“புதுச்சேரியில் தவெக ஆட்சி நிச்சயம்”.. முதலில் மைக் பிடித்த புஸ்ஸி ஆனந்த் பேச்சு!
புதுச்சேரி: "புதுச்சேரியில் நம் ஆட்சி கண்டிப்பா இருக்கும். 2026ல் தமிழ்நாட்டில் முதலமைச்சராக வருவார் விஜய்" என தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பேசியுள்ளார்.
புதுச்சேரி தவெக மக்கள் சந்திப்பு கூட்டத்தில் முதலில் உரையாற்றினார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த். புதுச்சேரியிலும் தவெக கண்டிப்பாக ஆட்சி அமைக்கும் என புஸ்ஸி ஆனந்த் உரையாற்றினார்.

புஸ்ஸி ஆனந்த் பேசுகையில், "இங்கு கூடியுள்ள கூட்டம் தலைவர் விஜய்க்காக வந்த கூட்டம். வேலை நாட்களில் இவ்வளவு பேர் கூடியுள்ளார்கள் என்றால் அது த.வெ.க. தலைவர் விஜய்க்காக மட்டும் தான். புதுச்சேரியில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி கண்டிப்பாக இருக்கும். தமிழ்நாட்டின் முதலமைச்சராக 2026-ம் ஆண்டு விஜய் வருவார்" எனத் தெரிவித்துள்ளார்.
தவெக பொதுக்கூட்டம் உப்பளம் ஹெலிபேடு மைதானத்தில் புதுச்சேரியில் இன்று நடைபெற்று வருகிறது. தவெக தலைவர் விஜய், இன்று திட்டமிட்ட நேரத்திற்கு பிரச்சாரம் நடக்கும் மைதானத்தை அடைந்தார். தற்போது, பிரச்சார வாகனத்தில் நின்றபடி உரையாற்றி வருகிறார் விஜய்.
விஜய்யின் புதுச்சேரி பிரச்சாரக் கூட்டத்தில் புதுச்சேரியை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்கள் உள்பட தமிழகத்தைச் சேர்ந்த யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள வருவோரை காவல்துறையினர் மெட்டல் டிடெக்டர் வைத்து சோதித்த பின்னரே உள்ளே அனுப்பினர்.
புதுச்சேரியில் பிரசாரக் கூட்டம் நடைபெற உள்ள நுழைவுவாயிலில் க்யூ.ஆர்.கோடு உடன் கூடிய பாஸ் வைத்துள்ளவர்கள் மட்டுமே அனுமதி வழங்கப்பட்ட நிலையில் 1000-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் காத்திருந்தனர். அவர்களுக்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையில் போலீசார் ஒவ்வொருவராக உள்ளே அனுப்ப முற்பட்டனர்.
அப்போது ஒவ்வொரு ஆளாக உள்ளே அனுப்பும் போது ரசிகர்கள் அனைவரும் கும்பலாக முண்டியடித்துக் கொண்டு போலீசாரையும் மீறி கதவை தள்ளிவிட்டு உள்ளே செல்ல முயன்றனர். அப்போது காவல் துறையினருக்கும் ரசிகர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அதனைத்தொடர்ந்து போலீசார், அங்கிருந்த ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் மீது லேசான தடியடி நடத்தினர்.












Click it and Unblock the Notifications