For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

செய்வீர்களா என்று கேட்ட ஜெ.வை பார்த்து செய்தீர்களா, செய்தீர்களா என கேளுங்கள் மக்களே: கருணாநிதி

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: "செய்வீர்களா? செய்வீர்களா?" என்று ஒவ்வொரு தேர்தல் கூட்டத்திலும், கடந்த தேர்தலின் போதும் மக்களைப் பார்த்துக் கேட்டாரே, இதே ஜெயலலிதா; இப்போது அவரைப் பார்த்து, "செய்தீர்களா? செய்தீர்களா?" என்று தமிழக மக்களே, திரும்பிக் கேளுங்கள் என திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

பல மாதங்களுக்குப் பிறகு, ஏன் பல ஆண்ட களுக்குப் பிறகு, அ.தி.மு.க.வின் செயற்குழுவும், பொதுக்குழுவும் நடைபெற்று முடிந்திருக்கின்றன. பொதுக்குழு என்றால் கொடிகளைக் கட்டி அலங்காரம் செய்வது கட்சிகளுக்கு வழக்கம் தான்.

ஆனால் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டிலிருந்து, திருவான்மியூரில் உள்ள தனியார் கல்லூரிக்குச் சொந்தமான இடத்தில் பொதுக்குழு நடைபெற்ற அரங்கம் வரை சாலைகளில் இரு மருங்கிலும் மற்றும் நடுவிலும் என மூன்று வரிசைகளில் சுமார் 12 கிலோ மீட்டர் தூரத்திற்கு வரவேற்பு வளைவுகள், பதாகைகள், பிளக்ஸ் போர்டுகள் போன்றவற்றை அடர்த்தியாகக் கட்டி, நடைபாதையில் பொதுமக்கள் நடந்து செல்லத் தடையாகவும், சாலைப் போக்குவரத்துக்குப் பெரிதும் இடைஞ்சலாகவும் நெருக்கடியை உருவாக்கினார்கள்.

பேனர்கள்

பேனர்கள்

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் கட் அவுட்களை வைக்கக் கூடாது என்ற நீதிமன்ற உத்தரவை மீறி வைக்கப்பட்டிருந்த "பேனர்"களை அகற்ற வேண்டுமென்று அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த இளைஞர்கள் காவல் நிலையங்களில் புகார் தெரிவித்தும், காவல் துறையினர் அதைக் கண்டு கொள்ளவில்லை. எனவே அந்தக் கட் அவுட்களை அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் அகற்றும் பணியிலே ஈடுபட்டபோது, அ.தி.மு.க.வினர் அங்கே வந்து அவர்களைத் தாக்கியிருக்கிறார்கள். காவல் துறையினர், தாக்கப் பட்டவர்களில் மூவரைக் கைது செய்து சிறையிலே அடைத்துள்ளார்கள். தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், தாக்கப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது என்பது அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகக் காவல் துறையினர் பின்பற்றி வரும் தனிச் சிறப்பான (?) நடைமுறை என்பதை நாடறியும்!

போக்குவரத்து

போக்குவரத்து

போக்குவரத்துக்கு நேர்ந்தது எப்படிப்பட்ட நிலை தெரியுமா? 10.30 மணிக்குப் பொதுக்குழு என்று அறிவிக்கப்பட்டபோதிலும், காலை 8 மணியளவில் சென்னை பிராட்வே, அயனாவரம், பெரம்பூர் உள் ளிட்ட பகுதிகளிலேயே திருவான்மியூர் நோக்கிச் சென்ற வாகனங்கள் அனைத்தும் அடையாறு சிக்னல் அருகிலேயே நிறுத்தப்பட்டுவிட்டன.

