அதிமுகவில் மீண்டும் இணையும் ‘மாஜி’ அன்வர் ராஜா.. யார் பக்கம்? சொன்ன வார்த்தையை கவனிச்சீங்களா?
ராமநாதபுரம் : அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சரும், எம்.பியுமான அன்வர் ராஜா மீண்டும் அரசியல் லைம்லைட்டில் வந்துள்ளார். அதிமுகவில் அவர் எந்த அணிக்கு ஆதரவு கொடுப்பார் என பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அதிமுகவில் ஓபிஎஸ், ஈபிஎஸ் இடையே ஏற்பட்டுள்ள கடுமையான மோதலில், இரு தரப்பும், தங்கள் பக்கம் ஆதரவாளர்களைத் திரட்டுவதில் முழு கவனம் செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அன்வர் ராஜா, அதிமுக எழுச்சியுடன் மீண்டும் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும். ஈபிஎஸ் - ஓபிஎஸ் இணைந்திருந்த போது என்னை கட்சியில் இருந்து நீக்கினார்கள். மீண்டும் இணைந்தால் தான் என்னை கட்சியில் சேர்க்க முடியும். கட்சியில் இணைவதற்காக காத்திருக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

அன்வர் ராஜா
அதிமுவின் முன்னாள் அமைச்சரும், முன்னாள் ராஜ்யசபா உறுப்பினருமான அன்வர் ராஜா கடந்த ஆண்டு அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அன்வர் ராஜா, அண்ணா, எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதி. அதிமுகவில் சிறுபான்மை பிரிவு மாநிலச் செயலாளராக இருந்து வந்த நிலையில், சசிகலாவை கட்சியில் சேர்க்க வேண்டும் எனப் பேசியதால், விளக்கமே கேட்கப்படாமல் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் அன்வர் ராஜா.

அதிரடியாக நீக்கம்
ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்திய காலத்தில், சசிகலா பக்கம் இருந்த அன்வர் ராஜா. பிறகு சசிகலா சிறைக்குப் போன பிறகு எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளராக மாறினார். இந்நிலையில் தான் கடந்த ஆண்டு டிசம்பரில் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார் அன்வர் ராஜா. அவர் மீது ஏற்கனவே பல விவகாரங்களில் கட்சியின் இரட்டைத் தலைமை அதிருப்தியில் இருந்ததால் உடனடியாக நீக்கப்பட்டதாக கூறப்பட்டது.

பாஜகவோடு கூட்டணியை விரும்பவில்லை
இஸ்லாமியர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த சிஏஏ உள்ளிட்ட சட்டங்களை அதிமுக ஆதரித்து வாக்களித்ததால் தலைமை மீது அதிருப்தியில் இருந்தார் அன்வர் ராஜா. அப்போது மாநிலங்களவையிலும் அன்வர்ராஜா அதை எதிர்த்து பேசினார். 2019 மக்களவை தேர்தலில் அன்வர்ராஜா ஓரங்கட்டப்பட்டார். ராமநாதபுரம் தொகுதி பாஜகவுக்கு வழங்கப்பட்ட நிலையில், திமுக கூட்டணி வேட்பாளர் நவாஸ்கனி வெற்றி பெற்றார்.

சீட்டும் கிடைக்கவில்லை
தொடர்ந்து, கூட்டணிக் கட்சியான பாஜகவை பல்வேறு சமயங்களில் கடுமையாக விமர்சித்துப் பேசி வந்தார் அன்வர் ராஜா. சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைக்கக் கூடாது என்றும் கூறி வந்தார். 2021 சட்டமன்றத் தேர்தலிலும் அவருக்கு சீட் கிடைக்கவில்லை. இதையடுத்து கட்சியில் அவரது பேச்சு எடுபடாத நிலையில், "தற்போதைய அதிமுக தலைமை வலிமையற்று உள்ளது. வலுப்படுத்த சின்னம்மா வர வேண்டும்" என மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது.

திமுகவுக்கு இழுக்க ஸ்கெட்ச்
அன்வர் ராஜா, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், அவரை திமுகவுக்கு இழுக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின. ராமநாதபுரம் மாவட்ட அமைச்சரான ராஜகண்ணப்பன், அன்வர் ராஜாவிடம் பேசி, சிறுபான்மையினத்தின் முக்கிய தலைவரான நீங்கள் திமுக பக்கம் தான் இருக்க வேண்டும், அதிமுகவில் உங்களுக்கு மரியாதை இல்லை, வந்துவிடுங்கள் எனக் கூறியதாக தகவல்கள் வெளியாகின. ஆனாலும், அன்வர் ராஜா திமுக பக்கம் செல்லவில்லை.

சசிகலா ஆதரவு?
கடந்த பல மாதங்களாக அரசியல் செயல்பாடுகளில் இருந்து ஒதுங்கி இருந்து வந்த அன்வர் ராஜா, சசிகலாவின் ஆலோசனைப் படி செயல்பட்டு வருவதாக கூறப்பட்டது. இந்நிலையில், தற்போது அதிமுகவில் நிலவி வரும் ஓபிஎஸ் - ஈபிஎஸ் மோதலுக்கு மத்தியில், ஓபிஎஸ் தரப்பு, தங்கள் பக்கம் அன்வர் ராஜாவை சேர்ப்பதற்காக அவரை அணுகி வருவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், அவர் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக இதுவரை வெளிப்படையாக எந்தக் கருத்தையும் சொல்லவில்லை.

அதிமுகவில் இணைவேன்
இந்நிலையில் தான், நேற்று இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார் அன்வர் ராஜா. தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அன்வர் ராஜா, "அதிமுக எழுச்சியுடன் மீண்டும் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும். ஈபிஎஸ் -ஓபிஎஸ் இணைந்திருந்த போது என்னை கட்சியில் இருந்து நீக்கினார்கள். மீண்டும் இணைந்தால் தான் என்னை கட்சியில் சேர்க்க முடியும். கட்சியில் இணைவதற்காக காத்திருக்கிறேன். அதிமுகவினரை இணைக்கவும் தயார். அதில் இணையவும் காத்திருக்கிறேன். அதிமுக நிறுவன தலைவர் எம்ஜிஆர். ஒரு அவதாரம். அவரின் பக்தனாக தொடர்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

யார் பக்கம்?
அன்வர் ராஜா, மீண்டும் லைம்லைட்டுக்கு வந்திருப்பதன் மூலம், அவர் அதிமுகவில் ஏதாவது ஒரு அணியை ஆதரிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருவரும் சேர்ந்து தன்னை கட்சியில் சேர்க்க வேண்டும் என அன்வர் ராஜா கூறியிருந்தாலும் கூட, அதிமுக இணைவு என்பது ஓபிஎஸ் தரப்பின் கோரிக்கை என்பதால், ஓபிஎஸ்ஸையே அவர் ஆதரிப்பதாக எடுத்துக் கொள்ளலாம் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.












Click it and Unblock the Notifications