ஓமலூர்- ஓசூர் பாதையை சேலம் கோட்டத்தில் சேர்க்க ரயில்வே அமைச்சரிடம் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஓமலூர் - ஓசூர் பாதையை சேலம் கோட்டத்தில் சேர்க்க வேண்டும் என மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவை சந்தித்து, பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபுவை டெல்லியில் உள்ள அவரது அலுவலகத்தில் பா.ம.க. இளைஞரணித் தலைவரும், தர்மபுரி தொகுதி எம்.பி.யுமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் நேற்று முன்தினம் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தார். அந்த மனுவில், தருமபுரி & மொரப்பூர் ரயில்பாதை திட்டத்தை ரயில்வே துறை நிதிநிலை அறிக்கையில் சேர்த்ததற்காக எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இதற்காக தருமபுரி மாவட்ட மக்கள் உங்களுக்கு என்றென்றும் நன்றிக் கடன்பட்டிருக்கிறார்கள்.

Anbumani ramadoss meet with Railway minister

இத்திட்டத்தின் கீழ் வரும் மொரப்பூர் ரயில்வே நிலையம் தெற்கு ரயில்வே துறையின் சேலம் கோட்டத்திலும், தருமபுரி ரயில்வே நிலையம் தெற்கு ரயில்வே துறையின் பெங்களூரு கோட்டத்திலும் உள்ளன. இரு ரயில்வே நிலையங்களுக்கும் இடையே புதிய பாதை அமைப்பதற்கான நிர்வாக நடைமுறைகளை மேற்கொள்வதற்காக தருமபுரி நிலையத்தை சேலம் கோட்டத்தில் இணைக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.

ஓமலூர் முதல் ஓசூர் வரையிலான ரயில்வே பாதை தமிழ்நாட்டில் உள்ளது. தெற்கு ரயில்வேத் துறையின் பாலக்காடு கோட்டத்திலிருந்து சேலம் கோட்டம் தனியாக பிரிக்கப்பட்ட போது, இந்த பாதையை சேலம் கோட்டத்தில் இணைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆனால், அப்போது அக்கோரிக்கை ஏற்கப்படவில்லை.

தருமபுரி, பாலக்கோடு, மாரண்டஹள்ளி, இராயக்கோட்டை, தேன்கனிக்கோட்டை, ஓசூர் ஆகிய ரயில்வே நிலையங்கள் இந்த பாதையில் அமைந்துள்ளன. ஓசூர் பகுதியில் அமைந்துள்ள ஏராளமான தொழிற்சாலைகளில் பணியாற்றுவதற்காக பெருமளவிலான பொதுமக்கள் இந்த பாதையில் தான் ரயில்களில் பயணம் செய்கின்றனர். ஓசூர், சேலம், தருமபுரி ஆகிய இடங்களில் உள்ள பல பொறியியல் கல்லூரிகள் மற்றும் கலை, அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களும் இந்த பாதையில் தான் பயணிக்கின்றனர்.

சேலம் மற்றும் தருமபுரியில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு செல்லும் நோயாளிகளும் இந்த பாதையில் தான் பயணிக்கின்றனர். இந்தப் பாதைக்கான ரயில்வே கோட்டத் தலைமை அலுவலகம் அமைந்துள்ள ஹூப்ளி நகரம் சாலை வழியாகவோ, ரயில் வழியாகவோ நேரடியாக இணைக்கப்படாததால், இப்பகுதியில் உள்ள பயணிகள் தங்களின் குறைகளை நேரடியாக தெரிவிக்க முடியவில்லை. ஹூப்ளி நகரம் கர்நாடகத்தில் உள்ளது.

காவிரி பிரச்சினை காரணமாக கர்நாடகத்தில் உள்ள தமிழர்கள் மீது வன்முறைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதை நீங்கள் அறிவீர்கள். இதனால் இந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் கர்நாடகத்திற்கு செல்ல அஞ்சுகின்றனர். சேலம் ரயில்வே கோட்டம் தமிழக மக்களின் 40 ஆண்டு கால போராட்டத்தின் பயனாக உருவாக்கப் பட்டது ஆகும். இதன் நோக்கமே இந்த கோட்டத்தின் நிர்வாகம் எளிமையாகவும், மக்களுக்கு உதவியாகவும் இருக்க வேண்டும் என்பது தான். ஆனால், இப்பகுதி மக்கள் தங்களின் குறைகளை தெரிவிப்பதற்காக அண்டை மாநிலமான கர்நாடகத்திற்கு செல்வதில் பல சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

ஓமலூர்&ஓசூர் பாதை சேலம் கோட்டத்தில் இணைக்கப்பட்டால் தான் சேலம் கோட்டம் உருவாக்கப்பட்டதன் முழுமையான பயன்களை தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் சேலம் மாவட்டங்கள் பெறும். இதுதொடர்பாக எனக்கு ஏராளமான கோரிக்கைகள் வந்துள்ளன. இக்கோரிக்கையை வலியுறுத்தி அந்த பகுதி மக்கள் ஏராளமான போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் நடத்தியிருக்கின்றனர். எனவே, ஓமலூர்-ஓசூர் ரயில்வே பாதையை தெற்கு ரயில்வேத் துறையின் சேலம் கோட்டத்தில் இணைக்க வேண்டும் என்ற தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் சேலம் மாவட்ட மக்களின் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து நல்ல முடிவு எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
PMK Youth Wing Leader Anbumani ramadoss meet with Railway minister suresh prabhu about on railway project
Please Wait while comments are loading...