அங்கிருந்து திருவான்மியூருக்கு வாகனங்கள் எதுவும் அனுமதிக்கப்படவில்லை. 10 மணி முதல் எந்த வாகனங்களும் அடையாறு சிக்னலில் இருந்து திருவான்மியூர் செல்ல தடை விதிக்கப்பட்டு விட்டன. முதல் அமைச்சரின் கார் அந்த வழியாக வருகிறது என்பதற்காக 3 மணி நேரம் போக்குவரத்தே அந்தச் சாலையில் தடை செய்யப்பட்ட கொடுமையும் நடைபெற்றிருக்கிறது. அவர்களுடைய அதிகாரப்பூர்வ நாளேட்டில் அன்று எத்தனை பக்கங்கள் தெரியுமா? 108 பக்கங்கள்; அனைத்தும் அமோக விளம்பரங்கள்!

கூட்டம்

கூட்டம்

முதலில் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றதாம். பத்தே நிமிடங்கள் தான். அடுத்து பொதுக்குழு, அதிலே ஐந்தாறு பேர் மட்டுமே ஒரு சில மணித் துளிகள் பேச அனுமதி. பிறகு, தீர்மானங்கள் நிறைவேற்றம். அடுத்து ஜெயலலிதா உரையைப் படிக்க, சுமார் இரண்டே மணி நேரத்தில் அதாவது பகல் 1 மணியளவில் 2016 பொதுத் தேர்தலுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்குழுவையே நடத்தி முடித்து விட்டார்கள். ஒரு சில குறிப்பிட்ட பத்திரிகைகளுக்கும், தொலைக்காட்சி ஊடகங்களுக்கும் மட்டுமே உள்ளே செல்ல அனுமதி, மற்றவர்கள் நுழைவாயிலிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர்.

பத்திரிக்கையாளர்கள்

பத்திரிக்கையாளர்கள்

அரசு அதிகாரியான, மக்கள் தொடர்பு அதிகாரி ஒருவர், அ.தி.மு.க. கட்சி அலுவலகத்திலிருந்து கொடுத்த பட்டியலைக் கையிலே வைத்துக் கொண்டு, அதிலே இருந்தவர்களை மட்டுமே உள்ளே செல்ல அனுமதித்திருக்கிறார். இது பற்றி இந்த வார ஜூ.வி. இதழில், "ஆளும் கட்சியின் நிகழ்ச்சிக்காக அரசின் செய்தித் துறையினர் வரிந்து கட்டிக் கொண்டு வேலை பார்த்தனர். அரசின் பணிகளைச் செய்யாமல் தலைமைச் செயலகத்தின் செய்தி மக்கள் தொடர்புத் துறையைச் சேர்ந்த மொத்த டீமும் பொதுக் குழு நடந்த இடத்தில் மீடியாவை ஒருங்கிணைக்கும் வேலையை சின்சியராகச் செய்தது.

அதிகார அத்துமீறல்கள்

அதிகார அத்துமீறல்கள்

பத்திரிகைத் தொடர்பு உதவி இயக்குநர் செல்வராஜ், இணை இயக்குநர் சிவ சரவணன், இணை இயக்குநர் தானப்பா, உதவி இயக்குநர் தங்கையன் ஆகியோர் தலைமையில் உதவி மக்கள் தொடர்பு அதிகாரிகள் ராமகிருஷ்ணன், ராகுல், பிரபு, மோகன், ரமேஷ், கார்த்தி, அரசு போட்டோகிராபர் என இருபதுக்கும் மேற்பட்டவர்கள் அங்கே சுழன்று சுழன்று பணியாற்றினார்கள். உதவி மக்கள் தொடர்பு அதிகாரிகள் தான் மீடியாவினரை அடையாளம் கண்டு உள்ளே அனுப்பினார்கள்" என்று எழுதியிருக்கிறது என்றால், இந்த ஆட்சியில் எப்படிப்பட்ட அதிகார அத்துமீறல்கள், முறைகேடுகள் நடைபெறுகின்றன என்பதைத் தெரிந்து கொள்ளலாம். இந்த ஒரு சில மணி நேரக் கூத்துக்கும் கண்காட்சிக்கும்தான் இவ்வளவு விளம்பரம், எதிர்பார்ப்பு, ஆடம்பரம், ஆர்ப்பரிப்பு, பல இலட்சம் ரூபாய்ச் செலவு! பொதுக்குழுவுக்காக வைக்கப்பட்ட பேனர்கள் பற்றிய விவரங்களையெல்லாம் தாக்கல் செய்ய வேண்டுமென்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவே பிறப்பித்திருக்கிறார்கள்.

