நீயெல்லாம் மனுசனே கிடையாது.. 30 பந்துகளில் சதம் விளாசிய அபிஷேக் சர்மா.. ரோகித் சர்மா சாதனை க்ளோஸ்!
டெல்லி: ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர தொடக்க வீரர் அபிஷேக் சர்மா 30 பந்துகளில் சதம் விளாசி புதிய சாதனை படைத்துள்ளார். இதன் மூலமாக டி20 கிரிக்கெட்டில் அதிவேக சதம் விளாசிய இந்திய வீரர் என்ற ரோகித் சர்மாவின் சாதனையையும் முறியடித்துள்ளார். இது ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டன் இப்ராஹிம் ஜத்ரான் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் அபிஷேக் சர்மா - சஞ்சு சாம்சன் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. 2வது ஓவரிலேயே அபிஷேக் சர்மா தனது அதிரடியை தொடங்கினார்.

அந்த ஓவரிலேயே 6, 4, 6 என்று 17 ரன்களை விளாச, 3வது ஓவரில் 2 சிக்ஸ், 4 பவுண்டரி உட்பட 23 ரன்களை விளாசி தள்ளினார். பின்னர் முகமது நபி வீசிய 5வது ஓவரில் 4 சிக்ஸ், ஒரு பவுண்டரி விளாசி உச்சக்கட்ட வெறியாட்டம் ஆடினார். இதன் மூலமாக 16 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். அபிஷேக் சர்மாவின் அதிரடி இத்துடன் நிற்கவில்லை.
ஒவ்வொரு ஓவரிலும் சிக்ஸ், பவுண்டரி என்று விளாசி தள்ளிய அபிஷேக் சர்மா 30 பந்துகளில் சதத்தை எட்டி சாதனை படைத்தார். சிறப்பாக ஆடிய அபிஷேக் சர்மா 34 பந்துகளில் 11 சிக்ஸ், 9 பவுண்டரி உட்பட 108 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த ஆட்டம் இந்திய ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியது. அவர் ஆட்டமிழந்து வெளியேறிய போது அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர்.
இந்த இன்னிங்ஸில் 30 பந்துகளில் சதம் விளாசியதன் மூலமாக அபிஷேக் சர்மா பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். இதற்கு முன்பாக ரோகித் சர்மா 35 பந்துகளில் சதம் விளாசியதே, இந்திய கிரிக்கெட்டில் அதிவேக சதமாக அமைந்தது. அதனை அபிஷேக் சர்மா முறியடித்திருக்கிறார். அதேபோல் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் நாடுகளில், அபிஷேக் சர்மா 30 பந்துகளில் அடித்ததே அதிவேக சதமாக அமைந்துள்ளது.
இதற்கு முன் சிக்கந்தர் ராசா மற்றும் ஃபின் ஆலன் ஆகியோர் 33 பந்துகளில் சதம் விளாசியது சாதனையாக இருந்தது. இந்த சாதனையை முறியடித்து அபிஷேக் சர்மா புதிய வரலாறு படைத்துள்ளார். அதேபோல் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அபிஷேக் சர்மா அடிக்கும் 3வது சதம் இதுவாகும். ஐபிஎல் மற்றும் சையத் முஷ்டாக் அலி தொடரை சேர்த்து அபிஷேக் சர்மாவின் 10வது சதம் இதுவாகும்.


Click it and Unblock the Notifications
