சென்னை அடகு கடைக்குள் கத்தியோடு புகுந்த கொள்ளையர்கள்.. போராடி தப்பிய உரிமையாளர்
சென்னை: அடகு கடைக்குள் கத்தியோடு புகுந்த கொள்ளையர்களை உரிமையாளர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திவிட்டு நகைகளை அபேஸ் செய்ய முயன்ற சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள உத்தண்டி பகுதியில் அடகுக் கடை நடத்தி வருபவர் பனையூரை சேர்ந்த சுரேஷ்.
நேற்றுமுன்தினம் மதியம் 12.30 மணியளவில் சுரேஷ் கடையில் தனியாக இருந்தார். அப்போது வாடிக்கையாளர்கள் போர்வையில் மூன்று நபர்கள் அங்கு சென்றுள்ளனர்.

சந்தேகம்
கோவளத்திலிருந்து வருவதாகவும், நகைகளை அடகு வைக்க வேண்டும் என்றும் அம்மூவரும், கூறியுள்ளனர். அவர்களது நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதால், நகையை அடகு வைக்க ஏற்க முடியாது என்று சுரேஷ் கூறியுள்ளார்.

தள்ளிவிட்டு ஓடினார்
இதனால் ஏமாற்றமடைந்த அம்மூவரும், சுரேஷை கொலை செய்யும் நோக்கத்தில் தாக்கியுள்ளனர். அவரது வாயில் துணியை சொருகியுள்ளனர். ஆனாலும், தீரத்தோடு போராடிய சுரேஷ் கொள்ளையர்களை தள்ளிவிட்டு வெளியே ஓடி வந்து கத்தி கூச்சலிட்டார்.

தப்பியோட்டம்
சுரேஷின் சத்தம் கேட்டு பக்கத்தில் உள்ள கடைக்காரர்கள் அங்கு திரண்டனர். இதை பார்த்து பயந்த மர்ம நபர்கள் தப்பியோடிவிட்டனர்.
சிசிடிவி காட்சிகள்
இந்த பரபரப்பு காட்சிகள், கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து சுரேஷ் கானத்தூர் குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தபோது, அந்த மனுவை பெற போலீசார் மறுத்ததோடு, யாரிடமும் இதுகுறித்து சொல்லக்கூடாது என்று தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொள்ளையர்கள் அட்டகாசம், போலீசாரின் மெத்தனம் போன்றவை தென் சென்னை மக்களிடம் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!