டக்கென காரை நிறுத்தச் சொன்ன முதல்வர் ஸ்டாலின்.. இறங்கி செல்ஃபி.. அப்பா பணிசெய்த இடம்.. நெகிழ்ச்சி!
சேலம் சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒரு இடத்தில் நுழைவு வாயிலைப் பார்த்ததும் காரை உடனே நிறுத்தச் சொல்லியுள்ளார்.
சேலம் : சேலம் சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்வரும் திமுக தலைவரும் தனது தந்தையுமான கருணாநிதி பணியாற்றிய பழம்பெருமை வாய்ந்த 'சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ்' படப்பிடிப்பு நிறுவனம் அமைந்திருந்த இடத்தில் புதுப்பிக்கப்பட்டு வரும் நுழைவுவாயில் முன்பு செல்பி எடுத்துக்கொண்டார்.
சேலம் கோரிமேட்டில் அமைந்த சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் கருணாநிதி, எம்.ஜி.ஆர் உள்ளிட்ட 4 முன்னாள் முதலமைச்சர்கள் பணியாற்றிய இடம்.
1935ம் ஆண்டு தொடங்கப்பட்ட சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் படப்பிடிப்பு நிறுவனத்தில் முழுப் படத்தையும் தயாரிக்கக்கூடிய வகையில் அனைத்து வசதிகளும் இருந்தன.

ஸ்டாலின் சேலம் சுற்றுப்பயணம்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலத்தில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதிகாரிகள், தொழில்முனைவோர், மகளிர் சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் என்று பலரையும் சந்தித்து உரையாடிய முதல்வர் ஸ்டாலின், அரசு அலுவலகங்களில் திடீர் ஆய்வுகளையும் மேற்கொண்டார். சேலம் சுற்றுப்பயணத்தின் போது அங்குள்ள புகழ்பெற்ற மாடர்ன் தியேட்டர்ஸ் வாசலில் நின்று செல்பி எடுத்துக்கொண்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ்
மறைந்த முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி தனது ஆரம்பகால திரையுலக வாழ்க்கையை சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தில் தான் தொடங்கினார். அந்த நினைவில் சேலம் வரும்போதெல்லாம் மாடர்ன் தியேட்டர்ஸ் வழியாகவே தனது பயணத் திட்டத்தை மேற்கொள்வார் கருணாநிதி. வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம், தான் பணிபுரிந்த மாடர்ன் தியேட்டர்ஸ் பக்கம் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார் கருணாநிதி.

வண்டியை நிறுத்திய ஸ்டாலின்
இந்நிலையில், இன்று சேலம் சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சரும், மறைந்த முதல்வர் கருணாநிதியின் மகனுமான மு.க.ஸ்டாலின் இன்று மாலை சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவாயில் முன்பு நின்று செல்ஃபி எடுத்துக்கொண்டார். சேலம் கள ஆய்வு செல்லும்போது வழியில் மார்டன் தியேட்டர்ஸ் நுழைவு வாயிலைப் பார்த்ததும் உடனே வாகனத்தை நிறுத்தச் சொன்னார் முதல்வர் ஸ்டாலின். உடனே, வாகனத்தில் இருந்து இறங்கி நுழைவு வாயில் அருகே சென்று தனது செல்போனில் செல்ஃபி எடுத்துக்கொண்டார்.

பெருஞ்சுவர்
இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், "டி.ஆர். சுந்தரம் அவர்கள் உருவாக்கிய நாற்றங்கால்; திராவிட இயக்கக் கலைஞர்களின் தொட்டில், கருணாநிதியின் பேனா முனை தீட்டிய கூர்மிகு வசனங்களின் பிறப்பிடமான சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவு வாயிலைப் படம் பிடித்தேன். 9 மொழிகளில் 118 படங்களைத் தயாரித்து அழியாக் கலைப்படங்களை உருவாக்கிய அந்நிறுவனத்தின் இந்த நுழைவு வாயில், பல நினைவுகளைச் சுமந்து நிற்கும் பெருஞ்சுவர்!" எனக் குறிப்பிட்டுள்ளார்.

மாடர்ன் தியேட்டர்ஸ்
1930களில் ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தில் இருந்த திருச்செங்கோடு பகுதியை சார்ந்த டி.ஆர்.சுந்தரம் மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து சில படங்களை தயாரித்தனர். அப்போது சேலத்தில் சினிமா படப்பிடிப்புக்கான ஸ்டுடியோ தனியாக இல்லை. இதனால் சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு சென்று படபிடிப்பு நடத்தி வந்தனர். பயண நேரம், பயண செலவு ஆகியவற்றை குறைக்க முடிவு செய்து, டி.ஆர்.சுந்தரம் 1935 ஆம் ஆண்டு கோரிமேடு பகுதியில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் மாடர்ன் தியேட்டர்ஸ் என்ற படப்பிடிப்பு நிறுவனத்தை தொடங்கினார்.

முன்னாள் முதலமைச்சர்கள்
தென்னிந்திய அளவில் பிரபலமான இந்த நிறுவனத்தில் ஒளிப்பதிவு, படக்கோர்வை, டப்பிங், இசைக்கோர்வை, பிரிவியூ தியேட்டர் என பல வசதிகளும் இருந்துள்ளன. ஒரு முழுப்படத்தையும் தயாரிப்பதற்கான அத்தனை வசதிகளையும் கொண்டிருந்தது சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ். முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜானகி, என்.டி.ராமராவ் ஆகியோர் இந்த மாடர்ன் தியேட்டர் நிறுவனத்திற்காகப் பணியாற்றியுள்ளனர்.

வசனகர்த்தா
மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்து கருணாநிதி கதை வசனம் எழுதிய 'மந்திரி குமாரி' மாபெரும் வெற்றிப் படமாக அமைந்ததுடன் கருணாநிதி, எம்.ஜி.ஆர் என இருவர் வாழ்க்கையிலும் மிகப்பெரிய திருப்புமுனையாகவும் அமைந்தது. மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தின் ஆஸ்தான வசனகர்த்தாவாகத் திகழ்ந்து பல படங்களுக்கு வசனங்கள் எழுதிய கருணாநிதி அந்த காலகட்டத்திலேயே ஆயிரக்கணக்கில் ஊதியம் பெற்றார்.

புதுப்பொலிவு பெறும் ஆர்ச்
பின்னாளில் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிப்பு பணியை நிறுத்திக்கொண்டது. அந்த இடத்தில் தற்போது ஏராளமான வீடுகள் கட்டப்பட்டுவிட்ட நிலையில், நிறுவனத்தின் நுழைவு வாயிலில் தி மாடர்ன் தியேட்டர்ஸ் என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட நுழைவு வளைவு மட்டும் அப்படியே உள்ளது. இந்த நுழைவு வாயில் அமைத்து பல வருடங்கள் ஆகிவிட்டதால், தற்போது அதனை புதுப்பொலிவுடன் வடிமவமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தான் அந்த வழியில் சென்ற முதல்வர் ஸ்டாலின், தன் தந்தை பணிபுரிந்த நிறுவனத்தின் நுழைவுவாயில் முன்பு செல்ஃபி எடுத்துக்கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications