திருமணம் ஆகாத இளைஞர்கள் மது அருந்தினால் 5000 அபராதம்.. நாகை அருகே ஊர் கட்டுப்பாடு
நாகப்பட்டினம்: பலரும் மதுவிற்கு அடிமையாகி வாழ்க்கையை தொலைக்கும் நிலையில், நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே விழுந்தமாவடி கிராமத்தில் மது அருந்தக்கூடாது என்று ஊர் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. திருமணம் ஆகாத இளைஞர்கள் மது அருந்தினால் 5000 அபராதம் விதிக்கப்படும் என்றும், திருமணம் ஆனவர்கள் மது அருந்திவிட்டு ஏதேனும் பிரச்சனை செய்தால் 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்கள். இந்த அறிவிப்பு தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது. இதனை பலரும் வரவேற்றுள்ளார்கள்.
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே விழுந்தமாவடி கிராமத்தில் வைக்கப்பட்டுள்ள பேனரில் கூறுகையில், "பொதுமக்கள் கவனத்திற்கு 💥
மதுவை ஒழிப்போம்! மக்களை காப்போம்!!
நமது கிராமத்தின் பொது அமைதி, இளைஞர்களின் நலன், சுகாதாரத்தைக் கருத்தில்கொண்டு 02.08.2026 முதல் ஊரில் திருமணம் ஆகாதவர்கள் (இளைஞர்கள்) மது அருந்த முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும் திருமணம் ஆகாதவர்கள் மது அருந்துவதை ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டால் ரூ. 5000/- அபராதம் வசூலிக்கப்படும்.
இதனுடன் திருமணம் ஆனவர்கள் குடிபோதையில் வீட்டிலோ அல்லது பொது இடத்திலோ பிரச்சனைகள் ஏற்பட்டு நமது ஊருக்கு வரும் பட்சத்தில் ரூ. 5000/- அபராதம் வசூலிக்கப்படும்.
இந்த நல்ல முயற்சிக்கு ஊர் பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இன்றைய சரியான முடிவு நாளைய சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும்.
மதுவை தவிர்ப்போம், நம் எதிர்கால வாழ்க்கையையும்,
நம் சமூகத்தையும் பாதுகாப்போம்.
இப்படிக்கு
ஊர் பஞ்சாயத்தார்கள், இளைஞர்கள், ஊர் பொதுமக்கள்" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் பேனரில் உள்ள விஷயங்களை மைக் மூலம் ஊரில் உள்ள அனைவருக்கும் தெருத்தெருவாக தெரிவிக்கவும் செய்துள்ளார். ஒவ்வொரு ஊரிலும் மது அருந்துவோரின் எண்ணிககை மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள ஆண்களில் 34 சதவீதம் பேர் தினசரி குடிப்பதாக ஒரு புள்ளி விவரங்கள் கூறுகின்றன.. ஏனெனில் ஆண்டுக்கு 50 ஆயிரம் கோடிக்கு மேல் மதுவிற்பனையாகி உள்ளது. அரசுக்கு மதுவின் மூலம் பல ஆயிரம் கோடி வருமானம் வருகிறது. அதாவது பல ஆயிரம் கோடி பணத்தை மக்கள் மதுவிற்காகவே இழக்கிறார்கள். மக்கள் வறுமையில் தவிக்க மதுவிற்கு செலவு செய்யும் பணமே முதன்மையான காரணமாக இருக்கிறது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை, அரசு பள்ளி, அரசு மருத்துவமனை, அரசு சேவைகள் எல்லாம் தரமாக இருக்கிறது. அதேபோல் வேலைவாய்ப்பை பொறுத்தவரை சர்வ சாதாரணமாக ஒரு கணவன் மனைவி ஒன்றுமே தெரியவில்லை என்றாலும், திருப்பூர், கோவை, சென்னை, செங்கல்பட்டு, கரூர், ஈரோடு, நாமக்கல், கிருஷ்ணகிரி, ஓசூர், சேலம், என தமிழ்நாட்டின் எங்கு வேண்டுமானாலும் மாதம் 15000 என இரண்டு பேர் 30 ஆயிரம் சம்பாதிக்க முடியும். 12 மணி நேரம் இருவரும் வேலை செய்ய முடியும் என்றால் குறைந்தது இரண்டு பேரும் சேர்ந்து 40 ஆயிரம் வரை தாரளமாக சம்பாதிக்க முடியும். வேலை தெரிந்தவர்கள் என்றால் இன்னும் அதிகமாகவே சம்பாதிக்க முடியும். அப்படி சம்பாதிக்கும் பணத்தை முறையாக சேமித்தால் கடனில்லாத, தரமான வாழ்க்கை வாழ முடியும்.
துரதிஷ்டவசமாக மதுபழக்கத்தால் பலரும் சரியாக வேலைக்கு போகாமல், மதுவிற்கே தினமும் 200 முதல் 500 வரை செலவு செய்கிறார்கள். இதனால் வருமானத்தை இழப்பதுடன், இளம் வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறக்கிறார்கள். இளம் வயதில் மதுபழக்கத்திற்கு ஒருவர் ஆளாகவில்லை என்றால், பின்னாளில் மது பழக்கத்திற்கு அடிமையாக மாட்டார். அப்படி இளம் தலைமுறையை மாற்ற வேண்டும் என்றால், அவர்களிடம் விழிப்புணர்வு மற்றும் கட்டுப்பாடுகள் வேண்டும். அந்த வகையில் நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே விழுந்தமாவடி கிராமத்தில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்தை பலரும் வரவேற்கிறார்கள்.


Click it and Unblock the Notifications
