For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

17 ஆண்டுகால பயணம்… இறுதிக்கட்டத்தை எட்டும் ஜெ. சொத்து குவிப்பு வழக்கு- விரைவில் தீர்ப்பு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

பெங்களூரு: ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஜூன் இறுதியில் அல்லது ஜூலை முதல்வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

259 சாட்சிகளின் வாக்குமூலங்களை அடிப்படையாக வைத்து 14 நாட்கள் வாதிட்ட அரசு வழக்கறிஞர் பவானிசிங், தனது வாதத்தை மொத்தமாக தொகுத்து அளித்துள்ளார்.

7yrs on, Jaya assets case back to square one

திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் தரப்பு வாதம் 15ம் தேதி முன்வைக்கப்பட உள்ளது. ஜெயலலிதா தரப்பு வாதம் 19ம் தொகுத்து அளிக்கப்பட உள்ளது.

1997 ம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில் ஜெயலலிதா மீது சொத்துக்குவிப்பு வழக்கு தொடரப்பட்டது. 2001ம் ஆண்டு ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்த பின்னர் 2003ம் ஆண்டு பெங்களூருக்கு மாற்றக் கோரி திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் மனு தாக்கல் செய்தார்.

அன்றுமுதல் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கு விசாரணைக்கு தடை கேட்டு புதுப் புது மனுக்களை ஜெயலலிதா தரப்பு தாக்கல் செய்துவருகிறது. ஆனாலும் அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு வருகின்றன.

அதிமுக தரப்பு வாதம்

கடந்த 5-ம் தேதி பெங்ளுரூரு சிறப்பு நீதிமன்றத்தில் 'சொத்துக்குவிப்பு வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள கம்பெனிகளை விடுவிக்கக்கோரி நாங்கள் தாக்கல் செய்துள்ள மனுக்களை முதலில் விசாரிக்க வேண்டும். அதுவரை மூல வழக்கு விசாரணையை நிறுத்திவைக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன் அடிப்படையில் விசாரணை நடத்த வேண்டும்' என்று ஜெயலலிதாவின் வழக்கறிஞர் பி.குமார் வாதிட்டார். ஆனால், அதனை அரசு வழக்கறிஞர் மறுத்தார்.

பெங்களூரு நீதிபதி மறுப்பு

இரண்டு தரப்பு விசாரணையையும் கேட்ட நீதிபதி ஜான்மைக்கேல் டி.குன்கா, 'இந்த சொத்துக்குவிப்பு வழக்கு கடந்த 14 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இந்த வழக்கை தினமும் நடத்தி விரைந்து முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த அடிப்படையில் விசாரணையைத் தொடர்ந்து வருகிறோம்.

மனுக்கள் தள்ளுபடி

தங்களை விடுவிக்க வேண்டும் என்று நிறுவனங்கள் தாக்கல் செய்துள்ள மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்டோம். ஆனால், மூல வழக்கை நிறுத்திவிட்டு இந்த மனுவை விசாரிக்க வேண்டும் என்று தடைபோட முடியாது. மூல வழக்கின் தீர்ப்பை வழங்குவதற்கு முன் இந்த கம்பெனிகள் சம்பந்தமான மனு மீது தீர்ப்பு வழங்கப்படும்' என்று தீர்ப்பளித்து உள்ளார். ''இதேபோல் வேறு கோரிக்கைகளை வைத்து அந்த கம்பெனிகள் வேறு சில மனுக்களையும் தாக்கல் செய்திருந்தது. அதனையும் நீதிபதி குன்கா தள்ளுபடி செய்தார்.

இறுதிக்கட்டத்தை எட்டிய வழக்கு

இதைத் தொடர்ந்து அரசு வழக்கறிஞர் சாட்சியம் அளித்த 259 என்னென்ன சொல்லியிருக்கிறார்கள் என்பதை தொகுத்துக் கூறினார் பவானி சிங். சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணை அதிகாரியாக இருந்தவர் நல்லம நாயுடு. அவர் அளித்த சாட்சியத்தின் சாராம்சத்தையும் பவானி சிங் தொகுத்துக் கூறினார்.

திமுக தரப்பு வாதம்

அரசு வழக்கறிஞர் பவானி சிங் இந்த வழக்கின் முக்கியமான பகுதிகள் அனைத்தையும் தொகுத்து கூறிய உடன் , மே 15-ம் தேதி தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் தரப்பு வாதங்களை எழுத்து மூலமாக தாக்கல் செய்ய இருக்கிறார்கள்.

ஜெ. தரப்பு வாதம்

மே 19-ம் தேதி குற்றம்சாட்டப்பட்டவர்கள் தங்களது தரப்பு சாட்சியங்களின் வாதங்களைத் தொகுத்துச் சொல்வார்கள். சுமார் ஒரு மாதம் இதற்கு ஆகலாம். இந்த அடிப்படையில் பார்த்தால் ஜூன் இறுதிக்குள் அனைத்தும் முடிந்து ஜூலை முதல் வாரம் தீர்ப்பு தேதி அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உச்சநீதிமன்றம் தள்ளுபடி

இதே போல லெக்ஸ் ப்ராபர்டீஸ் நிறுவனம் தொடர்ந்த வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ். சௌகான், எம்.ஒய்.இக்பால் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் கடந்த சில தினங்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு விசாரணையின்போது முடக்கப்பட்ட தனியார் நிறுவனங்களின் சொத்துகளை விடுவிக்க கோரி தொடர்ந்த வழக்கை விசாரித்த பிறகே, பிரதான வழக்கை விசாரிக்க வேண்டும் என்றும், அது வரை முதலமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

ஜூலைக்கு ஒத்தி வைப்பு

இதைத்தொடர்ந்து, கர்நாடக அரசு சார்பில் ஆஜரான சித்தார்த் லூத்ரா, பிரதான வழக்கோடு, சொத்துக்களை விடுவிக்கக் கோரும் வழக்கும் ஒரே நேரத்தில் விசாரிக்கப்படும் என தெரிவித்தார். வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்ததுடன், வழக்கு விசாரணையை ஜூலை முதல் வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

அதிர்ச்சியில் ஜெயலலிதா

சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணையில் எப்படியாவது தடை பெற்று விடலாம் என்று எதிர்பார்த்திருந்த ஜெயலலிதா தரப்பு, சிறப்பு நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதால் அதிர்ச்சியடைந்திருப்பதாக கூறப்படுகிறது. எப்படியோ 17 ஆண்டுகளாக நடைபெற்று வரும் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் விரைவில் தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
After 17years, and passing through the hands of five public prosecutors and six judges, the highly politicised disproportionate assets case against Tamil Nadu CM J Jayalalithaa is back to where it was — mired in controversies over alleged subversion of the trial.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X