வறுமையான பின்னணி! டிரம்ப்பையே திணறடித்த தமிழர்.. பிரதிநிதிகள் சபையில் மீண்டும் கால் பதிக்கும் "ராஜா"
நியூயார்க்: அமெரிக்காவில் நடக்கும் மிட் டேர்ம் தேர்தலில் இல்லினாய்ஸ் பிரதிநிதிகள் சபையில் தமிழர் ராஜா கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்து வருகிறார். இவரின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் உள்ள இரண்டு அவைகளுக்கான மிட் டேர்ம் தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. கடந்த செவ்வாய்க்கிழமை தேர்தல் நடைபெற்ற நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடந்து முடிவுகள் வெளியாகிக்கொண்டு இருக்கின்றன.
இதில் பிரதிநிதிகள் சபையில் டிரம்பின் குடியரசு கட்சி முன்னிலை பெறுவதற்கான அறிகுறிகள் தெரிய தொடங்கி உள்ளன. செனட் சபையில் பிடனின் ஜனநாயக கட்சி மெஜாரிட்டி பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
அமெரிக்க செனட் சபை உறுப்பினர்கள் மொத்தம் 100 பேர் இருக்கிறார்கள். இவர்களின் பதவிக் காலம் 6 ஆண்டுகள். அதேபோல் அமெரிக்க பிரதிநிதிகளின் சபை உறுப்பினர்கள் 435 பேர் இருக்கிறார்கள். இவர்களின் பதவிக் காலம் 2 ஆண்டுகள்

பிரதிநிதிகள் சபை
இதில் பிரதிநிதிகள் சபை தேர்தல் என்பது மாவட்டங்களில் உள்ள பிரதிநிதிகளுக்கு நடக்கும் தேர்தல் ஆகும். ஒரு மாகாணத்தில் பல்வேறு மாவட்டங்கள் இருக்கும். அதில் ஒரு மாவட்டத்தில்தான் தமிழரான ராஜா கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்து வருகிறார். இவர் பிடனின் ஜனநாயக கட்சியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழரான இவர் டெல்லியில் வளர்ந்து வந்தார். அதன்பின் அமெரிக்காவில் குடிபெயர்ந்து அங்கு பல்வேறு பிஸ்னஸ்களை செய்து வந்தார். கடந்த 15 வருடமாக அரசியலில் ஈடுபாடு காட்டி வரும் அவர் ஜனநாயக கட்சியில் முக்கிய உறுப்பினராக இருக்கிறார்.

தமிழர்
2017ல் நடந்த பிரதிநிதிகள் சபை தேர்தலில் இவர் இல்லினாய்ஸ் 8வது மாவட்டத்தில் ஜனநாயக கட்சி சார்பாக வெற்றிபெற்றார். ஜனநாயக கட்சியில் வளர்ந்து வரும் தலைவராக இவர் கவனிக்கப்படுகிறார். இவரின் குடும்பம் அமெரிக்கா வந்த புதிதில் பொருளாதார ரீதியாக கடுமையாக கஷ்டப்பட்டு உள்ளது. கடும் வறுமையில் இவர்கள் இருந்துள்ளனர். அப்போது உணவிற்கே பிரச்சனை ஏற்பட்டு, அரசின் உணவு வழங்கும் உதவிகளை பெற்று வாழ்ந்து வந்துள்ளனர்.

வறுமையான பின்னணி
அந்த அளவிற்கு வறுமையான பின்னணியில் இருந்து வந்து தற்போது இந்த இடத்தை பிடித்து உள்ளனர். இவரின் அப்பா கிருஷ்ணமூர்த்திக்கு பல்கலைக்கழகம் ஒன்றில் ஆசிரியராக வேலை கிடைத்த பின்புதான் இவர்களின் பொருளாதார நிலை சரியாகி இருக்கிறது. ராஜா கிருஷ்ணமூர்த்தி ஒரு மெக்கானிக்கல் பொறியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின் அரசியல் மீது உள்ள ஆர்வம் காரணமாக சட்டம் படித்தார்.

டிரம்ப்
ஒபாமா ஜனநாயக கட்சியில் எழுச்சி அடைந்ததை பார்த்து, அதன் மூலம் ஈர்க்கப்பட்டு அந்த கட்சியில் தீவிரமாக பணிகளை செய்ய தொடங்கினார். இதன் மூலம் கடந்த 2017 தேர்தலில் அவர் இல்லினாய்ஸ் 8வது மாவட்டத்தில் தேர்தலில் வென்றார். பின்னர் மீண்டும் 2019ல் இவர் அதே மாவட்டத்தில் வென்ற நிலையில், தற்போது மீண்டும் அங்கு முன்னிலை பெற்று உள்ளார். 30 ஆயிரம் வாக்குகள் இவர் முன்னிலை பெற்றுள்ளதால், பெரும்பாலும் இவர் வெற்றிபெறவே அதிக வாய்ப்புகள் உள்ளன.

மோதல்
டிரம்புடன் இவர் கடுமையான கொள்கை முரண்பாடு கொண்டார். டிரம்பின் வெளியுறவுக்கொள்கை மற்றும் குடியேற்ற கொள்கையை கடுமையாக எதிர்த்தார். முக்கியமாக இஸ்லாமிய நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இல்லினாய்ஸில் குடிபெயர வந்த 18 பேரை டிரம்ப் தடுத்து நிறுத்தினார். அப்போது இதற்கு எதிராக கிருஷ்ணமூர்த்தி கடுமையான போராட்டங்களை செய்தார். இவரின் போராட்டம் டிரம்பிற்கு மிகப்பெரிய அழுத்தத்தை கொடுத்தது. மற்ற மாவட்டங்களிலும் பிரநிதிகள் பலர் போராட இது காரணம் ஆனது. அப்போது தேசிய அளவில் அவர் கவனிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.











Click it and Unblock the Notifications