பற்றி எரியும் பிரான்ஸ்.. வன்முறையில் இறங்கிய 5 லட்சம் பேர்.. என்ன தான் பிரச்சனை?
பாரீஸ்: பிரான்ஸில் நடந்து வந்த போராட்டம் தற்போது வன்முறையாக மாறி உள்ளது. நேற்றைய தினம் நாடு முழுவதும் 5 லட்சம் பேர் திரண்டு நடத்திய போராட்டத்தில் அரசு கட்டடங்கள், கடைகள், வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன.பற்றி எரியும் பிரான்ஸின் இந்த பிரச்சனையின் பின்னணி குறித்த திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.

பிரான்ஸ் நாட்டின் அதிபராக இமானுவேல் மேக்ரான் உள்ளார். தற்போது பிரான்ஸில் பெரிய அளவில் வன்முறை வெடித்துள்ளது. கடந்த சில வாரங்களாக நடந்து வந்த போராட்டம் தற்போது கலவரமாகி தீவைப்பு சம்பவங்களுடன் வன்முறையாக மாறி உள்ளது.
இந்த போராட்டம் கடந்த மாத இறுதியில் தொடங்கியது. பிரான்ஸில் உள்ள இடைநிலைபள்ளிகளில்15 வயது முதல் 18 வயது கொண்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லை, அடிப்படை வசதிகள் இல்லை என்று கூறி ஏராளமான மாணவர்கள் போராட்டத்தை தொடங்கினர்.
இந்த போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமானது. இந்த போராட்டத்துக்கு வர்த்தகர்கள் கூட்டமைப்பு உள்பட பல்வேறு அமைப்பினர் ஆதரவு தெரிவித்து வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர். அதுமட்டுமின்றி பிரான்ஸில் விலைவாசி உயர்வு அதிகரித்ததால் வாழ்வாதாரம் பாதிப்பதாக கூறி பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர். இதனால் போராட்டத்தில் பங்கேற்போரின் எண்ணிக்கை லட்சத்தை தாண்டி கிடுகிடுவென அதிகரித்தது.
நேற்றைய தினம் மட்டும் பிரான்ஸ் நாட்டில் மொத்தம் 5 லட்சம் பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக தலைநகர் பாரீசில் மட்டும் 1.10 லட்சம் பேர் போராட்டத்தில் இறங்கியதாக அந்த நாட்டின் உள்துறை அமைச்சர் லாரன்ட் நுனெஸ் கூறியுள்ளார். பாரீஸில் நேற்று போராட்டக்காரர்கள் பேரணி சென்றனர். அதன்பிறகு தான் வன்முறை வெடித்தது. இந்த போராட்டக்காரர்கள் அரசு கட்டடங்கள், வரலாற்று கட்டடங்கள், கடைகள், காவல்துறையின் வாகனங்கள் மீது கல்வீசியதோடு, தீவைத்து எரித்தனர்.
தலைநகர் பாரீஸில் உள்ள வரலாற்று நினைவு சின்னங்கள் சூறையாடப்பட்டு தீவைக்கப்பட்டது. தலைநகரை தாண்டியும் போராட்டம் பரவியது. லில்லிநகரில் உள்ள அரசு கட்டங்கள் அடித்து நொறுக்கப்பட்டு தீவைக்கப்பட்டது. லிமோஜிஸ் நகரின் அடையாளமாக உள்ள 140 ஆண்டுகள் பழமையான டவுன்ஹால் மற்றும் பெல் டவர் உள்ளிட்டவை தீவைத்து எரிக்கப்பட்டது. இதனால் நிலைமை கட்டுக்கடங்காமல் போனது. வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் தடியடி, கண்ணீர் புகைகுண்டு வீசினர். தண்ணீரை பீய்ச்சியடித்தும் போராட்டக்காரர்களை விரட்ட முயன்றனர்.
ஆனால் நிலைமை சரியாகவில்லை. இன்னும் மோசமானது. காவல்துறையினரை நோக்கி போராட்டக்காரர்களின் பார்வை திரும்பியது. பல இடங்களில் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதுமட்டுமின்றி கடைகளுக்கும் நுழைந்தவர்கள் அங்கிருந்த பொருட்களை அள்ளி சென்றனர்.
தற்போது வரை 1,200 பேர் கைது செய்யப்பட்டுள்னர். 150 காவல்துறையினர் காயமடைந்துள்ளனர். நிலைமை இன்னும் கட்டுக்கடங்கவில்லை. இதனால் பிரான்ஸில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இந்த வன்முறைக்கு பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், ''மாவட்ட நிர்வாக அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள், நகர் மன்ற அலுவலகங்களை சூறையாடியவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள். அமைதியான போராட்டங்களில் நுழைந்து குழப்பம் ஏற்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று வார்னிங் செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications
