ஐயோ, இந்தியாவா.. அலறியடித்து.. வீட்டை விட்டே ஓடிய சிறுமி.. காரணம் கேட்டீங்கன்னா ஆடிப்போயிடுவீங்க
சிறுமி காணாமல் போய் மூன்று வாரங்கள் ஆன பின்னரும் அவர் குறித்த தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை.
நியூயார்க்: அமெரிக்காவில் டெக் ஊழியர்களுக்கான பணி நீக்கம் தொடரும் நிலையில் தனது தந்தைக்கும் வேலை போய்விட்டால் குடும்பத்துடன் அமெரிக்காவிலிருந்து வெளியேறி இந்தியா செல்லக்கூடும் என்கிற அச்சத்தில் 14 வயது பள்ளி சிறுமி ஒருவர் வீட்டைவிட்டு தப்பியோடியுள்ளார்.
உலகம் முழுவதும் மிகப்பெரும் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை வேலையை விட்டு அனுப்பியுள்ளனர். அமெரிக்காவில் மட்டும் சுமார் 2 லட்சம் டெக் தொழிலாளர்கள் பணியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இதில் இந்தியாவை சேர்ந்தவர்கள் மட்டும் 30-40% பேர் இருப்பார்கள். வழக்கமாக ஏதாவது ஒரு நிறுவனத்தில் பணி நீக்கம் நடைபெறும். வேலையை இழந்தவர்கள் மற்ற நிறுவனத்தில் சென்று சேர்ந்துகொள்வார்கள்.
ஆனால் இந்தமுறை மெட்டா தொடங்கி கூகுள், டிவிட்டர், ஐபிஎம், மைக்ரோசாஃப்ட் போன்ற நிறுவனங்கள் வரை தங்கள் ஊழியர்களை வெளியேற்றியுள்ளன. யாஹு உள்ளிட்ட நிறுவனத்திலிருந்து ஊழியர்களை வெளியேற்றப்படலாம் என்று சொல்லப்படுகிறது. ஆக உலகம் முழுவதும் லே ஆஃப் அச்சம் சூழ்ந்திருந்தாலும், அமெரிக்காவில் உள்ள இந்தியர்களுக்கு இது அதீத கவலையை ஏற்படுத்தியுள்ளது.

விசா
ஏனெனில், அமெரிக்காவில் உள்ள இந்தியர்களுக்கு தற்காலிக விசாதான் வழங்கப்பட்டிருக்கிறது இந்த விசாவை கொண்டு வேலை செய்யும் வரை அமெரிக்காவில் இருக்க முடியும். வேலை போய்விட்டால் 6 மாதம் வரை அவகாசம் வழங்கப்படும். இதற்குள் வேலை கிடைக்கவில்லையெனில் அவர்கள் அமெரிக்காவில் தங்க முடியாது. மீறி தங்கினால் சட்ட சிக்கலை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். இப்படி இருக்கையில் அமெரிக்காவின் ஆர்கன்சாஸ் பகுதியில் வசித்து வரும் இந்தியாவை சேர்ந்த குடும்பத்தினரும் வேலை இழப்பை எதிர்கொண்டுள்ளனர். ஒருசில நாட்களில் வேலை போய்விடும் என்று சொல்லப்படுகிறது.

மாணவி மாயம்
இந்தியாவை சேர்ந்த பவன் ராய் மருபள்ளி என்பவர் அமெரிக்காவின் டெக் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவருடைய நிறுவனத்தில் லே ஆஃப் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் இவரது 14 வயது மகள் தன்வி மாருபள்ளி கடந்த 17ம் தேதியிலிருந்து காணாமல் போயுள்ளார். இது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவி காணாமல் போய் மூன்று வாரம் ஆன நிலையில காவல்துறையினர் இது குறித்து விளக்கமளித்துள்ளனர். அதாவது தந்தைக்கு வேலை போய்விட்டால் அமெரிக்காவிலிருந்து வெளியேறிவிடுவோம் என்கிற அச்சத்தில் மாணவி தன்வி மாருபல்லி வீட்டைவிட்டு வெளியேறி இருக்கலாம் என்று கூறியுள்ளனர்.

உரையாடல்
இந்த சம்பவம் குறித்து தந்தை பவன் ராய் கூறுகையில், "எனது மனைவிக்கு வேலை போய்விட்டது. இனி நான் மட்டுமே மீதம் இருக்கிறேன். எனவே எனக்கு எப்போது வேலை போகும் என்று தெரியாது என்பதால் மனைவியையும் தான்வியையும் முதலில் இந்தியா போய்விடுங்கள் என்று சொல்லியிருந்தேன். ஆனால் தான்வி இந்தியாவுக்கு செல்லும் திட்டத்தை முற்றிலுமாக மறுத்தாள். அவளுக்கு அமெரிக்கா பிடித்திருப்பதாகவும் எனவே அமெரிக்காவிலேயே இருந்துவிடுவதாகவும் கூறினார். அவளை எவ்வளவு சமாதானப்படுத்த முயன்றாலும் பிடிவாதத்தில் உறுதியாக நின்றாள்" என தந்தை கூறியுள்ளார்.

பாதிப்பு
சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், "ஒரு சிறுமி 3 வாரம் வரை எங்கு இருக்கிறார் என்பதே தெரியாமல் இருப்பது என்பது மிகவும் அரிதான விஷயம். அவளை நாங்கள் விரைவில் கண்டுபிடித்துவிடுவோம்" என நம்பிக்கை தெரிவித்துள்ளனர். குழந்தைகள் பிறந்து வளர்ந்த சூழலை விட்டு வெளியேற்றப்படுவது என்பது மனதளவில் கடுமையான பாதிப்புகளை அவர்களுக்கு ஏற்படுத்தும் என்று உளவியல் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications