செப்டம்பர் 13ல் மிஸ்ஸான திட்டம்.. மன்னிப்பு கேட்ட விஜய்.. பிரச்சார அட்டவணையில் நடக்கும் மாற்றம்?
நாகை: செப்டம்பர் 13ஆம் தேதி பெரம்பலூர் மாவட்ட மக்களை சந்திக்க முடியாததற்கு தவெக தலைவர் விஜய் மன்னிப்பு கேட்டுள்ளார். பெரம்பலூர் செல்ல முடியாததற்கு பல்வேறு காரணங்கள் இருப்பதாக கூறிய விஜய், விரைவில் பெரம்பலூர் மக்களை நிச்சயமாக சந்திப்பேன் என்றும் உறுதி கொடுத்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் செப்டம்பர் 13 முதல் மக்கள் சந்திப்பு பயணத்தை மேற்கொண்டு வருகிறார். ஒவ்வொரு சனிக்கிழமையும் 2 முதல் 3 மாவட்டங்களில் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருக்கிறார். அதன்படி செப்டம்பர் 13ஆம் தேதி திருச்சி, அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டிருந்தார்.

ஆனால் திருச்சியில் பிரச்சாரம் மேற்கொள்ளவே சுமார் 4 மணி நேரத்திற்கும் மேல் தாமதமான நிலையில், இரவு நேரத்தில் அரியலூரில் மட்டும் பேசிவிட்டு சென்றார். இதனால் பெரம்பலூரில் விஜய் வருகைக்காக காத்திருந்த தவெக தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்த நிலையில் இன்று நாகையில் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது விஜய் பேசுகையில், நமது பிரச்சார பயணத்தை பார்த்து சனிக்கிழமை மட்டும் ஏன் என்று கேட்கிறார்கள். வார இறுதி நாட்களில் மக்களுக்கு எந்தவித இடையூறும் செய்யாமல் ஓய்வு நாட்களில் மக்களை சந்திக்க வேண்டும் என திட்டமிட்டு தான் சனிக்கிழமையில் மட்டும் பிரச்சார பயணத் திட்டத்தை வகுத்தோம். மேலும் சிலருக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என்பதற்காகவும் சனிக்கிழமையை தேர்ந்தெடுத்தோம்.
கடந்த வாரம் திருச்சி மற்றும் அரியலூர் மாவட்ட மக்களை சென்று சந்தித்தேன். அப்போது பெரம்பலூருக்கும் சென்று சந்திக்க வேண்டியது. சில விதிமுறைகள் மற்றும் பிரச்சார வாகன சிக்கல், நேரம் உள்ளிட்டவையால் பெரம்பலூர் செல்ல முடியவில்லை. இந்த நேரத்தில் பெரம்பலூர் பகுதி மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
சீக்கிரமாகவே உங்களை தேடி நான் நிச்சயமாக வருவேன் என்று தெரிவித்தார். தொடர்ந்து, மக்களை சந்திப்பதற்கு எத்தனை கட்டுப்பாடுகள்.. தவெக சார்பாக ஒரு இடத்தை தேர்வு செய்து கொடுத்தால், அவ்வளவு விதிகள்.. நான் பேசுவதே 3 நிமிடங்கள் தான்.. தவெக பிரச்சாரத்திற்கு திட்டமிட்டு இடையூறு செய்யப்படுகிறது. காவல்துறை மூலம் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது.
கடந்த முறை திருச்சியில் பிரச்சாரம் மேற்கொண்டபோது ஸ்பீக்கர் வயரை அறுத்துவிட்டார்கள். ஆர்எஸ்எஸ் தலைவரோ? பிரதமரோ பிரச்சாரத்திற்கு வந்தால் இப்படித்தான் செய்வீர்களா? முதல்வர் அவர்களே... மிரட்டிப் பார்க்கிறீங்களா? இந்த விஜய் பயப்படமாட்டான். நான் தனியாள் அல்ல.. பெரும் மக்கள் சக்தியின் பிரதிநிதி என்றும் தெரிவித்துள்ளார். மேலும், பெரம்பலூர் செல்வதற்கு ஏற்ப பிரச்சார திட்டத்தில் மாற்றம் இருக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications