For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

''வருத்தப்படாத வாலிபால் சங்க தலைவராக இருந்துவிடாதீர்கள்''.. வைகோவுக்கு ஒரு கடிதம்

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கியது முதல் எத்தனை தோல்விகள்.. அதுவும் சட்டசபை, லோக்சபா தேர்தல்களில் அதன் தலைவர் கூட தோற்றுக் கொண்டே இருக்கிறார்.. இத்தனை தோல்விகளுக்குப் பின்னரும் "காலம் வசப்படும் கடமை ஆற்றுவீர்" என்று கடிதம் எழுதுகிற மரியாதைக்குரிய அண்ணன் வைகோ அவர்களுக்கு ஒரு தமிழனின் கடிதம் இது..

மதிப்புக்கும் மரியாதைக்குரிய அண்ணன் வைகோ அவர்களுக்கு,

வணக்கம். மதிமுக தொடங்கிய காலத்தில் மிக அருகே இருந்தும் பார்த்து இருக்கிறேன். பத்திரிகையாளராகவும் அருகே இருந்து பார்த்திருக்கிறேன். செய்தியாளர்கள் கூட்டங்களில் உங்களுடன் வாதிட்டும் இருக்கிறேன்..

A letter to MDMK leader Vaiko

திமுகவில் நீங்கள் இருந்த போது கோவை மாநாட்டில் மதவெறியும் மக்கள் சீரழிவும் என்ற மதிய நேர ஆக்ரோச உரையை இன்னமும் மறக்காமல் இருப்பவன் நான்.. அப்போது கர்ஜித்தீர்களே.. "இதோ அடல் பிகாரி வாஜ்பாய்களைக் கேட்கிறேன்.. லால் கிஷன் அத்வானிகளை கேட்கிறேன்.. நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள்? உங்கள் பூர்வோத்திரம் என்ன? யூ கேம் த்ரூ த கைபர் போலன் பாஸ்.. நீங்கள் கைபர் போலன் கணவாய் வழிவந்வர்கள்தானே? என்று சிலிர்த்தது இப்போதும் என்காதுகளில் எதிரொலிக்கிறது.

இத்தனையும் சொல்வது உங்களுக்கு கடிதம் எழுத எனக்கு உரிமை இருக்கிறது என்பதற்காக.. இது அறிவுரைக் கடிதம் அல்ல என்பதை தொடக்கத்திலே சொல்லியும் விடுகிறேன்.

நிற்போம்... இந்த கடிதத்தின் நோக்கமே மறுமலர்ச்சி திமுக எதிர்காலத்தில் என்ன செய்யப் போகிறது என்பதுதான் அண்ணா.

தமிழக அரசியலில் சளைக்காமல் போராடுகிற போராளித் தலைவர் நீங்கள் என்பதை உங்களுக்கு எதிரிகளாக இருப்பவர்களும் கூட ஏற்றே தீருவார்கள்.. ஆனால் அந்த சளைக்காத போராளித்தனம் தேர்தல் அரசியலில் சல்லிக்காசுக்கும் பயன்படாமல் போகிறதே!

தமிழகத்தில் இரு பெரும் திராவிட அரசியல் கட்சிகளுக்கு மாற்றான ஒரு மகத்தான தலைவராக உதயமானீர்கள்.. தேர்தல் அரசியல் களத்தில் கூட்டல் கழித்தல்களுக்காக அந்த மாற்றுத் தலைமையை கூட்டணிகளின் பெயரால் இழந்தீர்கள்..

தற்போது முடிவடைந்த லோக்சபா தேர்தலில் திராவிட அரசியல் கட்சிகளுக்கு மாற்று அணியாக பாஜகவை தேர்வு செய்தீர்கள்.. சரி பாரதிய ஜனதா கட்சி தேசிய கட்சி.. அதன் தலைமையில் ஒரு அணி அமைகிறது என்றால் அதில் உங்களுக்கு எத்தனையாவது இடம்?

அதுவும் பாஜக கூட்டணியில் முதல் ஆளாக போய் சேர்ந்தீர்கள்.. கடைசி ஆளாக குறைவான சீட்டுகளைக் கொடுத்து ஓரங்கட்டி உட்கார வைத்தார்கள்.. அத்தனை மாதமும் எதுவும் பேசாமல் அமைதியாகவும் இருந்தீர்கள்..

உங்களுக்கான பேரம் பேசு சக்தி இப்படியா புதைகுழிக்குப் போவது? சரி தமிழகத்தில் மாற்று அணிக்கு விதை போட்டு வேர்பிடிக்க வைத்துவிட்டீர்கள். அடுத்த சட்டசபை தேர்தலுக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?

நீங்கள்தான் 2016-ல் முதல்வர் என்று காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் சொல்கிறார்

உங்களது பங்காளிக் கட்சியான தேமுதிகவினரோ 2016-ல் கேப்டன் தான் முதல்வர் என்று கூட்டந்தோறும் முழங்குகிறார்.. உங்கள் வாஞ்சைக்குரிய சகோதரர் விஜயகாந்தின் கண்களில் அந்த நம்பிக்கை ஜெகஜோதியாக ஒளிர்விட்டுக் கொண்டிருக்கிறது

மற்றொரு கூட்டாளிக் கட்சியான பாட்டாளி மக்கள் கட்சியோ 2016-ல் வன்னியர் ஆட்சி என்று வசனம் பேசிக் கொண்டிருக்கிறது!

நீங்கள் 'காலம் வசப்படும் கடமை ஆற்றுவீர்' என்று கடிதம் எழுதிக் கொண்டே இருந்துவிட்டு தேர்தல் நேரத்தில் இப்போது செய்தது போலவே அனைவருக்கும் கிடைத்தது போக எஞ்சிய இடங்களை வாங்கப் போகிறீர்களா?

அல்லது வழக்கம்போலவே தமிழகத்தின் வாழ்வாதார பிரச்சனைகளுக்காக நடைபயணம் கிளம்பப் போகிறீர்களா? அல்லது கலிங்கப்பட்டியில் வாலிபால் போட்டிகளை நடத்திக் கொண்டே இருக்கப் போகிறீர்களா?

மே 16-ந் தேதியிட்ட சங்கொலியில் நீங்கள் எழுதிய கடிதத்தில், "பல இடங்களில் கழகத்தின் அமைப்புகள் முறையாக இல்லை." என்கிறீர்கள்.. இன்னமுமா மதிமுக முறையான அமைப்பாக இல்லாமல் இருக்கிறது? எனக்குப் புரியவில்லை. 20 ஆண்டுகாலமாக என்னதான் செய்து கொண்டிருந்தீர்கள் என்பதும் தெரியவில்லை.

மற்ற கட்சிகளுக்கு பணம் இருக்கிறது.. வசதி இருக்கிறது.. ஊடகம் இருக்கிறது என்று எத்தனை காலம் புலம்பிக் கொண்டே இருப்பீர்கள்? நீங்கள் தேர்தல் அரசியல் கட்சிதானே.. உண்டியல் ஏந்துகிற கம்யூனிஸ்டுகளிடம் பல நூறு கோடி ரூபாய் இருக்கிறது.

நீங்கள் தேர்தல் அரசியல் பாதையில் பயணிக்கிற போது "அரசியல்" செய்யாமல் நான் நேர்மையோடும் நெஞ்சுரத்தோடும் இருக்கத்தான் போகிறேன் என்று சொல்லிக் கொண்டு இருந்தால் எத்தனை காலம்தான் சொந்தக் காசில் தொண்டர்கள் சூனியம் வைத்துக் கொண்டே இருப்பார்கள்?

தேர்தல் பாதையில் சுயமரியாதை, கவுரவம் என எப்படி பார்க்கிறீர்கள்? ஒரே நேரத்தில் காங்கிரஸோடும் பாரதிய ஜனதாவோடும் பேரம் பேசுகிற வேலையை எந்த வித விமர்சனங்களைப் பற்றியும் கவலைப்படாமல் செய்தவர் விஜயகாந்த்.. தேசியத்துக்கு எதிரி திராவிடம் என நமக்கு தெரியும்.. ஆனால் தேசிய திராவிட முற்போக்கு கழகம் என மொட்டைத் தலைக்கும் முழங்காலும் முடிச்சுப் போட்டு காண்பித்தவர் விஜயகாந்த்..

