சென்னை, கன்னியாகுமரியை தொடர்ந்து.. வெள்ளத்தில் மிதக்கும் கிருஷ்ணகிரி மாவட்டம்
சேலம்: கிருஷ்ணகிரி சுற்றுவட்டாரத்தில் கடந்த சில தினங்களாக சாரல் மழை பெய்து வந்த நிலையில் கடந்த இரு தினங்களாக கனமழை பெய்து வருகிறது
Recommended Video
குறிப்பாக கிருஷ்ணகிரி, பர்கூர், காவேரிப்பட்டணம் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவு மழை பெய்து வருகிறது.
இதனால் மாவட்டத்தின் பல பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் இதுவரை 435 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகி உள்ளது.

மக்கள் அவதி
காவேரிப்பட்டணம் ஒன்றியத்திற்குட்பட்ட திம்மபுரம், சௌட்டஹள்ளி பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் கழிவு நீருடன் கலந்து வெளியேற வழியில்லாமல் தேங்கியுள்ளது. வீடுகளுக்குள் இரண்டடிக்கு மழைநீர் தேங்கி உள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

தொற்று பரவும் அபாயம்
மேலும், திம்மாபுரம் பஞ்சாயத்துக்குட்பட்ட மங்கம்மா என்பவரது வீடு முற்றிலும் இடிந்து சேதம் அடைந்துள்ள நிலையில் அவரது வீட்டிற்குள் பாம்பு ஒன்றும் வந்துள்ளது. விஷ ஜந்துக்களும், கழிவு நீரும் சூழ்ந்துள்ள இப்பகுதியில் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது எனவும் இப்பகுதியில் தேங்கியுள்ள தண்ணீரை உடனடியாக வெளியேற்ற வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தரைப் பாலம்
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் நேற்று முன்தினம் மாலை துவங்கி நேற்று அதிகாலை வரை, 99 மி.மீ., மழை பதிவானது. அதனால், சனத்குமார் நதியில் நேற்று அதிகாலை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அடவிசாமிபுரம் தரைப்பாலம் நீரில் மூழ்கியது. கிராமங்களுக்கு இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம்
இதனிடையே, வட அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நவம்பர் 17ம் தேதி மேற்கு மத்திய வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இதன் காரணமாக நவம்பர் 18ம் தேதி வரை ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாம்.

முதல்வர் விசிட்
மழை வெள்ளத்தால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில், வெள்ளம் பாதித்த பகுதிகளை முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று நேரில் சென்று பார்வையிட்டார். காலை 10 மணிக்கு, கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை பகுதியில் வெள்ளப்பாதிப்புகளை பார்வையிட்ட அவர், 11.30 மணிக்கு பேச்சிப்பாறை அணை , பிற்பகல் 12.40க்கு மனவாளகுறிச்சி பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட நிலங்களை பார்வையிட்டார். மதியம் 3 மணியளவில் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார். அரசு கவனம் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் மீது பட வேண்டும் என்று அந்த மாவட்ட மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications