For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழக சட்டசபை தேர்தலில் கை கோர்க்கும் 'மோடி-லேடி' கட்சிகள்? தேஜகூவுக்கு அல்வா..?

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் அண்ணா தி.மு.க.- பாரதிய ஜனதா கூட்டணி முடிவு செய்யப்பட்டுவிட்டதாகக் கூறப்படுகிறது. சென்னையில் அ.தி.மு.க. பொதுச்செயலர் ஜெயலலிதாவை மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி சந்தித்த போது இந்த கூட்டணிக்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பல்வேறு விவகாரங்களில் கொள்கை ரீதியாக ஒத்துப்போக கூடிய கட்சிகள் பாரதிய ஜனதா மற்றும் அண்ணா தி.மு.க. பிரதமர் நரேந்திர மோடியும், அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவும் நெடுநாள் நட்பு பாராட்டி வருபவர்கள். இதனால் கடந்த லோக்சபா தேர்தலின்போது மோடியும்-லேடியும் கூட்டணி அமைப்பார்கள் என்றுதான் பலத்த எதிர்பார்ப்பு பாரதிய ஜனதாவிடம் இருந்தது.

பிரதமர் ஆசை

பிரதமர் ஆசை

ஆனால், பிரதமர் ஆகும் ஆசையில் இருந்த அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா, கூட்டணி வைத்தால் சீட்டுக்களை விட்டுத்தர வேண்டுமே என்பதற்காக தனித்து போட்டியிட முடிவு செய்தார். வேறு வழியில்லாத பா.ஜ.கவும், சண்டித்தனம் செய்யும் இரண்டாம் நிலை கட்சிகளோடு சடுகுடு கூட்டணி அமைத்தது. குஜராத்தின் மோடியா, தமிழ்நாட்டின் இந்த லேடியா என்று சவால்விடுத்தார் ஜெயலலிதா. அவர் எதிர்பார்த்தபடியே அண்ணா தி.மு.க. வெற்றி பெற்றது. ஆனால் அவரே எதிர்பார்க்காதபடி பாரதிய ஜனதா அகில இந்திய அளவில் வெற்றிக்கொடி நாட்டியது.

திராவிட கட்சிகளுக்கு பின்னடைவு

திராவிட கட்சிகளுக்கு பின்னடைவு

இந்நிலையில்தான், ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் அவருக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பால் ஜெயலலிதா அரசியல் எதிர்காலம் அஸ்தமித்துவிடும், 2ஜி போன்ற பல வழக்குகளால் தி.மு.க. சாம்ராஜ்யம் சரிந்துவிடும், நடுவில் புகுந்து நாட்டைமையாகிவிடலாம் என்று தமிழக பாரதிய ஜனதா விட்டத்தை பார்த்து கொட்டாவி விட்டுக் கொண்டிருந்தது. ஆனால், திராவிட கட்சிகளின் பிடியில் இருந்து தமிழகம் இப்போதைக்கு மீளப் போவதில்லை என்ற உண்மையான தகவலை, பாரதிய ஜனதா மேலிடமும் அறிந்தே வைத்துள்ளது. தமிழக பா.ஜ.கவினர் என்னதான், பில்டப்புகளை கொடுத்தாலும், அவர்களை நம்ப மேலிடம் தயாராக இல்லை.

2016 தேர்தலில் கூட்டணி

2016 தேர்தலில் கூட்டணி

இந்த சூழ்நிலையில்தான் போடப்பட்டுள்ளது மாஸ்டர் பிளான். பிரதமர் பதவி என்ற ஒரே பிரச்சினையால்தான் பா.ஜ.க.-அ.தி.மு.க கூட்டணி ஏற்படவில்லை. ஆனால் சட்டசபை தேர்தலில் கூட்டணி வைத்துக்கொள்வதில் இரு கட்சிகளுக்கும் எந்த பிரச்சினையும் ஏற்படப்போவதில்லையே. எப்படிப்பார்த்தாலும், பாரதிய ஜனதா கட்சி தனித்து போட்டியிட்டு வெற்றி பெறுவது என்பது எட்டாக்கனிதான்.. வெற்றி கிடக்கட்டும்.. முதலில், 234 தொகுதிகளுக்கும் தகுதியான வேட்பாளர்களை நிறுத்தி டெபாசிட்டை தேற்ற வேண்டுமே... அதற்கு எங்கு போய் ஆள்பிடிப்பது என்ற கவலை தமிழக பா.ஜ.க.வுக்கு. இதில் முதல்வர் வேட்பாளராக யாரை அறிவிப்பது என்ற கேள்வியும் தொக்கி நிற்கிறது.

கைபிடித்து அழைத்துச் செல்ல அதிமுக

கைபிடித்து அழைத்துச் செல்ல அதிமுக

எனவே தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி மெல்ல காலூன்ற அதிமுகவின் அரவணைப்பு தேவைப்படுகிறது. இப்போதுள்ள சூழ்நிலையில் தமிழகத்தில் அண்ணா தி.மு.க.தான் கொள்கை ரீதியாகவும், தலைவர்கள் நடுவேயான ஒருமித்த கருத்து காரணமாகவும் பாரதிய ஜனதாவுடன் இசைந்துபோகும் ஒரே கட்சி. அதனால்தான் ஜெயலலிதா நோக்கி பாரதிய ஜனதா மேலிடப் பக்கம் பார்வை நகர்ந்துள்ளது. இது இன்று, நேற்று வந்ததல்ல. பல மாதங்களாகவே அரசல் புரசலாக பேசப்பட்டுவந்த தகவல்தான் இது.

புரிஞ்சு போச்சுய்யா.. புரிஞ்சி போச்சிய்யா..

புரிஞ்சு போச்சுய்யா.. புரிஞ்சி போச்சிய்யா..

பா.ஜ.க-அ.தி.மு.க கூட்டணி உருவாகப் போகும் தகவல் அறிந்ததால்தான் மோடி தும்மினாலும், இருமினாலும், குற்றம் என்று பேச ஆரம்பித்தார் வைகோ. கூட்டணியில் இருந்து பா.ஜ.க. கழற்றிவிடப்போகிறது என்ற கோபம், மோடி மீது வெறுப்பாக மாறியது. கடைசியில் மோடியை சீண்டி பாரதிய ஜனதாவில் இருந்து பதிலடிக்காக எதிர்பார்த்திருந்தார் வைகோ. வலை பின்னி வைத்திருக்கும் வைகோவின் லாவகம் தெரியாமல் பாரதிய ஜனதாவின் ஹெச். ராஜா உதார்விட, ஐயோ... அம்மா... திட்டுகிறார்கள் என்று கூறியபடி கூட்டணியை விட்டு, ஒரே ஓட்டமாக வெளியே ஓடிவிட்டார் வைகோ.

ராமதாஸும் எஸ்கேப்

ராமதாஸும் எஸ்கேப்

ராமதாஸும் முடிந்த அளவுக்கு பாரதிய ஜனதாவுக்கு டேமேஜ் செய்துவிட்டு கூட்டணிக்கு குட்பை சொல்லும் மனநிலையில்தான் உள்ளார். தற்போதைய ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்று அறிவித்து இதற்கான அடித்தளம் போட்டிருக்கிறார் ராமதாஸ். விஜய்காந்த் உள்ளே வெளியே நிலையில் தான் இருக்கிறார்..

வழக்கில் ஜெயிப்பது உறுதி

வழக்கில் ஜெயிப்பது உறுதி

இந்நிலையில்தான் மத்திய அமைச்சர் ஜேட்லி, ஜெயலலிதாவை சந்தித்து பேசியுள்ளார். அப்போது முதலில் ராஜ்யசபாவில் நிறைவேற்ற வேண்டிய மசோதா குறித்து பேசிவிட்டு எதிர்கால கூட்டணி குறித்தும் பேசப்பட்டதாக சொல்கிறார்கள்.

சு.சாமிக்கு கோபம்

சு.சாமிக்கு கோபம்

இந் நிலையில் ஜெயலலிதா- ஜேட்லி சந்திப்பில் கூட்டணியும் பேசப்பட்டிருக்கலாம் என்பதை உறுதி செய்யும் வகையில் சுப்பிரமணியன் சுவாமியின் ட்விட்டர் தகவல்கள் இருக்கின்றன. அவர் கோபத்துடன் தனது ட்விட்டரில் "உடல் நலத்தை காரணம் காட்டித்தான், ஜெயலலிதாவுக்கு கோர்ட் ஜாமீன் கொடுத்துள்ளது. டீலிங் பேசுவதற்கு இல்லை" என்று கடுமையாக தாக்கியுள்ளார்.

ஆக காலங்கள் மாற காட்சிகள் மாறுகின்றன!!

English summary
Union finance minister Arun Jaitley called on AIADMK general secretary J. Jayalalithaa at her Poes Garden residence on Sunday. The visit of Jaitley, said to be close to Prime Minister Narendra Modi, assumes significance as speculation has been rife for a long time that the BJP and the AIADMK could form a formidable alliance for the 2016 state elections to take on the Dravidian coalition that the DMK is trying to hard to sew up.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X