For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெ. 66வது பிறந்தநாள்: ரத்தத்தின் ரத்தங்களின் ரத்ததானம்; மண்சோறு; இலவச திருமணம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

AIADMK to celebrate Jayalalithaa’s 66th birthday as a prelude to Lok Sabha election campaign
சென்னை: தமிழக முதல்வரும், அதிமுகவின் பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் 66வது பிறந்தநாள் வரும் பிப்ரவரி 24ம் தேதி கொண்டாடப்படவுள்ளது.

இதையொட்டி தமிழகத்தில் பல இடங்களில், அதிமுகவினர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிவருகின்றனர். அமைச்சர்களும், எம்.எல்.ஏக்களும் முதல்வர் ஜெயலலிதாவின் குட்புக்கில் இடம் பெற போட்டி போட்டுக்கொண்டு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர்.

ஒருபக்கம் மண்சோறு... மற்றொரு பக்கம் ரத்ததானம் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் ஒருவாரத்திற்கு முன்பிருந்தே தொடங்கிவிட்டது. தமிழகம் முழுவதும் நடைபெறும் முதல்வர் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் ஒரு ரவுண்ட் அப்.

சென்னை கோவில்களில்...

முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை ஒட்டி சென்னை மயிலாப்பூரில் உள்ள பிரச்சித்தி பெற்ற கோவில்களான கபாலீஸ்வரர் கோவில், மாதவப் பெருமாள் கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனையோடு ஒரு வார காலத்திற்கு இசை, நடன, நாட்டிய விழாக்களும் நடைபெறுகின்றன.

106 ஜோடிகளுக்குத் திருமணம்

முதல்வர் ஜெயலலிதாவின் 66-வது பிறந்த நாளை முன்னிட்டு தஞ்சாவூர் தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் 106 ஏழை ஜோடிகளுக்கான திருமண விழா தஞ்சை திலகர் திடலில் நடைபெற்றது. இந்த திருமணங்களை நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் நடத்திவைத்தார். 10 ஆயிரம் பேருக்கு வடை ,பாயாசத்துடன் அறுசுவை விருந்து அளிக்கப்பட்டது.

66 வகை சீர்வரிசை

இந்த திருமணத்தையொட்டி அந்த பகுதியே விழாக்கோலம் பூண்டியிருந்தது. மணமக்களுக்கு 4 கிராம் தங்கத்தாலி, மணமகளுக்கு பட்டுப்புடவை மணமகனுக்கு பட்டு வேஷ்டி சட்டை மற்றும் தம்பதிகளுக்கு கட்டில்,மெத்தை பீரோ, பேன், காமாட்சி விளக்கு குத்துவிளக்கு 2, படி, செம்பு, பூஜை தாம்பூலத்தட்டு, பட்டுப்பாய், ஜமுக்காளம், பெட்சீட், தலையணை, குக்கர், உள்ளிட்ட 66 வகையான சீர்வரிசை சாமான்கள் வழங்கப்பட்டன.

66000 பேர் ரத்ததானம்

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் சார்பில், முதல்வரின் 66-வது பிறந்த நாளையொட்டி சென்னை, வேலூர், கோவை, திருச்சி, மதுரை, விழுப்புரம், சேலம், கரூர், திருநெல்வேலி மற்றும் கும்பகோணம் ஆகிய இடங்களில் 66 ஆயிரம் பேர் பங்கேற்ற மாபெரும் ரத்த தான முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அங்கப்பிரதட்சணம்

அரியலூரில் அ.தி.மு.க., அரியலூர் மாவட்ட மாணவர் அணி சார்பில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 66-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, அவர் நீடூழி வாழ வேண்டி, அரியலூர் மங்காயி பிள்ளையார் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடத்தி, மக்களுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது.

மராத்தான் ஓட்டம்

முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு புதுக்கோட்டையில் 66 விதமான நிகழ்ச்சிகளை ஏற்பாடுகளை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்திருந்தார். இதில் சிலம்பாட்ட போட்டி தொடங்கி ஓவிய போட்டி என மாணவர்களுக்கான போட்டிகள் பல இடம் பெற்றிருக்கின்றன.

அமைச்சர் விஜயபாஸ்கர்

இன்று மராத்தான் ஓட்டப்பந்தயம் நடக்க இருந்தது. இதில் கலந்து கொள்ள சுமார் மூவாயிரம் மாணவர்கள் வந்திருந்திருக்கிறார்கள். காலை எட்டு மணிக்கு பந்தயம் என அறிவிக்கப்பட்டிருந்ததால் ஆறு மணிக்கே வீரர்கள் தயாராய் இருந்திருக்கிறார்கள். அமைச்சர் விஜயபாஸ்கர் ஓட்டப்பந்தயத்தை துவக்கி வைப்பார் என ஒலி பெருக்கியில் விளம்பரம் செய்திருந்தனர். மணி எட்டாகியும் யாரும் துவக்கி வைத்தபாடாயில்லை.

பொறுத்துப்பார்த்த வீரர்கள் வரிசையில் நின்றிருக்கிறார்கள். அந்த நேரம் பார்த்து யாரோ ரெடி என குரல் கொடுக்க இதுதான் சமயம் என ஓடத்தொடங்கி விட்டனர்.

மறுபடியும் ஓடுங்கப்பா

இதை பார்த்த கட்சி நிர்வாகிகளும், காவல்துறையினரும் அமைச்சர் வர்ற நேரம் பார்த்தா இப்படி நடக்கணும் என ஓட்டப்பந்தய வீரர்களின் பின்னால் ஓடினர். அவர்களை வளைத்துப் பிடித்து மறுபடியும் முதல்ல இருந்து ஓடுங்க என அழைத்து வந்தாராம். அதன்பிறகு அமைச்சர் ஓட்டப்பந்தயத்தை துவக்கி வைத்திருக்கிறார்.

66 விளையாட்டுப் போட்டி

சென்னையில் சைதாப்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. ஜி.செந்தமிழன் முதல்வர் பிறந்தநாளை ஒட்டி பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.

ஆலயங்களில் சிறப்பு வழிபாடு, உணவு, உடை வழங்குதல், மருத்துவ- ரத்ததான முகாம், பேச்சு கட்டுரை போட்டிகள், தொழில் தொடங்க உதவி, கல்லூரி மாணவ- மாணவிகள் பங்கு பெறும் தொடர் விளையாட்டு போட்டிகள் இதில் இடம் பெற்றுள்ளன. நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நாளை தொடங்கி வரும் 23ம் தேதி வரை 66 விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன.

பாதயாத்திரை

அதிமுக மாநில மகளிரணி துணை செயலாளரும், திருப்பூர் மேயருமான மேயர் விசாலாட்சி தலைமையில் திருப்பூர் மகளிரணி நிர்வாகிகள் 66 பேர் கடந்த பிப்ரவரி 10ந் தேதி பழனிக்கு பாதயாத்திரை துவங்கினர்.

மண் சோறு உண்டு

15ம் தேதி பழனியை அடைந்த அவர்கள் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். 66 வது பிறந்தநாள் கொண்டாடும் முதல்வர் ஜெயலலிதா நீண்டநாள் ஆரோக்கியத்துடன் வாழவும், இந்திய பிரதமராக பதவியேற்கவும் பழனி முருகனை வேண்டிக்கொண்ட பக்தர்கள், அதிமுக பெண் தொண்டர்கள் தரையில் சாதத்தைக் கொட்டி "மண்சோறு" சாப்பிட்டு அம்மாவின் விசுவாசிகள் என்பதை நிரூபித்தனர்.

மக்களவைத் தேர்தலுக்கு...

மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளதால் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை ஒருவார காலத்திற்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாடி வருகின்றனர். இதன் மூலம் முதல்வரின் கவனத்தை கவர்ந்து, தேர்தலில் எளிதாக டிக்கெட் வாங்கிவிடலாம் என்பது அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களின் கனவாகும். இதற்காகத்தான் இப்படி பிறந்தநாளை கொண்டாடுகின்றனர் ரத்தத்தின் ரத்தங்கள் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

English summary
The AIADMK held one week a long celebrations on the occasion of its general secretary and Tamil Nadu chief minister J Jayalalithaa's 66th birthday that falls on February 24.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X