எனது ஆட்சியில் மின்வெட்டே இல்லை… 4,992 மெகாவாட் கூடுதல் மின் உற்பத்தி: ஜெ. சொன்னது நிஜமா?
சென்னை: இடைத்தேர்தல் நடைபெறும் ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதியில் திங்கட்கிழமையன்று பிரச்சாரம் செய்த ஜெயலலிதா, தமிழகத்தில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லாத அளவுக்கு கடந்த 4 ஆண்டுகளில் 4,992 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக உற்பத்தி செய்துள்ளோம் என்றார். இதனால் தொழில் வளர்ச்சி பெருகியுள்ளது. லட்சக்கணக்கான இளைஞர்கள் அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்புகளைப் பெற்றுள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 27ம் தேதி நடைபெறவுள்ளது நிலையில், அங்கு அதிமுக சார்பில் போட்டியிடும் முதல்வர் ஜெயலலிதா, திங்கள்கிழமையன்று பிரச்சாரம் செய்ததுதான் எதிர்கட்சிகளை கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது.
பிரச்சாரத்தில் எதிர்கட்சியினரை ஜெயலலிதா எதுவும் திட்டவில்லை அதே நேரத்தில் தனது நான்கு ஆண்டு கால ஆட்சியின் சாதனைகளைப் பட்டியலிட்டார். பிரச்சாரத்தில் அவர் பேசியதை கொடுத்துள்ளோம் படியுங்களேன்.

இடைத்தேர்தல் ஏன்?
கடந்த 2011 சட்டப்பேரவை தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதி யில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வெற்றிவேலை, எனது வேண்டுகோளை ஏற்று பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்தீர்கள். இந்த இடைத்தேர்தல், நீங்கள் விரும்பாத இடைத்தேர்தல். பொதுத்தேர்தலுக்கு ஓராண்டு மட்டுமே இருக்கும் நிலையில், அரசியல் சதியால் போடப்பட்ட வழக்கால், இடைப்பட்ட சிறிது காலத்துக்கு நான் முதல்வராக இல்லாத சூழல் ஏற்பட்டது. எனவே, இந்த இடைத்தேர்தலை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

மகத்தான வெற்றி
இப்போது நானே இங்கு போட்டியிடுகிறேன். தேர்தலில் வெற்றி பெறுவது என்பது வேறு. பிறரை தோற்கடிப்பது என்பது வேறு. ஆனால், இந்தத் தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவதே எனது லட்சியம். மக்கள் மனதில் இடம் பெற்றிருக்கும் என்னையும், அதிமுகவையும் வெல்ல முடியாது என்பதால் தான், எதிர்க்கட்சிகள் போட்டியிடவில்லை. ஆனால், அதற்கு பல கற்பனை கதைகளை கட்டவிழ்த்து விடுகின்றன.

குறைகளை சொல்ல வரவில்லை
பிறரின் குறைகளைச் சொல்லி வாக்குகளை கேட்க நான் இங்கு வரவில்லை. நாங்கள் செயல்படுத்திய சமூகநல, வளர்ச்சி மற்றும் தொலைநோக்குத் திட்டங்களை எடுத்துச் சொல்லி வாக்குகளை கேட்கவே வந்திருக்கிறேன்.

மின்வெட்டு இல்லை
மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லாத அளவுக்கு கடந்த 4 ஆண்டுகளில் 4,992 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக உற்பத்தி செய்துள்ளோம். இதனால் தொழில் வளர்ச்சி பெருகியுள்ளது. லட்சக்கணக்கான இளைஞர்கள் அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்புகளைப் பெற்றுள்ளனர்.

வளர்ச்சித் திட்டங்கள்
ஆர்.கே.நகர் தொகுதியில் கடந்த 4 ஆண்டுகளில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை செயல்படுத்தி இருக்கிறோம். ரூ. 41 கோடியில் துணை மின் நிலையப் பணிகள் நடந்துள்ளன. கடந்த 4 ஆண்டு களில் இந்தத் தொகுதியில் 14,313 புதிய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. சிதிலமடைந்த வீடுகளுக்குப் பதிலாக ரூ.101 கோடியில் 1,500 அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன.

நலத் திட்டங்கள்
44,596 குடும்பங்களுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள குடும்பங்களுக்கு விரைவில் வழங்கப்படும். 32,609 பேர் ரூ.1,000 மாத ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். 14 புதிய வழித்தடங்களில் 36 புதிய பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த தொகுதியில் மட்டும் 10 அம்மா உணவகங்கள் செயல்படுகின்றன.

குடிநீர் பிரச்சினை
ஆர்.கே.நகரில் ரூ.2.77 கோடியில் 10 குடிநீர் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால் 236 தெருக்களில் குடிநீர் பற்றாக்குறை தீர்க்கப்பட்டுள்ளது. ரூ.242 கோடியில் மழைநீர் வடிகால், தெரு விளக்குகள், சாலைகள் அமைக்கும் பணிகள் சென்னை மாநகராட்சியால் செய்யப்பட்டுள்ளன. நடப்பாண்டில் ரூ. 36 கோடியில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படி ஏராளமான பணிகளை ஆர்.கே.நகர் தொகுதி மக்களுக்காக செய்திருக்கிறோம்.

பாரட்டிய கம்யூனிஸ்டுகள்
இங்கே, என்னை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் போட்டியிடுகிறார். இதே கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் சட்டப் பேரவையில் என்னையும், அதிமுக அரசையும் பாராட்டி பேசியுள்ளனர். ஆனால், இன்று என்னை எதிர்த்து போட்டியிடுவதால் வேறு வழியின்றி எங்கள் மீது குற்றம் சாட்டுகின்றனர்.

மக்களுக்காகவே நான்
"மக்களால் நான், மக்களுக்காகவே நான்" என்ற அடிப்படை யில் எப்போதும் செயலாற்றி வருகிறேன். எனக்கு எல்லாமே நீங்கள்தான். உங்கள் எதிர்பார்ப்பு களை நிறைவு செய்யும் வகையில் உங்களுக்காக எப்போதும்போல பாடுபடுவேன்.

2016 சட்டமன்ற தேர்தல்
எங்களது சாதனைகளை சீர்தூக்கிப் பார்த்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் என்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும். வரும் பொதுத் தேர்தலுக்கு முன்னோட்டமாக அமையும் வகையில் நீங்கள் எனக்கு வாக்களிக்க வேண்டும். இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.

9 மாதங்களுக்குப் பிறகு
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பதவி இழந்த ஜெயலலிதா, பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை. தொலைக்காட்சிகளிலும் உரையாற்றவில்லை. முதல்வரான பிறகும் செய்தியாளர்களை சந்திக்கவில்லை. இந்த நிலையில் நான்கு ஆண்டுகால சாதனைகளை விளக்கி பிரச்சாரம் செய்தார். ஜெயலலிதா பட்டியலிட்ட சாதனைகளைத்தான், குறிப்பாக எல்லோருக்கும் சிரிப்பு வர வைக்கும் மின் உற்பத்தி ''சாதனை'' தான், இன்றைக்கு பெரும் விவாதப்பொருளாகி உள்ளது.












Click it and Unblock the Notifications