17 வயது சின்னப் பையனை அழைத்த சிஎஸ்கே.. ஒரு வழியாக திருந்திய சென்னை அணி.. காரணம் என்ன?
சென்னை: ரஞ்சி டிராபி தொடரில் மும்பை அணிக்காக ஆடிய ஆயுஷ் மாத்ரே மீண்டும் சிஎஸ்கே அணி நிர்வாகத்தால் ட்ரையல்ஸ்-க்கு அழைக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. எந்த வீரருக்கும் காயம் ஏற்படாத நிலையில், ஆயுஷ் மாத்ரேவை சிஎஸ்கே அணி நிர்வாகம் சோதனைக்கு அழைத்திருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சிஎஸ்கே அணியும் மும்பை அணியின் பாணியில் இளம் வீரர்களை அணிக்குள் கொண்டு வர திட்டமிடுகிறதா என்ற விவாதம் தொடங்கியுள்ளது.
18வது சீசனுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சிஎஸ்கே அணி பரிதாபமான நிலையில் உள்ளது. சிஎஸ்கே அணி இதுவரை ஆடிய 3 போட்டிகளில் 2 தோல்வி, ஒரு வெற்றியுடன் புள்ளிப் பட்டியலில் 7வது இடத்தில் இருக்கிறது. ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி சொந்த மண்ணிலேயே தோல்வியடைந்தது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

இளம் வீரர்களுக்கான சீசன்
இதனால் நாளை மறுநாள் சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவுள்ள டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே கம்பேக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சீசனை பொறுத்தவரை இளம் வீரர்களின் ஐபிஎல் சீசன் என்றே சொல்லலாம். ஏனென்றால் அனுபவ வீரர்களை விடவும் இளம் வீரர்களே அந்தந்த அணிகளுக்காக வெற்றியை தேடி கொடுக்கிறார்கள்.
அசத்தும் இளைஞர்கள்
பஞ்சாப் அணிக்காக பிரியன்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங், நேஹல் வதேரா ஆகியோரும், டெல்லி அணிக்காக விப்ராஜ் நிகம், அஷுதோஷ் சர்மா ஆகியோரும், லக்னோ அணிக்காக திக்வேஷ் ராதே, மணிமாறன் சித்தார்த் ஆகியோரும், மும்பை அணிக்காக விக்னேஷ் புத்தூர், அஸ்வனி குமார் ஆகியோரும், ஐதராபாத் அணிக்காக அனிகேத் வர்மா, குஜராத் அணிக்காக சாய் சுதர்சன் என்று இளம் வீரர்கள் பட்டையை கிளப்பி வருகிறார்கள்.
சிஎஸ்கேவில் யாருமில்லை
ஆனால் சிஎஸ்கே அணியில் இதுவரை எந்த இளம் வீரருக்கும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அன்சுல் கம்போஜ், வன்ஷ் பேடி, கமலேஷ் நாகர்கோட்டி, ஷேக் ரஷீத் உள்ளிட்ட வீரர்கள் இருந்தாலும், யாருக்கும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இதனிடையே பிரியன்ஷ் ஆர்யா, நேஹல் வதேரா, விக்ராக் நிகம் உள்ளிட்ட வீரர்களை சிஎஸ்கே அணிக்கு பரிந்துரை செய்ததாக முன்னாள் வீரர் வித்யூத் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சர்ச்சையான வீடியோ
இந்த வீடியோவால் சிஎஸ்கே ரசிகர்கள் கொந்தளித்த நிலையில், அஸ்வின் தனது யூட்யூப் பக்கத்தில் இருந்து அந்த வீடியோவையே நீக்கி இருக்கிறார். இந்த நிலையில் சிஎஸ்கே அணியும் மும்பை அணியின் ஸ்டைலை பின் தொடர முடிவு எடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது. ரஞ்சி கிரிக்கெட்டில் மும்பை அணிக்காக ஆடி வரும் ஆயுஷ் மாத்ரேவை சிஎஸ்கே அணி மீண்டும் ட்ரையல்ஸ்க்கு அழைத்திருக்கிறது.
ஆயுஷ் மாத்ரேவுக்கு அழைப்பு
ராஜ்கோட்டில் உள்ள அவர் சிஎஸ்கே அணியின் அழைப்பை ஏற்று ட்ரையல்ஸ் கொடுக்கவுள்ளார். இதுதொடர்பாக சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன் கூறுகையில், ஆயுஷ் மாத்ரேவை ட்ரையல்ஸ்க்கு மட்டுமே அழைத்துள்ளோம். எங்களின் ஸ்கவுட்டிங் நிர்வாகிகளை அவர் தொடர்ந்து ஈர்த்து வருகிறார். தற்போது சிஎஸ்கே அணியில் யாருக்கும் காயமில்லை.
சிஎஸ்கே விளக்கம்
ஒருவேளை காயம் ஏற்பட்டால், மாற்று வீரர்களை ஒப்பந்தம் செய்வோம். அதனால் ஆயுஷ் மாத்ரேவை ஒப்பந்தம் செய்ய அழைக்கவில்லை. அவரை ட்ரையல்ஸ் மட்டுமே பார்க்கிறோம் என்று தெரிவித்துள்ளார். கடந்த ரஞ்சி தொடரில் மும்பை அணிக்காக 8 போட்டிகளில் விளையாடி 2 சதங்கள் உட்பட 471 ரன்களை விளாசி இருக்கிறார்.
யார் இந்த ஆயுஷ் மாத்ரே?
அதேபோல் விஜய் ஹசாரே தொடரில் 7 போட்டிகளில் விளையாடி 452 ரன்களை விளாசி இருக்கிறார். 17 வயதாகும் ஆயுஷ் மாத்ரேவை கடந்த நவம்பர் மாதத்திற்கு முன்பாகவே சிஎஸ்கே அணி நிர்வாகம் சோதனை செய்து பார்த்தது. தற்போது மீண்டும் சோதனைக்கு அழைத்திருப்பதால், கடைசி நேரத்தில் ஒப்பந்தம் செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் 3 ஆண்டுகளுக்கு முன் பதிரானாவையும் அப்படிதான் சிஎஸ்கே அணி ஒப்பந்தம் செய்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications