பீகார்: நேற்று, இன்று, நாளை.. உச்சத்தில் தீண்டாமை கொடுமை! முடிவுக்கு வந்த குப்த பேரரசு
பாட்னா: பீகார் மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. எனவே இம்மாநிலத்தின் வரலாற்றை ஒன் இந்தியா தமிழ் தொகுத்து வழங்கி வருகிறது. தொகுப்பில், இதற்கு முன்னர் குப்தர் காலத்தின் வளர்ச்சி மற்றும் செழிப்பை பார்த்தோம். இன்றைய தொகுப்பில் குப்தர்களின் வீழ்ச்சி குறித்து பார்ப்போம்.
கி.பி. 240ம் ஆண்டு ஸ்ரீகுப்தர் மூலம் உருவான குப்த பேரரசு, கி.பி. 550 வரை நீடித்தது. இந்த காலத்தில் குப்தர்கள் ஏராளமான சிறப்பான விஷயங்களை விட்டு சென்றிருக்கிறார்கள். ஆனால், இதில் சில மோசமான விஷயங்களும் அடங்கும்.

குப்த பேரரசு பெரும்பாலும் வேதங்களின் அடிப்படையில்தான் வழிநடத்தப்பட்டது. குப்த மன்னர்கள் பிராமணர்கள் கிடையாது. அவர்கள் வைசிய குலத்தை சேர்ந்தவர்கள். எனவே, அரசின் கட்டுப்பாடு என்பது போர் களத்தில் மட்டுமே 100% இருந்தது என்று கருதலாம். அரசாட்சி என்று வரும்போது அரசர் என்பவர், அரசின் 7 தூண்களில் ஒருவராகவே கருதப்பட்டார். எனவே அரசை, அரசரை வழிநடத்துவது மீதமிருக்கும் 6 தூண்கள்தான்.
1. அமைச்சர்கள்
2. நிர்வாகம்
3. அரண்
4. ராணுவம்
5. கருவூலம்
6. துணை அரசர்கள்
இதில் முதல் தூணாக இருக்கும் அமைச்சரவை குறித்து பார்ப்போம். குப்த பேரரசின் மிகவும் பிரசித்திப்பெற்ற மன்னர் எனில் அது, இரண்டாம் சந்திர குப்தர்தான். அவர் காலத்தில் காளிதாசர், அமரசிம்மர், தன்வந்திரி, வராகமிஹிரர், சங்கு, வேதாலபட்டர், காகபானகர், ஹரிசேனர், வரருசி என மொத்தம் 9 பேர் அமைச்சர்களாக இருந்தனர். இவர்கள் 9 பேரில், காளிதாசர், வராகமிஹிரர், ஹரிசேனர், வரருசி மற்றும் சங்கு ஆகிய 5 பேரும் பிராமணர்கள்.
தன்வந்திரி பிராமணர் அல்லாத ஆனால் உயர் சமூகத்தை சேர்ந்தவர். அதேபோல அமரசிம்மர் வைணவ சமூகத்தைச் சேர்ந்த ஒரு அறிஞர். வேதாலபட்டர் மற்றும் காகபானகர் ஆகியோரின் பின்னணி குறித்து தெரியவில்லை. ஆனால் நிச்சயம் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்களாக இருக்க வாய்ப்பு குறைவு.
ஏனெனில் குப்தர் காலத்தில் தாழ்த்தப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள் ஊருக்குள் வரும்போது சத்தம் போட்டுக்கொண்டே வர வேண்டும். ஏனெனில் அவர்களை யாரும் தொட்டுவிடக்கூடாது என்பதால்தான். அந்த அளவுக்கு தீண்டாமை கொடுமைகள் உச்சத்தில் இருந்தன. இப்படி இருக்கும்போது ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் அமைச்சரவையில் இடம்பெற்றிருக்க வாய்ப்பே இல்லை.
அதேபோலத்தான் குப்த அரசர்கள் பிற சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களால் தன்னிச்சையாக ஆட்சி நடத்த முடியாத நிலையும் இருந்தது. 'குப்த பேரரசு அரசாட்சியும் நிர்வாகமும்' என்கிற தலைப்பில் கிழக்கு டுவே வெப்சைட்டில் எழுத்தாளர் எஸ்.கிருஷ்ணன் கீழ்கண்டவாறு எழுதியுள்ளார்.
"அரசர்கள் கடவுளுக்குச் சமமாக அரசர் கருதப்பட்டாலும், அவையெல்லாம் அவர் தர்ம மார்க்கப்படி நடக்கவேண்டிய கட்டாயத்தை வலியுறுத்தினவே தவிர, அவர் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம் என்பதை அல்ல. அவருடைய செயல்கள் எல்லாம் தார்மிக அடிப்படையிலேயே அமைந்தன. ஏன், தற்போதைய அரசுகளைப் போல அவரால் சட்டங்கள் கூட இயற்ற இயலாது. இந்து தர்மத்தில் கூறப்பட்ட தர்மசாஸ்திரங்களே அக்காலத்தில் நிலவிய சட்டங்கள். அவற்றின் அடிப்படையிலேயேதான் அரசர் ஆட்சி செய்ய முடியும். அந்த வகையில் அவர் அந்தச் சட்டங்களை நாட்டில் அமல்படுத்தும் நிர்வாகியே தவிர அவற்றில் திருத்தம் செய்து தனது சட்டங்களாகச் செய்யும் உரிமை பெற்றவரல்ல" என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இந்து தர்ம சாஸ்திரத்தின்படி அரசாட்சி என்றால் அது ஒரு சார்புடையோருக்கு மட்டுமானதாக இருந்ததிருக்க வாய்புகள் அதிகம் என பிர வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். இதுவே குப்த பேரரசர்கள் மத்தியில் மக்களுக்கு அதிருப்தி ஏற்பட காரணம். மறுபுறம் போர்கள், அரச கருவூலத்தை மொத்தமாக காலி செய்தது. இதனால் ஆட்சி நடத்துவதற்கு போதுமான வலிமை குப்தர்கள் இழந்தனர். இதெல்லாம் மக்கள் மத்தியில் இருந்த அதிருப்தியை அதிகரித்தது. இத்துடன் சேர்ந்து ஹூணர்களின் படையெடுப்பும் சேர்ந்து குப்த வம்சத்தை காலி செய்தன. இப்படியாக கி.பி. 550ல் குப்த வம்சம் முடிவுக்கு வந்தது.












Click it and Unblock the Notifications