இறப்பு

இறப்பு

சொத்துக் குவிப்பு வழக்கிலே பெங்களூர் தனி நீதிமன்றத்தில் தண்டிக்கப்பட்டு ஜெயலலிதா கைது செய்யப்பட்ட போது, துக்கம் தாங்காமல் 263 பேர் தற்கொலை செய்து கொண்டதற்காக இரங்கல் தெரிவித்து முதலமைச்சர் ஜெயலலிதாவே தீர்மானத்தை முன் மொழிந்தாராம்! அது தவிர பல்வேறு காரணங்களால் மரணமடைந்த 322 அ.தி.மு.க.வினருக்கும், மழையைக் காரணமாக வைத்து உருவாக்கப்பட்ட செயற்கை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த 470 பேருக்கும் கூட்டத்திலே இரங்கல் தீர்மானம் நிறை வேற்றப்பட்டதாம். இவ்வளவு பேர் இந்த அ.தி.மு.க. ஆட்சியிலே இயற்கைக்கு மாறாக இறந்திருக்கிறார்கள் என்பதே, ஜெயலலிதாவின் ஆட்சித் திறமைக்கு ஒரு சான்றுதானே?

தீர்மானங்கள்

தீர்மானங்கள்

தீர்மானங்கள் என்று எடுத்துக்கொண்டால், அம்மையாரின் கட்ட ளையை ஏற்றுப் பணியாற்றிடத் தொண்டர்கள் உறுதி எடுத்துக் கொண்டு ஒரு தீர்மானம் - தேர்தலில் முடிவெடுக்கும் முழு அதிகாரத்தை அம்மையாருக்கு வழங்கி ஒரு தீர்மானம் - 7வது முறையாகக் கட்சியின் பொதுச் செயலாளராகவும், சிறைக்குச் சென்று திரும்பி வந்து பொறுப்பேற்றுக் கொண்டதையும் சேர்த்து; 5வது முறையாகத் தமிழக முதல்வராகவும் பதவியேற்றதற்காக வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்து ஒரு தீர்மானம் - வெள்ளச் சேதங்களைப் பார்வையிட்டு, நிவாரணப் பணிகளைக் கண்காணித்து மக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கிய முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்குப் பாராட்டும் நன்றியும் தெரிவித்து ஒரு தீர்மானம் - என்ன, இப்படியும் ஒரு தீர்மானமா என்று சிரிப்பு வருகிறதா?

முதலீட்டாளர்கள் மாநாடு

முதலீட்டாளர்கள் மாநாடு

தமிழ்நாட்டை மின்மிகை மாநிலமாக மாற்றியதற்கும், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி 2,42,160 கோடி ரூபாய் புதிய முதலீட்டுக்கு வழிவகை செய்ததற்காகவும் ஜெயலலிதாவுக்குப் பாராட்டு தெரிவித்து ஒரு தீர்மானம். 100 கோடி ரூபாய் செலவழித்து, முதலீட்டாளர் மாநாட்டை பல முறை ஒத்தி வைத்து நடத்திய போது முதலமைச்சர் 2 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் தமிழ்நாட்டிற்கு புதிய தொழில்கள் வரப்போகிறது என்றெல்லாம் அறிவித்தது உண்மைதான்! ஆனால் வந்ததா? எதிர்க்கட்சிகள் பொய் கூறுவதாகவும், அதற்கு உடனுக்குடன் அமைச்சர்கள் பதில் கூற வேண்டுமென்றும் ஜெயலலிதா பேசியிருக்கிறாரே, எத்தனை தொழிற்சாலைகள் புதிதாக தமிழகத்திற்கு வந்துள்ளன என்ற விவரத்தைக் கூறச் செய்வாரா? அல்லது இந்தப் பாராட்டுத் தீர்மானத்தோடு கடை வியாபாரம் முடிந்துவிடுமா?

