மக்களுக்கு இந்தி புரிவதில்லை.. மத்திய அரசின் திட்டங்களுக்கு தமிழில் பெயர் வையுங்கள்! ஆளுநர் தமிழிசை
புதுச்சேரி: மத்திய அரசுத் திட்டங்கள் புரியாத மொழியில் இருப்பதாகத் தெரிவித்த புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை, அத்திட்டங்களின் பெயர்களை தமிழ்ப்படுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மத்திய அரசு சார்பில் கொண்டு வரப்படும் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதை விடுபட்ட பயனாளிகளிடம் சென்று சேர்க்கவும் வாகன பிரச்சாரம் புதுச்சேரியில் தொடங்கப்பட்டது.

புதுச்சேரி அருகே அமைந்துள்ள திம்புநாயக்கன்பாளையத்தில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இந்த நிகழ்ச்சியில் நடைபெற்றது. இதில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனும் கலந்து கொண்டார்.
திட்டங்கள்: அப்போது பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆளுநர் தமிழிசை விழிப்புணர்வு வாகன பிரச்சாரத்தையும் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய துணைநிலை ஆளுநர் தமிழிசை, மத்திய அரசின் திட்டங்களின் பெயர்களைத் தமிழில் மாற்ற வேண்டும் என்றும் அப்போதுதான் அது மக்களுக்குப் புரியும் என்றும் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "புதுச்சேரியில் சமீபத்தில் பழங்குடியின மக்களைக் கவுரவிக்கும் விழா நடைபெற்றது. அதில் மக்கள் பலரும் கலந்து கொண்டு பெருமைப்படுத்தினர்.
இருப்பினும், புதுவை அரசு மக்களுக்குச் செய்யும் நல்லதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் சிலர் பொறாமை கொண்டு பிரச்சினை செய்தனர். பழங்குடியின மக்கள் மத்திய அரசுக்கு ஆதரவு அளிப்பதை அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இதன் காரணமாகவே அவர்கள் இப்படியெல்லாம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
ஆளுநர் தமிழிசை: மேலும், பிரதமர் மோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டமும் மிகப் பெரியளவில் வெற்றி பெற்றுள்ளது. இதன் காரணமாகவே காய்கறி விற்பவர்கள் முதல் அனைவரும் டிஜிட்டல் முறையில் பணப் பரிவர்த்தனையைப் பெறுகிறார்கள். இவ்வளவு எளிதாக அனைத்தும் நடப்பதும் அவர்கள் வளர்ச்சிக்கும் நாட்டின் வளர்ச்சிக்கும் மிகப் பெரியளவில் உதவுகிறது. அம்பேத்கர் பெயரின் சுருக்கமான பீம் என்ற பெயரில் தான் இந்த செயலியைப் பிரதமர் கொண்டு வந்தார்.
அதேநேரம் மத்திய அரசுத் திட்டங்கள் மக்களிடம் எடுத்துச் செல்லப்படும் போது அவை இந்தியிலேயே கூறப்படுகிறது. மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் இந்தியில் இருக்கிறது. புதுச்சேரியில் அனைவருக்கும் புரியும் வகையில் நாம் மத்திய அரசுத் திட்டங்களுக்குத் தமிழில் பெயர் வைக்க வேண்டும். 'ஜல் ஜீவன்' மிஷன் என்று சொல்வதை விட நாம் இல்லம் தோறும் இனிய குடிநீர் என்று சொல்லலாம். மத்திய அரசுத் திட்டங்களை நாம் தமிழ்ப்படுத்த வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
தமிழில் பெயர் வைக்க வேண்டும்: 'ஜல் ஜீவன்' மிஷன் மூலம் தங்களுக்குக் குடிநீர் வருகிறது என்று மக்களுக்குத் தெரிகிறது. ஆனால் அவர்களுக்கு அதற்கான அர்த்தம் புரிவதில்லை. அதேபோல உஜ்வாலா திட்டம் என்றால் இலவச எரிவாயு திட்டம் என நாம் சொல்ல வேண்டும். முதல்வரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டம், விவசாயிகளுக்கான காப்பீட்டுத் திட்டம் என நாம் தமிழில் சொல்ல வேண்டும். அப்போது தான் அனைவருக்கும் புரியும்.
மக்களுக்குப் புரியாத மொழியில் கூறுவதால் அத்திட்டம் யாரால் கொண்டு வரப்பட்டது என்பதைக் கூட அறியமுடியாத நிலையுள்ளது. அதனால் மத்திய அரசுத் திட்டங்களைத் தமிழில் மக்களுக்குப் புரியும் வகையில் குறிப்பிடவேண்டும். அதிகாரிகள் இதைத் தமிழ்ப்படுத்த வேண்டும்.. அப்போது தான் அனைவருக்கும் புரியும்" என்றார்.












Click it and Unblock the Notifications