நில அளவைக்கு இவ்வளவா? புதுச்சேரியில் புதிய கட்டணம்.. 5000 சதுர அடிக்கு கீழ் உள்ள நிலங்களுக்கு ரூ.400
புதுச்சேரி: புதுச்சேரியில் நிலத்தை அளவீடு செய்வதற்கான கட்டணங்களை அரசு புதிதாக நிர்ணயித்துள்ளது. இனிமேல் எவ்வளவு பெரிய நிலத்தை அளக்கிறோமோ, அதற்கேற்ப கட்டணம் செலுத்த வேண்டும். அதன்படி, 5,000 சதுர அடிக்குக் குறைவான நிலத்தை அளக்க ரூ.400 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, மாதம், வாரம், ஒரு நாள் என கால அளவுக்கு ஏற்ப நில அளவைச் சேவைகளைப் பெறுவதற்கான கட்டணங்களையும் அரசு அறிவித்துள்ளது. அதை பற்றின விவரங்களை இங்கு பார்ப்போம்..!!
புதுச்சேரி அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் கீழ் நில அளவை மற்றும் நில ஆவணங்கள் இயக்ககம் செயல்பட்டு வருகிறது. இந்தத் துறை மூலமாக பொதுமக்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்வது உள்ளிட்ட பல்வேறு சேவைகளைப் பெற்று வருகின்றனர்.

நவீன அளவீடு
இதுவரை நிலங்களை அளக்க சங்கிலி உள்ளிட்ட பாரம்பரிய கருவிகள் பயன்படுத்தப்பட்டு வந்தன. இப்போது அந்த முறையுடன் நவீன கருவிகளையும் பயன்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.
இதன்படி, ETS எனப்படும் மின்னணு மொத்த நிலையக் கருவி தொடர்ச்சியான செயல்பாட்டு குறிப்பு நிலையங்கள் (CORS), வேறுபாட்டு உலகளாவிய நிலைநிறுத்த முறை (DGPS) ஆகிய தொழில்நுட்பங்களும் பயன்படுத்தப்பட உள்ளன. இந்தக் கருவிகளின் உதவியுடன் நிலத்தின் எல்லைகள் மற்றும் அளவுகளைத் துல்லியமாகக் கணக்கிட முடியும். இதனால் நில அளவைப் பணிகளை விரைவாகவும் முடிக்க முடியும்.
எவ்வளவு கட்டணம்?
நிலத்தின் அளவைப் பொறுத்து அதற்கான கட்டணமும் மாறுபடும். அதன்படி, 5,000 சதுர அடிக்குக் குறைவான நிலத்தை அளவீடு செய்ய ரூ.400 செலுத்த வேண்டும்... 5,000 முதல் 10,000 சதுர அடி வரை உள்ள நிலங்களுக்கு ரூ.600 கட்டணம் வசூலிக்கப்படும். 10,000 முதல் 20,000 சதுர அடி வரையிலான நிலங்களுக்கு ரூ.800 செலுத்த வேண்டும்.
அதேபோல், 20,000 முதல் 30,000 சதுர அடி வரையிலான நிலங்களுக்கு ரூ.1,000 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 30,000 சதுர அடிக்கு மேல் உள்ள நிலங்களை அளவீடு செய்ய ரூ.1,300 செலுத்த வேண்டும். ஒரு ஏக்கருக்கு மேல் நிலம் இருந்தால், கூடுதலாக ஒவ்வொரு 10 ஏக்கருக்கும் ரூ.200 கட்டணம் செலுத்த வேண்டும்.
கால அளவுக் கட்டணம்
நிலத்தின் அளவை மட்டும் அடிப்படையாக கொண்டு கட்டணம் நிர்ணயிக்கப்படவில்லை. எத்தனை நாட்களுக்கு நில அளவை சேவை தேவைப்படுகிறது என்பதற்கும் தனித்தனியாக கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 26 வேலை நாட்களைக் கொண்ட ஒரு மாத சேவைக்கு ரூ.25,000 கட்டணம் செலுத்த வேண்டும். 6 வேலை நாட்களைக் கொண்ட ஒரு வார சேவைக்கு ரூ.5,000 செலுத்த வேண்டும். ஒரே ஒரு நாள் மட்டும் நில அளவை சேவை தேவைப்பட்டால் ரூ.1,000 கட்டணம் வசூலிக்கப்படும்.
லைசென்ஸ் பெற்றவர்கள்
புதுச்சேரியில் நில அளவைப் பணிகளை மேற்கொள்ள உரிமம் பெற்றவர்கள், அரசு அறிவித்துள்ள கட்டணங்களையும் விதிமுறைகளையும் முறையாகப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நில அளவையாளர்கள் மற்றும் நில வரைபடங்களைத் தயாரிப்பவர்கள் தங்களது பணிகள் தொடர்பான ஆவணங்களையும் பதிவேடுகளையும் முறையாகப் பராமரிக்க வேண்டும். பொதுமக்களிடம் அரசு நிர்ணயித்த கட்டணத்தைத் தவிர கூடுதல் தொகை வசூலிக்கக் கூடாது என்றும், குறிப்பிட்ட காலத்திற்குள் அளவைப் பணிகளை முடித்துக் கொடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய கட்டணங்கள் மற்றும் நில அளவை நடைமுறைகள் குறித்த கூடுதல் விவரங்களை புதுச்சேரி அரசின் https://puducherry-dt.gov.in மற்றும் https://revenue.py.gov.in ஆகிய இணையதளங்களில் பொதுமக்கள் தெரிந்துகொள்ளலாம்.
நிலம் வாங்குவது, விற்பது, பட்டா தொடர்பான தேவைகள், நிலத்தைப் பிரிப்பது எனப் பல காரணங்களுக்காக நில அளவை செய்ய வேண்டியிருக்கும். இத்தகைய தேவைகளுக்காக நில அளவையாளர்களை அணுகும் புதுச்சேரி மக்கள், இனி அரசு அறிவித்துள்ள புதிய கட்டண முறையின்படி சேவைகளைப் பெற்றுக்கொள்ளலாம்..!!




Click it and Unblock the Notifications