கலாம்

கலாம்

அப்துல் கலாம் நினைவைப் போற்றிச் சிறப்புப் பரிசுகள் வழங்க ஆணையிட்டதற்காக முதலமைச்சர் ஜெயலலிதாவைப் பாராட்டி ஒரு தீர்மானம். அந்தப் பெருமகன் மறைந்த போது, அரசின் சார்பில் முதலமைச்சர் நேரில் சென்று அஞ்சலி செலுத்திடக் கூட மனமில்லை. ஆனால் அவர் பெயரில் சிறப்புப் பரிசுகள் அறிவித்ததற்காக பாராட்டாம்! இறுதியாக ஜெயலலிதா பேசும்போது, கடந்த நான்கரை ஆண்டுகளில் அளப்பரிய சாதனைகளைச் செய்திருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார். எத்தனை அளப்பரிய சாதனைகள் என்று தெரியுமா?

சாதனையா?

சாதனையா?

2015 டிசம்பர் மாதத்தில் வரலாறு காணாத அளவுக்கு சென்னை மாநகரிலே இந்த ஆட்சியினரின் நிலைகுலைந்த நிர்வாகச் சீர்கேடு காரணமாக வெள்ளம் ஏற்பட்டு, ஆயிரக்கணக்கானோர் மாண்டு மடிந்தார்களே; இலட்சக்கணக்கானோர் வீடிழந்து, தெருக்களில் அகதிகளைப் போல நடமாடிக் கொண்டிருக்கிறார்களே; கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் நாசமாகி விட்டனவே; இதுதான் சாதனையா?

சொத்துக் குவிப்பு வழக்கிலே பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தால் தண்டனை பெற்று, பின்னர் பெங்களூர் உயர் நீதிமன்றத் தீர்ப்பில் பிழையான கூட்டல் கணக்கின் காரணமாக வெளிவந்து வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டில் இருக்கிறதே, இதுவும் சாதனைதானா? இந்த ஆட்சியில் எத்தனை முறை அமைச்சர்கள் மாற்றப்பட்டார்கள்? ஏன் மாற்றப்பட்டார்கள்? அவர்கள் மீது எழுந்த குற்றச்சாட்டுகளை மூடி மறைக்க, முதல் அமைச்சர் எடுத்த நடவடிக்கை தானே அவை?

யார் காரணம்?

யார் காரணம்?

காந்தியவாதி, சசிபெருமாள் 31-7-2015 அன்று உயிர் விட யார் காரணம்? வேளாண்மை உயர் அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை செய்து கொண்டு மாண்டு போனாரே, அதற்கு யார் காரணம்? காவல் துறை அதிகாரி விஷ்ணுப்ரியா தற்கொலை செய்து கொண்டாரே, அதற்கு யார் காரணம்?

ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்களே, அதற்கு என்ன நடவடிக்கை? பாடகர் கோவன் கைது செய்யப்பட்டு, தேசப் பாதுகாப்புச் சட்டத்தில் சிறையிலே அடைக்கப்பட்டாரே, அதுபோலக் கருத்துச் சுதந்திரத்தைக் காலில் போட்டு மிதித்ததுதான் இந்த ஆட்சியினரின் அளப்பரிய சாதனையா? அண்டை மாநிலங்களோடு சுமூக உறவு கொண்டு நதி நீர்ப் பிரச்சினையிலே சாதனை புரிந்திருக்கிறார்களாம். அண்டை மாநிலங்களோடு எப்படிப்பட்ட உறவு என்பதும், நதி நீர்ச் சாதனையால், விவசாயத்தின் நிலை என்ன என்பதும் தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரியாதா என்ன?

இளங்கோவன்

இளங்கோவன்

எதிர்க்கட்சிகளும், அதன் தலைவர்களும் இந்த ஆட்சியில் எப்படியெல்லாம் அல்லலுக்கு ஆளாகிறார்கள் தெரியுமா? பிரதமர், முதல் அமைச்சர் சந்திப்பு பற்றி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஏதோ பேசியதாகக் கூறி, தமிழ்நாடு முழுவதும் போராட்டம். அவருடைய வீடு முற்றுகையிடப்பட்டது. மதுரையிலே அவரை எதிர்த்து மிகப் பெரிய போராட்டம்.

