அடுத்தடுத்து வெடித்த கேஸ் சிலிண்டர்கள்.. சேலத்தில் குழந்தை உட்பட 14 பேர் காயம்.. தீவிர சிகிச்சை!
சேலம்: சேலம் மாவட்டத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் குழந்தை உட்பட 7 பேர் படுகாயமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல திண்டுக்கல் மாவட்டத்தில் சிலிண்டர் வெடித்ததில் மூதாட்டி ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார்.
ஏற்கெனவே சேலத்தில் சிலிண்டரிலிருந்து எரிவாயு கசிந்ததால் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் காயமடைந்திருந்தனர். இந்நிலையில் தற்போது அடுத்தடுத்து சிலிண்டர் வெடித்த சம்பவங்களில் 14 பேர் காயமடைந்துள்ளனர்.

சேலம்
சேலம் மாவட்டம் நெத்திமேடு எனும் பகுதியில் சுதாகர் என்பவரது வீட்டில் எரிவாயு கசிவு ஏற்பட்டுள்ளது. ஆனால் குடும்பத்தினர் இதை உணராமல் கேஸ் அடுப்பில் சமையல் செய்துள்ளனர். இந்நிலையில் திடீரென வீட்டிலிருந்தவர்கள் மீது தீ பற்றி பரவியுள்ளது. இதில் ஒரு குழந்தை உட்பட 6 பேருக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டுள்ளது. சம்பவத்தையடுத்து விரைந்து வந்த தீயணைப்பு படையினர் காயமடைந்தவர்களை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மற்றொரு விபத்து
இந்த சம்பவத்தின் பரபரப்பு ஓய்வதற்குள் இதே மாவட்டத்தில் பொன்னம்மா பேட்டையின் அண்ணாநகர் பகுதியில் மாணிக்கம் என்பவரது வீட்டில் இன்று சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. மாணிக்கம் இப்பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து குடும்பத்துடன் வசித்து வருகிறார். வீட்டில் இவரது மனைவி ராஜேஸ்வரி, இரண்டு மகள்கள் மற்றும் பேரக்குழந்தைகள் இருந்துள்ளனர். இவ்வாறு இருக்கையில் இன்று காலை ராஜேஸ்வரி வழக்கம்போல கேஸ் அடுப்பை பற்றவைத்துள்ளார்.

13 பேர் படுகாயம்
அப்போது பலத்த சத்தத்துடன் சிலிண்டர் வெடித்து சிதறியுள்ளது. இதில் வீட்டிலிருந்த ஒரு மாதக் குழந்தை உட்பட அனைவரும் படுகாயமடைந்துள்ளனர். இந்நிலையில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அடுத்தடுத்த நாளில் கேஸ் சிலிண்டர் விபத்தில் சேலத்தில் 13 பேர் படுகாயமடைந்திருப்பது அம்மாவட்டத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல்
இது ஒருபுறம் இருக்க சேலத்தில் விபத்து ஏற்பட்ட சிறிது நேரத்திற்கெல்லாம் திண்டுக்கல் மாவட்டத்தில் மற்றொரு வீட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே தோப்புபட்டி சித்தர் பீடத்தில் அன்னதான சமையல் கூடத்தில் சமைப்பதற்காக மூதாட்டி ஒருவர் கேஸை பற்றவைத்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக சிலிண்டர் வெடித்து சிதறியுள்ளது. இதனால் மூதாட்டி படுகாயமடைந்துள்ளார். உடனடியாக அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
தமிழ்நாட்டில் தொடர்ந்து இரண்டு நாட்களில் அடுத்தடுத்து ஏற்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விபத்தில் ஒருமாத குழந்தை உட்பட 14 பேர் படுகாயம் அடைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications