For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எம்.எல்.ஏவாக தோற்றுவிட்டேன்... துறைமுக தொகுதி மக்களிடம் மன்னிப்பு கேட்ட பழ.கருப்பையா

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: என்னுடைய எம்.எல்.ஏ வாழ்க்கை தோல்வியடைந்து விட்டது நான் துறைமுகம் தொகுதி மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன் என்று அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ பழ. கருப்பையா கூறியுள்ளார்.

பேச்சாளரும் எழுத்தாளருமான பழ. கருப்பையா, 2011ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் துறைமுகம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் நடந்த துக்ளக் பத்திரிக்கையின் ஆண்டுவிழாவில் கலந்து கொண்ட பழ.கருப்பையா, அமைச்சர்கள் கொள்ளையடிக்கிறார்கள்; வைப்பாட்டிகள் வீட்டுக்கு போவதுகூட பொதுப்பணி என்பதாகிவிடுகிறது என அதிரடியாக தாக்கிப் பேசினார்.

தமிழகத்தில் இன்று அமைச்சரும், தலைமைச் செயலாளரும் கூட்டுச்சேர்ந்து கொள்ளை அடிக்கும் நிலை வந்துவிட்டது. அமைச்சர்கள் என்றால், அடாவடித்தனம் வந்துவிடுகிறது; ஐந்தாறு பி.ஏ-க்கள் வைத்துக்கொள்கிறார்கள். சால்வை எடுக்கக்கூட ஒரு பி.ஏ தேவைப்படுகிறது என்று கூறினார்.

அப்போதே அவர் கட்சியை விட்டு நீக்கப்படலாம் என்று கூறப்பட்ட நிலையில் நேற்று ஜெயலலிதா விடுத்துள்ள அறிவிப்பில், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்களும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், வட சென்னை தெற்கு மாவட்டச் சேர்ந்த பழ.கருப்பையா (துறைமுகம் சட்டமன்ற உறுப்பினர்) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் ஆனந்த விகடன் இதழுக்கு பழ. கருப்பையா அளித்துள்ள பேட்டியில், அதிமுகவினர் பற்றியும், கவுன்சிலர்கள் பற்றியும் அரசியல்வாதிகள் பற்றியும் சரவெடியாக வெடித்துள்ளார்.

இன்றைய அரசியல்

இன்றைய அரசியல்

`துக்ளக்' பத்திரிகையின் ஆண்டு விழாவின் தலைப்பு `இன்றைய அரசியல்'. எனவே, இன்றைய அரசியல் எப்படி இருக்கிறது என்பதைப் பேசினேன். மேடையில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும் இருந்தார். `காந்தி வளர்த்த காங்கிரஸை, நக்மாதான் வளர்க்க முடியும் எனக் கருதுவதுதான் இன்றைய அரசியல்' எனப் பேசினேன். இளங்கோவன் சிரித்துக்கொண்டார்.

அதிமுகவினர் செயல்பாடு

அதிமுகவினர் செயல்பாடு

ஒவ்வொரு தொண்டனின் திருமண வீட்டுக்கும் போய் மொய் எழுத வேண்டும். யாராவது இறந்துவிட்டால் அங்கே சென்று அவர்களுக்குத் தேவையானதைச் செய்ய வேண்டும். பிறகு, இலவசப் பொருட்கள் கொடுக்கும் நிகழ்ச்சிகளில் முண்டியடித்துக் கொண்டு பங்குபெற வேண்டும். முக்கியமாக, புகைப்படத்தில் நம் முகமும் தெரிய வேண்டும். அந்தப் படத்தை, கட்சிப் பத்திரிகையிலும் தொலைக்காட்சியிலும் வரவழைக்க வேண்டும். இதுதான் அரசியல்.

