இபிஎஸ்க்கு சமுதாய பாசம்! பசும்பொன்னை வைத்து முடிச்சு போடும் ஓபிஎஸ்! தலையைக் கவிழ்த்த மாஜிக்கள்!
இராமநாதபுரம் : அதிமுகவில் தென் மாவட்டங்களில் இருக்கும் முக்குலத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி மீது லேசான அதிருப்தியில் இருக்கும் நிலையில், மூத்த முன்னாள் அமைச்சர்களிடம் ஓபிஎஸ் தரப்பு எடப்பாடி கொங்கு அரசியல் செய்வதாகக் கூறி தங்கள் தரப்புக்கு இழுக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் இன்று முத்துராமலிங்க தேவரின் 115 வது ஜெயந்தி விழாவும் 60-வது குருபூஜை விழாவும் நடைபெற்று வருகிறது. வழக்கம் போலவே இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அக்டோபர் 28ஆம் தேதி ஆன்மீக விழாவாகவும் அக்டோபர் 29ஆம் தேதி அரசியல் விழாவாகவும் இன்று அக்டோபர் 30ஆம் தேதி அரசு விழாவாகவும் நடைபெற்று வருகிறது. தமிழக அரசின் சார்பில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மரியாதை செலுத்தினர்.
4,000 பேருக்கு அறுசுவை விருந்து! எதிலும் பிரம்மாண்டம்! அதிமுகவில் கலக்கும் அய்யாதுரை பாண்டியன்!

தேவர் நினைவிடம்
தொடர்ந்து பாஜக உள்ளிட்ட கட்சிகளின் சார்பிலும் பலரும் மரியாதை செலுத்தவுள்ளனர். குறிப்பாக தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக சார்பில் திண்டுக்கல் சீனிவாசன் செல்லூர் ராஜு ஆர் பி உதயகுமார் உள்ளிட்ட மூத்த முன்னாள் அமைச்சர்கள் மரியாதை செலுத்த இருக்கின்றனர். அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி பசும்பொன்னில் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது.

எடப்பாடி பழனிச்சாமி
ஆனால் சில காரணங்களால் எடப்பாடி பழனிச்சாமி வருகை ரத்து செய்யப்பட்ட நிலையில் சென்னையில் அவர் மரியாதை செலுத்துவார் என அறிவிக்கப்பட்டது தென் மாவட்டங்களில் குறிப்பாக அதிமுக அவர் தரப்பு நிர்வாகிகளுக்கே இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அதே நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு எடப்பாடியின் இந்த முடிவால் திடீர் உற்சாகம் அடைந்திருக்கிறது. தேவர் தங்க கவச விவகாரத்தில் இரு தரப்புக்குமே ஆதரவு கிடைக்காமல் அரசு தரப்புக்கு ஆதரவாக தீர்ப்பு சென்ற நிலையில் ஏற்கனவே தென் மாவட்டங்களைச் சேர்ந்த குறிப்பாக முக்குலத்து சமுதாய மக்கள் அதிமுகவில் எடப்பாடி தரப்பு மீது அதிருப்தியில் இருந்தனர்.

முக்குலத்தோரிடையே வெறுப்பு
இந்நிலையில் பசும்பொன் பயணமும் ரத்து செய்யப்பட்டதால் அவர் மீதான வெறுப்பு அதிகரித்துள்ளது. அதன் காரணமாகவே தேவர் நினைவிடத்தில் எடப்பாடி வாழ்க என முழக்கமிட்ட ஆர்பி உதயகுமார் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால் முக்குலத்து சமுதாய மக்கள் எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு எதிராக திரும்பி உள்ளதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முடிவெடுத்துள்ளார் ஓ.பன்னீர்செல்வம். அதன்படி இன்று சுமார் 300-க்கும் மேற்பட்ட கார்களில் ஆதரவாளர்கள் புடைசூழ பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த இருக்கிறார். இதனால் தனது சமுதாய மக்களிடையே ஆதரவு பெருகும் என்பதோடு எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக சமுதாய அரசியல் செய்ய முடியும் என நினைக்கிறார்.

சமுதாய அரசியல்
மேலும் தற்போது ஆர்பி உதயகுமார் உள்ளிட்ட அமைச்சர்களுக்கு எதிராக தனது தரப்பு ஆதரவாளர்களை தகவல் பரப்ப விட்டுள்ள நிலையில் அதிலும் வெற்றி கண்டுள்ளார். இதை வைத்தே மூத்த முன்னால் அமைச்சர்களிடம் பேசி தனது தரப்புக்கு இழுக்கவும் திட்டமிட்டுள்ளார். பொதுவாக தென் மாவட்டங்களில் முக்குலத்து சமுதாய வாக்குகள் அதிகம் என்பதால் தேர்தலில் வெற்றி தோல்வியை ஓரளவு தீர்மானிக்கும் சக்தியாகவும் முக்குலத்து வாக்கு வங்கி இருக்கிறது. அதனை எடப்பாடி பழனிச்சாமி இழந்து விட்டதாக ஓபிஎஸ் தரப்பு கூறிவரும் நிலையில் வரும் நாட்களில் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.