மினி கிளினிக் விழாவை புறக்கணித்த கருணாஸ் எம்எல்ஏ.. சொன்ன காரணம்.. அதிமுகவினர் ஷாக்!
ராமநாதபுரம்: திருவாடானை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றியத்தில் நடந்த மினி கிளினிக் விழாவை கருணாஸ் எம்எல்ஏ புறக்கணித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மினி கிளினிக் திறப்பு விழா அரசு விழா போன்று இல்லாமல், அதிமுக கட்சி விழா போல் இருந்ததால் செல்லவில்லை என்று கருணாஸ் கூறியுள்ளார்.
முக்குலத்தோர் புலிப்படை தலைவரான கருணாஸ், கடந்த சட்டமன்ற தேர்தலில் திருவாடானை தொகுதியில் அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

கூவத்தூர்
கருணாஸ் கூவத்தூரில் எம்எல்ஏக்கள் தங்கியிருந்த போது அதிகம் பேசப்பட்டார். சசிகலாவின் தீவிர ஆதரவாளராக இருந்தார். ஆனால் அவர் சிறை சென்ற பின்னர் கருணாஸ் கடந்த நான்கு ஆண்டுகளாக அமைதியாக இருந்தார். சசிகலா சிறையில் இருந்து விடுதலையான நிலையில், கடந்த சில நாட்களாக சசிகலாவிற்கு ஆதரவாக வெளிப்படையாகவே கருத்து தெரிவித்து வந்தார்.

வெயிட் அண்ட் சி
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கடந்த மாதம் செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ், கூவத்தூரில் பிரதமர் மோடி, தமிழக முதல்வராக கொண்டுவர நினைத்தது வேறு ஒருவர். அது உங்கள் எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதை உடைத்து, நாட்டின் சர்வ அதிகாரமும் உள்ள பிரதமரின் விருப்பத்ற்கு மாறாக வேறு ஒருவரை முதல்வராக தீர்மானித்தவர் சசிகலா அம்மா என்பதை யாரும் மறுக்க முடியாது. யாரும் மறக்க முடியாது. எந்த பதவியிலும் இல்லாத ஒருவரால் எப்பேர்பட்ட காரியங்களையும் செய்ய முடியும் என்று நிரூபித்தவர் சசிகலா. ஈசியாக எடை போட வேண்டாம். வெயிட் அண்ட் சி' என்று கூறியிருந்தார். ஆனால் அதன்பிறகு கருணாஸ் அமைதியாக இருந்தார். எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

மினி கிளினிக்
இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றியத்தில் உள்ள சேத்திடல், கூடலூர் ஆகிய பகுதிகளில் நேற்று காலை மினி கிளினிக் திறப்பு விழா நடந்தது. திருவாடானை தொகுதி எம்எல்ஏ கருணாஸ் கலந்துகொண்டு மினி கிளினிக்கை திறந்து வைப்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் வரவில்லை.

அதிமுக கட்சி விழா
இதுகுறித்து கருணாஸ் எம்எல்ஏ கூறும் போது, ‘‘மினி கிளினிக் திறப்பு விழா அரசு விழா போன்று இல்லாமல், அதிமுக கட்சி விழா போல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனால்தான் அப்பகுதியில் விழாவிற்கு செல்லவில்லை'' என்றார். அரசு விழாவை புறக்கணித்ததோடு, அதிமுக விழாபோல் நடந்ததாக கருணாஸ் பகிரங்கமாக குற்றம்சாட்டிய கருணாஸ் பேட்டி ராமநாதபுரம் பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.