ரஷ்யா மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.. செய்தியாளரிடம் 'இந்தியா' என்று டிரம்ப் சொன்ன ஷாக் பதில்
நியூயார்க்: அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் செய்தியாளர்களிடம் பேசும் போது, ரஷ்யாவிடம் எண்ணெய்யை வாங்கியதற்காக இந்தியா மீது இரண்டாம் நிலை பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளதாகவும், மேலும் இரண்டாம் கட்ட அல்லது மூன்றாம் கட்டத் தடைகளை இன்னும் விதிக்கவில்லை" என்றும் பதில் அளித்தார். அப்போது போலந்து செய்தியாளர், இந்தியாவின் மீது நடவடிக்கை எடுத்த நீங்கள் ரஷ்யா மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேட்டார். இதனால் கோபம் அடைந்த டிரம்ப் என்ன கூறினார் என்பதை பார்ப்போம்.
அமெரிக் அதிபர் டொனால்ட் டிரம்ப், கடந்த ஆகஸ்ட் 27 முதல், இந்தியாவிற்கு 25% பரஸ்பர வரிகளையும், ரஷ்ய எண்ணெய் கொள்முதலுக்காக கூடுதலாக 25% வரியையும் விதித்து, மொத்த வரிகளை 50% ஆக உயர்த்தினார். இந்த 50 சதவீத வரிவிதிப்பு கடந்த ஆகஸ்ட் 27ம் தேதி முதல் உடனுக்குடன் அமலுக்கு வந்தது. இந்த தடையால் இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்வது பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.

ஏற்றுமதி பாதிப்பு
கோவை, திருப்பூர், தூத்துக்குடி, வேலூர், நாமக்கல் உள்பட தமிழகத்தின் பல்வேறு நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் விசாகப்பட்டினம், மும்பை, சூரத், கொச்சி, கொல்கத்தா, அஹமதாபாத் உள்பட இந்தியாவின் பல்வேறு நகரங்களில் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வரி உயர்வு காரணமாக உற்பத்தி குறைந்து, பலர் வேலையிழந்துள்ளனர். தொழில் முடக்கத்தால் தொழில் முனைவோரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
நரேந்திர மோடி பதில்
இந்நிலையில் அமெரிக்கா விதித்த வரிகளை "நியாயமற்றது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று இந்தியா கூறியிருந்தது. நம் நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி, "விவசாயிகள், கால்நடை வளர்ப்போர், சிறு தொழில்களின் நலன்களில் சமரசம் செய்ய முடியாது. நம் மீதான அழுத்தம் அதிகரிக்கலாம், ஆனால் அதை நாம் தாங்கிக்கொள்வோம்," என்று உறுதிப்பட தெரிவித்தார்.
இந்தியா பதிலடி
இந்தியா, ஒரு பெரிய பொருளாதார நாடாக, தனது தேசிய நலன்கள் மற்றும் பொருளாதாரப் பாதுகாப்பைக் காக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று தெரிவித்திருந்தது. இந்தியா தற்போது அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதேநேரம் மாற்று ஏற்றுமதி வாய்ப்புகளையும் உலகின் பல்வேறு நாடுகளில் இந்தியா தேடி வருகிறது. ஏற்றுமதியாளர்களை பாதுகாக்க அரசு சிறப்பு திட்டங்களை தற்போது வடிவமைத்து வருகிறது. அனேகமாக அந்த திட்டம் விரைவில் அறிவிக்கப்படவும் வாய்ப்பு உள்ளது.
ரஷ்யா மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்
இது ஒருபுறம் எனில், அமெரிக்க அதிபரின் ஓவல் அலுவலகத்தில் அதிபர் டிரம்ப், போலந்து அதிபர் கரோல் நாவ்ரோக்கியை சந்தித்தார். இரு நாடுகளுக்கும் இடையே பரஸ்பரம் ஒத்துழைப்பு, வர்த்தகம் மற்றும் ஒப்பந்தங்கள் குறித்து பேசினார்கள். பின்னர் டிரம்பும், போலந்து அதிபர் கரோல் நாவ்ரோக்கியும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது ஒரு போலந்து செய்தியாளர், "நீங்கள் ரஷ்ய அதிபர் புதினின் மீது விரக்தியையும் ஏமாற்றத்தையும் வெளிப்படுத்தியிருந்தாலும், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை" என்று கேட்டார்..
கோபம் அடைந்த டிரம்ப்
இதை கேட்டு கோபம் அடைந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் , "எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று உங்களுக்கு எப்படித் தெரியும்? சீனாவுக்கு அடுத்தபடியாக ரஷ்யாவிடம் மிகப்பெரிய கச்சா எண்ணெய் வாங்கும் நாடான இந்தியாவின் மீது இரண்டாம் நிலை பொருளாதாரத் தடைகளை விதித்தது, நடவடிக்கை இல்லையா? அது ரஷ்யாவுக்கு பல நூறு பில்லியன் டாலர்களை இழப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதை நீங்கள் நடவடிக்கையே இல்லை என்று சொல்வீர்களா? நான் இரண்டாம் கட்ட அல்லது மூன்றாம் கட்டத் தடைகளை இன்னும் விதிக்கவில்லை. நடவடிக்கை இல்லை என்று நீங்கள் சொன்னால், உங்களுக்கு ஒரு புதிய வேலை தேவை என்று நான் நினைக்கிறேன்," என்று ட்ரம்ப் அந்த போலந்து செய்தியாளரிடம் ஆவேசமாகப் பதிலளித்தார்.
இந்தியாவிற்கு மிகப்பெரிய பிரச்சனை வரும்
மேலும் இரண்டு வாரங்களுக்கு முன்பு, "இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கினால், இந்தியாவுக்கு மிகப்பெரிய பிரச்சனைகள் வரும் என்றேன். அதுதான் தற்போது நடக்கிறது," என்று ட்ரம்ப் கூறினார். ரஷ்யாவின் அதிபர் புதின் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் ஆகியோர் சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் சீனாவின் ராணுவ அணிவகுப்பில் கலந்துகொண்டது குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். மேலும் ரஷ்யா மீது இரண்டாம் நிலை பொருளாதாரத் தடைகளை விதிப்பது குறித்துப் பரிசீலிக்கிறாரா என்றும் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்த ட்ரம்ப், "நான் ஏற்கனவே இந்தியா மீது அதைச் செய்துவிட்டேன், மேலும் பிற விஷயங்களிலும் அதைச் செய்து வருகிறோம்," என்று மட்டும் கூறினார்.












Click it and Unblock the Notifications