For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆன்மிக அரசியல்: ரஜினிகாந்த் எதிர்கொள்ளும் விமர்சனங்கள் என்ன?

By BBC News தமிழ்
|

நடிகர் ரஜினிகாந்த் அரசியல்வாதியாக தன்னை அறிவித்து, வரும் சட்டமன்ற தேர்தலில் தனியாக 234 தொகுதிகளிலும் போட்டியிடப்போவதாக அறிவித்திருந்தாலும், அவரது ஆன்மிக அரசியல் என்றால் என்ன என்றும், கட்சியின் பிற கொள்கைகளை வெளிப்படையாக தெரிவிக்காததால், அரசியல் தலைவர்கள் மத்தியில் விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளார்.

ரஜினிகாந்த்
Getty Images
ரஜினிகாந்த்

தன்னை தமிழன் என்று அடையாளப்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதிலும், அன்றாட அரசியலில் பங்கேற்கப்போவதில்லை என்பதிலும் ரஜினிகாந்த் தீவிரமாக உள்ளார் என்பதை அவரது அரசியல் அறிவிப்பின்போது நிகழ்த்திய உரை தெளிவுபடுத்தியது.

தனித்துப் போட்டியிடப் போவதாக ரஜினி அறிவித்திருந்தாலும், ரஜினியின் சிந்தனைகளுக்கும் பாஜகவின் சிந்தனைகளுக்கும் ஒற்றுமை உள்ளது என்று கூறி தொடக்கத்திலேயே ரஜினியை சொந்தம் கொண்டாடத் தொடங்கிவிட்டது பாஜக.

கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில்தான் முடிவாகும் என்பதில் தங்களது கட்சி உறுதியாக இருப்பதாக தமிழிசை சௌந்தரராஜன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

''ரஜினியின் ஆன்மிக அரசியலுக்கும், எங்கள் கட்சியின் ஆன்மிக சிந்தனைக்கும் வேறுபாடு இருப்பதாகத் தெரியவில்லை. ரஜினி ஆன்மிகம் என்று சொன்னால் ஒப்புக்கொள்ளும் நபர்கள், நாங்கள் கூறும் கருத்துக்களை மதவாதம் என்கிறார்கள். ஆன்மிக அரசியல் என்பது தர்மத்துடன் நடந்துகொள்வது என்பதுதான்,'' என்று தமிழிசை தெரிவித்தார்.

அவர் மேலும் தமிழகம் ஆன்மிக பூமி என்றும் நாத்திக அரசியலை பின்பற்றுவதாக சூளுரைத்த கட்சியினரின் குடும்பத்தினர் நாத்திகர்களாக மாறமுடியாமல், ஆத்திகர்களகவே இருப்பதே அதற்கு சாட்சி என்றார்.

தமிழன் என்ற அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும் என்ற கட்டாயத்தில் அவரது உரைகளில் தமிழ் மக்கள் தன்னை பச்சை தமிழனாக மாற்றிவிட்டார்கள் என்றும் அவரது மூதாதையர்கள் கிருஷ்ணகிரி பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் அடிக்கோடிட்டு ரஜினி பேசியுள்ளது கவனிக்கத்தக்கது.

நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சீமான், ரஜினி தமிழனாக இல்லாமல் தமிழகத்தை ஆள நினைப்பது தவறு என்றும் அவர் முதல்வராக தமிழகத்தை ஆட்சி செய்தால், தமிழர்கள் அடிமைகளாக வாழ்வதற்கு சமம் என்றும் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

சீமான் சொல்வதுபோல, ரஜினியை இன ரீதியாக தமிழன் இல்லை என்று குற்றம் சாட்டுவது பலவீனமாக அரசியல் என்றும் அதற்கு பதிலாக தான் தமிழன்தான் என்று ரஜினி பேசுவது மோசடி அரசியல் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ரவிக்குமார் கூறியுள்ளார்.

''ரஜினியின் ஆன்மிகம், மதச்சார்பின்மைக்கு எதிரானது என்பதை ராமகிருஷ்ண மடத்தில் அவர் ஆசி பெறச்சென்ற போது நடந்த உரையாடல் தெளிவாக்குகிறது. மதச்சார்பின்மை என்பதை எதிராகப் பார்ப்பதும், விமர்சிப்பதும், அரசியல் அமைப்பு சட்டத்தில் இருந்தே அந்த சொல்லை நீக்க வேண்டும் என்பதும் ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க ஆகியோரின் நிலைப்பாடு ஆகும். ரஜினியின் ஆன்மிகம் இந்தவகையைச் சேர்ந்ததுதான். அது மகாத்மா காந்தி பின்பற்றிய தத்துவ பொருள்கொண்ட சுயபரிசோதனையை வலியுறுத்தும் ஆன்மிகம் அல்ல,'' என்றார் ரவிக்குமார்.

மேலும் ஆர்.ஆர்.எஸ்.க்கு பிடிக்காத காந்தியின் பெயரை ரஜினி தவிர்த்துவருவது கவனத்துக்கு உரியது என்றும் ரவிக்குமார் குறிப்பிட்டார்.

திராவிட கட்சிகள் பகுத்தறிவு கொள்கைகளைக் கொண்டு ஆட்சிக்கு வந்துள்ளனர் என்பதால்தான் ரஜினி எந்த விளக்கமும் கொடுக்காமல், ஆன்மிக அரசியல் என்ற பதத்தை முன்வைத்துள்ளார் என்கிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தா.பாண்டியன்.

''ரஜினி தனித்து போட்டியிடப்போவதாக தெரிவித்தாலும், பாஜகவின் கொள்கைகளோடு ஒத்துப்போகும் நபர் என்பதையே அவரது நடவடிக்கைகள் காட்டுகின்றன. மோதியின் பிரதிநிதியாக ஒருவர் தமிழத்தில் போட்டியிடவேண்டும் என்ற கட்டாயம் உள்ளதால், அந்த நபர் ரஜினியாக இருப்பார் என்பதுதான் உண்மை. நேரடியாக பாஜக போட்டியிட்டால், ஆர்.கே.நகர் தேர்தலில் நடந்ததுபோல நோட்டாவோடுதான் போட்டிபோடவேண்டும்,'' என்று தெரிவித்தார் பாண்டியன்.

தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுகவும், அதிமுகவும் ரஜினியின் ஆன்மீக அரசியலால் தங்களது கட்சிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று கூறியுள்ளனர்.

ரஜினிக்கு வாழ்த்துக்களை கூறிய திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு அவர் முற்றுப்புள்ளிவைத்துள்ளார் என்றும் ரஜினி அரசியலுக்கு வருவதால் திமுகவிற்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து பேசிய அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜு தமிழகத்தில் எப்போதும் திராவிடக் கட்சிகள் மட்டுமே ஆட்சி செய்யும் என்றும் ரஜினி அரசியலில் ஆழம் பார்க்க நினைக்கிறார் என்றும் கூறியுள்ளார்.

''ரஜினி சிஸ்டம் சரியில்லை என்று கூறுகிறார். என்ன சரியில்லை என்று அவர் தெளிவாக எதையும் சொல்லவில்லை. திராவிட ஆட்சிதான் தமிழகத்தில் நிலைத்து இருக்கும். தமிழகத்தில் வேறு இயக்கங்களுக்கு வேலையில்லை,'' என்றும் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

BBC Tamil
English summary
People are criticising Rajinikanth for his anmeega arasiyal. Rajinikanth has finally decided to float a new party and to contest in the TN assembly election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X