்கள் என்றே சிவசேனா தரப்பு கூறியது. இதற்கிடையே நேற்று மதியம் அமைச்சரவை கூட்டமும் நடைபெற்றது. அதில் சுமார் 9 அமைச்சர்கள் வரை பங்கேற்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதன் காரணமாக மூன்று ஆண்டுகளாகச் சிக்கல் இல்லாமல் சென்று கொண்டு இருந்த மகாராஷ்டிரா மகா விகாஸ் கூட்டணி அரசு கவிழும் சூழல் உருவானது.

தாக்கரே
இதனால் கடும் அதிருப்தி அடைந்த மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே நேற்றே தனது அதிருப்தியை வெளிப்படையாகக் காட்டினார். ராஜினாமா செய்யத் தயாராக உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், ராஜினாமா கடிதம் தயாராக உள்ளதாகவும் அதிருப்தியாளர்களே வந்து அந்தக் கடித்ததை ஆளுநரிடம் கொடுத்துவிடலாம் என்றும் கூறினார். மேலும், அத்துடன் நிற்காமல் முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லத்தையும் அவர் காலி செய்தார்.

வெறும் 12 பேர்
இதுவரை ஷிண்டேவுக்கு ஆதரவாக எத்தனை எம்எல்ஏக்கல் உள்ளனர் என்று தெரியாமல் இருந்த நிலையில், இப்போது அது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இன்று மதியம் சிவசேனா எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் சிவசேனா எம்எல்ஏக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இருப்பினும், அந்த கூட்டத்தில் வெறும் 12 பேர் மட்டுமே கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. உத்தவ் தாக்கரே மகன் ஆதித்யா தாக்கரே வெளியூரில் உள்ளதால், அவர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. அவரை சேர்த்தாலும் மொத்தம் 13 பேர் ஆதரவு மட்டுமே அவர்களுக்கு உள்ளது.

அதிருப்தி எம்எல்ஏக்கள்
இதனிடையே ஷிண்டே தனக்கு எத்தனை பேரின் ஆதரவு உள்ளது என்பதைக் காட்டி உள்ளார். அதிருப்தி எம்எல்ஏக்களும் முதல் முறையாக கவுகாத்தியில் உள்ள ஹோட்டலில் ஒன்றாகக் காணப்பட்டனர். ஒன்று கூடினர். மொத்தம் 42 அதிருப்தி எம்எல்ஏக்கள் இருந்தனர். அங்குக் கூடி இருந்த எம்எல்ஏக்கள் 'சிவசேனா ஜிந்தாபாத்' மற்றும் 'பாலாசாகேப் தாக்கரே கி ஜே' என்ற முழக்கங்களை எழுப்பினர்.