விஜயகாந்த்

விஜயகாந்த்

ஏன், தற்போது தே.மு.தி.க. தலைவர், ஜெயலலிதாவின் பேனர் ஒன்றை எடுக்கச் சொன்னாரென்று அ.தி.மு.க.வினர் ஒரு போராட்டம். பத்திரிகையாளர்களைத் தூண்டி விட்டு அவர்கள் போராட்டம். தி.மு.கழகத்தைச் சேர்ந்த கவுன்சிலர்களே, உள்ளாட்சி மன்றக் கூட்டங்களில் தாக்கப்படும் கொடுமை எவ்வளவு?

செம்பரம்பாக்கம் ஏரி

செம்பரம்பாக்கம் ஏரி

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறந்து விடக் கால தாமதம் ஏற்பட்டதற்கு உரிய நேரத்தில் அரசு உத்தரவு பிறப்பிக்காததுதான் என்று எதிர்க்கட்சிகள் கூறியதெல்லாம் பொய்ப் பிரச்சாரம் என்றும் ஜெயலலிதா பேசியிருக்கிறார். அவ்வாறு எதிர்க்கட்சிகள் சாட்டிய குற்றச்சாட்டு பொய்ப் பிரச்சாரம் என்றால், அது பொய்ப் பிரச்சாரம் என்பதை கூறிட, முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த ஒரு மாத காலமாக ஏன் முன்வரவில்லை? எதற்காக வாய் மூடி மௌனியாக இருந்தார்? வெள்ள நிவாரணப் பணிகளையெல்லாம் செய்து வருவதாக இப்போது சொல்லும் முதலமைச்சர் ஜெயலலிதா, எத்தனை நாட்கள், எத்தனை இடங்களில் எத்தனை மணி நேரம் வெள்ள நிவாரணப் பணிகளைச் சென்று பார்த்தார்? பாதிக்கப்பட்ட மக்களை எத்தனை இடங்களில் நேரில் கண்டு ஆறுதல் கூறினார்? விபரங்களைச் சொல்லத் தயாரா?

வைகை

வைகை

செம்பரம்பாக்கம் அணையை முன்கூட்டியே திறக்க முதல் அமைச்சர் ஜெயலலிதா ஏன் உத்தரவிடவில்லை என்று கேட்டால், எப்படியோ தேடித் தேடிக் கண்டுபிடித்து 2010ஆம் ஆண்டில் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நான் உத்தரவிட்டதை, பொதுக்குழுவில் ஜெயலலிதா சுட்டிக்காட்டியிருக்கிறார். 2010ஆம் ஆண்டில் வைகை அணையை உரிய நேரத்தில் திறக்காததால், என்ன கொடுமை ஏற்பட்டது? அப்போது வைகை அணையிலே உள்ள நீரின் அளவு என்ன? அப்போது ஏதாவது வெள்ளம் ஏற்பட்டு இலட்சக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டு விட்டார்களா? தற்போது இவ்வளவு பெரிய நாசம் ஏற்பட்டதற்கு உரிய நேரத்தில் முதல்வர் அணையைத் திறக்க உத்தரவிடவில்லை என்றால், அதற்கு அம்மையார் சொல்கிற சமாதானம் ஏதாவது பொருத்தமாக இருக்கிறதா? அனைத்து எதிர்க்கட்சிகளும் இதுபற்றிக் கேள்வி கேட்டால், அவர்களை எட்டாம் வகுப்புப் பாடப் புத்தகத்தைப் படியுங்கள் என்று முதலமைச்சர் ஏளனமாகக் கூறுவதா பதில்? அணை உடையக் கூடிய நிலையிலும், அதனைத் திறக்க உத்தரவிடாமல், குறட்டை விட்டுத் தூங்கலாம் என்று ஜெயலலிதா எந்த வகுப்புப் பாடப் புத்தகத்திலே படித்தார்?

