சேட்டை புடிச்ச பையன் சார் எலான் மஸ்க்! அமெரிக்க அதிபர் தேர்தலில் கலகல.. ட்ரம்ப் கொடுத்த வாக்குறுதி.!
நியூயார்க் : அமெரிக்க அதிபர் தேர்தலில் தான் வெற்றி பெற்ற உடனேயே டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனர் எலான் மஸ்க்கை கவர்மெண்ட் எஃபீசியன்ஸி கமிஷனின் தலைவராக நியமிப்பேன் என டொனால்ட் டிரம்ப் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் தான் அந்த கமிஷனின் தலைவராக இருப்பது போல போட்டோவை பகிர்ந்திருக்கிறார் எலான் மஸ்க். மேலும் அதற்காக தனக்கு ஊதியம் உள்ளிட்ட எதுவுமே தேவையில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
ஒரு நாட்டின் தேர்தல் என்றாலும் உலக அளவில் பெரிய பரபரப்பையும் பாதிப்பையும் ஏற்படுத்தக் கூடியது அமெரிக்க அதிபர் தேர்தல். பல நாடுகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் அதிகாரம் செலுத்தும் நபராக அமெரிக்க அதிபர்கள் இருந்திருக்கின்றனர்.

இந்த நிலையில் தற்போதைய அதிபர் ஜோ பைடனின் பதவிக்காலம் நிறைவடைய இருக்கும் நிலையில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நவம்பர் மாதம் 5ஆம் தேதி நடக்க இருக்கிறது.
தற்போது ஆளும் ஜோ பைடன் வயது முதிர்வு உள்ளிட்ட காரணங்கள் காரணமாக தேர்தலில் இருந்து விலகிக் கொண்டு நிலையில், ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் தற்போது துணை அதிபராக இருக்கும் இந்திய வம்சா வழியைச் சேர்ந்த கமலஹாரிஸ் களமிறங்குகிறார். எதிர்க்கட்சியான குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபராக டொனால்ட் ட்ரம்ப் இறங்கி இருக்கிறார்.
ஏற்கனவே கமல ஹாரிஸ் சிக்காகோவில் நடந்த மாநாட்டில் முறைப்படி அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து அவருக்கு கட்சியில் ஆதரவு அதிகரித்து வரும் நிலையில் அவர் களம் இறங்குவது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் அமெரிக்கா அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸே முன்னிலையில் இருப்பதாக கருத்துக்கணிப்புகள் வெளியாகி இருக்கிறது, வாஷிங்டன் போஸ்ட், ஏபிசி நியூஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் புதிய கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டு இருக்கின்றன.
அதில் கமல ஹாரிசுக்கு 49 சதவீத ஆதரவும் டொனால்ட் டிரம்புக்கு 45 சதவீத ஆதரவும் இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட போது அவருக்கு அது அனுதாப அலையாக மாறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கமல ஹாரிஸ் மிகக் கடுமையாக போட்டியளிக்கிறார். சொல்லப் போனால் முன்னணியில் இருக்கிறார் என்று கூறலாம்.
அதே நேரத்தில் டொனால்ட் ட்ரம்புக்கு ஆதரவாக களத்தில் குதித்திருக்கிறார் ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவரான எலான் மஸ்க். மேலும் எக்ஸ் வலைதளத்தை வாங்கி இருக்கும் அவர் தொடர்ந்து ட்ரம்புக்கு ஆதரவாக அதில் பதிவிட்டு வருகிறார். மேலும் டொனால்டு டிரம்புக்கு பெரிய அளவில் நிதி உதவி அளித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் வெற்றி பெற்றால் நிச்சயம் அமைச்சர் பதவியோ அல்லது வெள்ளை மாளிகை ஆலோசகர் பதவியையோ எலான் மஸ்குக்கு வழங்குவேன் என ட்ரம்ப் கூறியிருந்தார்.
அதற்கு எலான் மஸ்க்கும் ஒப்புதல் அளித்திருந்தார். இதற்கிடையே அமெரிக்க அதிபர் தேர்தலில் தான் வெற்றி பெற்றதும் கவர்மெண்ட் எபிசியன்சி கமிஷன் என்ற ஒரு புதிய ஆணையத்தை அமைத்து அதற்கு தலைவராக எலான் மஸ்கை நியமிப்பதாகவும் இதற்கு அவர் ஒப்புதல் அளித்திருப்பதாகவும் டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார். மேலும் கடந்த ஆண்டு பல மோசடிகள் மற்றும் முறையற்ற பரிவர்த்தனை காரணமாக அமெரிக்காவில் நேர்மையாக வரி செலுத்தும் நபர்கள் பாதிக்கப்பட்டதாகவும், பல நூறு மில்லியன் டாலர்கள் தேவையின்றி அவர்கள் வரி செலுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டதாக கூறிய ட்ரம்ப், தான் பதவிக்கு வந்ததும் எலான் மஸ்க்கை அந்த பொறுப்புக்கு நியமித்து அரசை வழிநடத்த அழைப்பேன் என பேசினார்.

இந்த நிலையில் டொனால்ட் டிரம்ப்பின் அழைப்பை தான் ஏற்பதாகவும் அந்த பதவிக்கு தான் வந்தாலும் தனக்கு ஊதியம் உள்ளிட்ட எதுவுமே தேவையில்லை எனக் கூறியிருக்கிறார். இதற்கிடையே கவர்மெண்ட் எஃபீசியன்சி கமிஷன்-ன் தலைவராக தான் இருப்பது போன்ற ஒரு ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் புகைப்படத்தை எலான் மாஸ்க் பதிவிட்டு இருக்கிறார். அதே நேரத்தில் அமெரிக்க அதிபர் தேர்தலில் எலான் மஸ்கின் தலையீடு அதிகரித்து இருப்பதாகவும் தனது வலைதளம் மூலம் சட்ட விரோதமாக டொனால்ட் ட்ரம்புக்கு உதவுவதாக குற்றச்சாட்டும் எழுந்திருக்கிறது.












Click it and Unblock the Notifications