உங்களது மற்றொரு பங்காளியான பாமகவை பாருங்கள்.. வானம் உள்ள வரை.. காற்றுள்ள வரை.. தேசியக் கட்சிகளோடும் திராவிடக் கட்சிகளோடும் கூட்டணியே கிடையாது என்று சொல்லிவிட்டு சிங்கங்கள் சிறுநரிகளிடம் பிச்சை கேட்பதா என சொல்லிவிட்டு தேசியக் கட்சியோடும் சிறுநரிகளோடு கூட்டணி வைக்கவில்லையா?

தேர்தல் அரசியல் பாதைக்கும் போய்விட்ட உங்களுக்கு ஏன் இப்படி ஒரு கூச்சம்? நீங்கள் போராளித் தலைவராக இருந்தால் பேசாமல் அரசியல் பாதையைவிட்டுவிட்டு இருக்கின்ற அமைப்புகளை ஒருங்கிணைத்து தந்தை பெரியாரைப் போல உருவெடுங்கள்..

போராளித் தலைவராக இருந்து கொண்டே அரசியல் தலைவராகவும் ஆவதற்கு போராடிக் கொண்டே நீங்கள் இருங்கள்.. ஆனால் எத்தனை தோல்விகளைத்தான் உங்கள் தொண்டர்கள் தாங்குவார்கள்?

மக்களவை தேர்தல் களத்தில் அதிரடியாக போய் அழகிரியைப் பார்த்தீர்கள் அல்லவா? அதுபோன்ற அரசியல் அதிரடிகளைத்தான் தமிழகம் எதிர்பார்க்கிறது..

இதோ இப்போது தேர்தல் முடிந்துவிட்டது.. நீங்கள்தான் தமிழகத்தில் வாக்கு வங்கியை தக்க வைத்த ஒரே கட்சி.. இப்போது பாஜக 5.5% வாக்குகள் வாங்கியிருக்கிறது. தேமுதிகவும் பாமகவும் வாக்கு வங்கியை இழந்திருக்கிறார்கள்.. நீங்கள் தோற்றாலும் உங்கள் வாக்கு சதவீதம் அப்படியே இருக்கிறது. இதைவைத்தும் டெல்லி செல்வாக்கை பயன்படுத்தியும் உங்களுக்கான இடத்தை முன்னேற்றிக் கொள்ள வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம்.

"முன்னேறிச் செல்" என்று சூளுரைத்தல் மட்டும் போதாது அண்ணா.. முன்னேறிச் சென்று காட்டுங்கள்... அப்போதுதான் தொண்டர்களுக்கு நம்பிக்கை வரும்..!

இன்னமும் இந்த மண்ணுக்கான மக்களுக்கான போராட்டங்களை தேர்தல் வாக்குகளாக நம்பாதீர்கள்.. அப்படியே செய்து கொண்டிருந்தால் நீங்கள் இலங்கையில்தான் போட்டியிட வேண்டும் என்ற ஏகடியங்களே எதிரொலிக்கும்..

இன்னமும் தேர்தல் அரசியல் பாதைக்கு திரும்பாமல் முழங்கிக் கொண்டே இருந்தால் "வருத்தப்படாத வாலிபால் சங்கத்தின் தலைவராகவே" இருந்துவிட வேண்டியதுதான்..

மதிமுக சட்டசபை தேர்தலில் வென்று நீங்கள் சாதிக்க வேண்டும் என்ற வேட்கை எனக்கே இருக்கும்போது உங்கள் பின்னால் அணிவகுக்கும் அத்தனை லட்சோப லட்சம் கழக கண்மணிகளுக்கு இருக்காதா?

அவர்களுக்காக உங்களை மாற்றித்தான் ஆக வேண்டும்.. ஒரு முழுமையான அரசியல்வாதியாக உருவெடுக்க வேண்டியதும் வியூகம் வகுக்க வேண்டியதும் உங்கள் கடமை...

இக்கடிதம் உங்களுக்கான அறிவுரைக் கடிதம் அல்ல.. ஒரு தமிழனின் உள்ளக் குமுறல்.. அவ்வளவே

English summary
This is a open letter to MDMK leader Vaiko who lost Lok Sabaha polls on 2016 Assembly
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X