விஜய் மக்கள் சந்திப்பு.. துப்பாக்கியுடன் வந்த நபர் யார்? புஸ்ஸி ஆனந்த் ஷாக்காகி கொடுத்த ரியாக்சன்!
புதுச்சேரி: புதுச்சேரியில் தவெக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் வந்த ஆசாமி குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விளக்கம் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக விசாரிக்கப்படும் என்று கூறிய புஸ்ஸி ஆனந்த், பாதுகாப்பு குறைபாடு ஏதேனும் இருக்கிறதா என்ற கேள்விக்கு பதில் அளிக்காமல் விலகி சென்றார்.
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் புதுச்சேரியில் இன்று மக்களை சந்திக்கிறார். புதுச்சேரி உப்பளம் மைதானத்தில் சுமார் 5 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்க போலீஸார் அனுமதி வழங்கி இருக்கின்றனர். இதனால் க்யூஆர் கோடு வைத்திருக்கும் புதுச்சேரி தொண்டர்கள் மட்டுமே விஜய் மக்கள் சந்திப்பு கூட்டத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த கூட்டத்திற்கு தமிழ்நாட்டில் இருந்து யாரும் வரக்கூடாது என்று தவெக தலைமை அறிவுறுத்தி இருந்தது. கரூர் சம்பவத்திற்கு பின் 73 நாட்களுக்கு பிறகு, விஜய் பொதுவெளியில் மக்களை சந்திக்க உள்ளார். இதனால் புதுச்சேரியில் விஜய்யின் செயல்பாடுகள் மற்றும் பேச்சின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதேபோல் புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது.
இதனால் பாஜகவை கடுமையாக விமர்சித்து விஜய் பேசுவாரா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. இந்த நிலையில் புதுச்சேரியில் நடக்கும் விஜய் மக்கள் சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்க ஒருவர் கைத் துப்பாக்கியுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையினர் மெட்டல் டிடெக்டர் மூலமாக சோதனை செய்த போது, அந்த நபர் துப்பாக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து விசாரணை மேற்கொண்ட போது, அவர் சிவகங்கையைச் சேர்ந்த தவெக நிர்வாகியின் தனி பாதுகாவலர் என்று தகவல் வெளி வந்தது. இருப்பினும் கைத் துப்பாக்கி வைத்திருந்த டேவிட்டிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் இருந்து யாரும் வர வேண்டாம் என்று விஜய் அறிவுறுத்திய போதும், சிவகங்கை நிர்வாகி வந்தது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இந்த சம்பவத்தின் போது திடீரென தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இரு சக்கர வாகனத்தில் மக்கள் சந்திப்பு கூட்ட மைதானத்தில் வந்தார். இதுகுறித்து புஸ்ஸி ஆனந்த்தை சுற்றி வளைத்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு புஸ்ஸி ஆனந்த், ஒரு நிமிடம் ஷாக்காகி யார் அந்த நிர்வாகி என்று பார்க்க தொடங்கினார்.
இதையடுத்து சிவகங்கையில் இருந்து கைத் துப்பாக்கியுடன் வந்த நபர் குறித்து விசாரிக்கப்படும் என்று பதில் அளித்தார். தொடர்ந்து தவெக கூட்டத்தில் பாதுகாப்பு குறைபாடு இருக்கிறதா என்று கேள்விகள் எழுந்த போது, புஸ்ஸி ஆனந்த் எந்த பதிலையும் அளிக்காமல் விரைவாக அங்கிருந்து நகர்ந்து சென்றார்.












Click it and Unblock the Notifications