கவுன்சிலரை கவனிக்கணும்

கவுன்சிலரை கவனிக்கணும்

ஒவ்வொரு கவுன்சிலருக்கும் நான்கு வீடுகள்; மூன்று வைப்பாட்டிகள், இரண்டு கார்கள். நீங்கள் வீடு கட்டினால், உங்கள் வீட்டுக் கழிவுநீர்க் கால்வாயை, பொது வாய்க்காலோடு இணைப்பதாக இருந்தாலும் சரி, குடிநீர்க் குழாய் இணைப்பு பெறுவதாக இருந்தாலும் சரி, அதிகாரியைப் போய்ப் பார்த்தால், அவர் கவுன்சிலரைப் பார்க்கச் சொல்வார். கவுன்சிலரை நீங்கள் `பார்க்கவேண்டிய விதத்தில் பார்க்காவிட்டால்', ஓர் ஆண்டு ஆனாலும் நீங்கள் கிரகப்பிரவேசம் நடத்த முடியாது.

மேஜையை தட்டவேண்டும்

மேஜையை தட்டவேண்டும்

எம்.எல்.ஏ-வாக இருந்துகொண்டு, மேசையைத் தட்டலாம்; கமிஷன் வாங்கலாம்; ஊரை அடித்து உலையில் போடலாம். வேறு எதுவும் செய்ய முடியாது. எனக்கு மேசையைத் தட்டும் பழக்கம் கிடையாது. ஆனால், எங்கள் கட்சியில் கம்ப்யூட்டர் புரோகிராம்போல ஒரு நிமிடத்துக்கு ஒருமுறை தானாகவே அனைத்து உறுப்பினர்களும் மேசையைத் தட்டப் பழகியுள்ளனர்.

தோற்றுப் போனேன்

தோற்றுப் போனேன்

அறிவுடையவர்களை முடக்கிவைத்து ஒரு ஜனநாயகம் வெல்ல முடியாது. ஒரே போக்கான, ஒரே வார்ப்பான மனிதர்களை உருவாக்கிவைத்துக்கொள்வது, நாட்டுக்கும் நல்லது அல்ல; கட்சிக்கும் நல்லது அல்ல. ஏதோ ஆடு-மாடுகளை மேய்ப்பதுபோல், கட்சியில் இருப்பவர்களை எல்லாம் மேய்த்துக்கொண்டிருக்கிறார்கள். கடைசியில் அந்தக் கட்சியின் தலைவர் விழும்போது, கட்சியும் வீழ்ந்துவிடும். பல நல்ல காரியங்களைச் செய்ய அதிகாரம் வேண்டும். அதற்காகத்தான் எம்.எல்.ஏ ஆனேன். ஆனால், எல்லா முனைகளிலும் நான் தோற்றுப்போனேன்.

மன்னிப்பு கேட்கிறேன்

ஓர் ஆளும் கட்சி எம்.எல்.ஏ-வாக மக்களுக்குச் செய்ய நினைத்துத் தோல்வி அடைந்த கதைகள் இன்னும் ஆயிரம் ஆயிரம் இருக்கின்றன. சொன்னால் பக்கங்கள் போதாது. நான் மன உளைச்சலில் ராஜினாமா செய்வதைப் பற்றிப் பல தடவை யோசித்திருக்கிறேன். அழுத்தம் தாங்காமல் இப்போது வெடித்துவிட்டேன். என் எம்.எல்.ஏ வாழ்க்கை தோல்வி அடைந்துவிட்டது. நான் துறைமுகம் தொகுதி மக்களிடம் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என்னை மன்னித்துவிடுங்கள் என்று கூறியுள்ளார் பழ. கருப்பையா.

இந்த பேட்டி குறித்த தகவல் தெரிந்த பின்னர்தான் கட்சியை விட்டு அதிரடியாக நீக்கியுள்ளார் ஜெயலலிதா.

English summary
Dismissed ADMK MLA Pazha Karupaiya has tendered apology to his harbour constituency people for the failure as a MLA.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X