பொய் தானே?

பொய் தானே?

தலைமைச் செயலாளர் விளக்கம் கொடுத்த பிறகு, அதிலே உள்ள முரண்பாடுகளையெல்லாம் எதிர்க் கட்சிகளும், பத்திரிகையாளர்களும் எடுத்து வைத்து, என்ன விளக்கம் என்று கேட்டார்களே, அதற்கு தலைமைச் செயலாளர் வாயே திறக்கவில்லையே, அரசின் சார்பிலும் யாரும் பதில் கூறவில்லையே, என்ன காரணம்? சாட்டிய குற்றச்சாட்டுகள் எல்லாம் உண்மை என்பதால் தானே? கொடுத்த விளக்கம் பொய்களின் தொகுப்பு என்பதால் தானே?

எம்.ஜி.ஆர். வீடு

எம்.ஜி.ஆர். வீடு

ஜெயலலிதாவும் அவருடைய அமைச்சர்களும் வெள்ள நிவாரணப் பணிகளை எப்படி ஆற்றினர் என்பதற்கு ஒரு உதாரணம் கூறுகிறேன். ஜெயலலிதாவுக்கு இவ்வளவு அந்தஸ்தும், பவிசும் வருவதற்குக் காரணமே, அவரை அரசியலுக்கு அழைத்து வந்து கொள்கைப் பரப்புச் செயலாளர் பதவியும், மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் வழங்கிய அருமை நண்பர் எம்.ஜி.ஆர். தான். அவர் வாழ்ந்த இராமாவரம் தோட்டம், இந்த வெள்ளத்திற்குப் பிறகு என்ன கதியில் இருக்கிறது தெரியுமா?

சரோஜா தேவி

சரோஜா தேவி

குப்பைக்கூளமாகவே இருக்கிறது. வெள்ளம் வற்றி ஒரு மாதமாகிறது. ஜெயலலிதா முதலமைச்சராக இருக்கிறார். ஆனால் அவரை வாழ வைத்த எம்.ஜி.ஆர். வீட்டைச் சுத்தம் செய்ய வேண்டுமென்று கூட இவர்கள் நினைக்கவில்லை. மாறாக, எம்.ஜி.ஆருடன் நடித்த நடிகை சரோஜாதேவி, எம்.ஜி.ஆர். வீட்டைச் சுத்தம் செய்வது பற்றி அறிக்கை விடுகிறார் என்றால், இதைவிட வெட்கக் கேடு வேறு உண்டா? ஜெயலலிதாவைப் போல, பழைய நிகழ்வுகளை மறந்து பாதகம் செய்வார் யாருமுண்டா?

ஸ்டாலின்

ஸ்டாலின்

ராஜாஜி என்ற நினைவோடு முதலமைச்சர் ஜெயலலிதா குட்டிக் கதை ஒன்றையும் பொதுக் குழுவில் கூறியிருக்கிறார். கடன் வாங்கிய ஒருவனைப் பற்றிய கதை. கழகப் பொருளாளர் மு.க.ஸ்டாலின் நமக்கு நாமே கூட்டத்தில் பேசும்போது கழக ஆட்சியில் ஏதாவது தவறுகள் நடந்திருந்தால், அதற்காக மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று பெருந்தன்மையோடு கூறியதற்காக, ஜெயலலிதா அந்தக் கதையைக் கூறுகிறாராம். மன்னிப்பு கேட்பது மனிதப் பக்குவம். அதுவும் மகேசனுக்கு இணையான மக்களிடம், மன்னிப்பு கோருவது ஒன்றும் மாபாதகம் இல்லை. அதனால் தவறுகள் நடந்ததாகப் பொருளும் அல்ல.

கதை

கதை

டான்சி நிலத்தை குறைந்த விலையில் முதலமைச்சர் பதவியிலே ஜெயலலிதா இருந்தபோது, அதிகார துஷ்பிரயோகம் செய்து வாங்கிக் கொண்டு நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு அந்த நிலத்தைத் திருப்பிக் கொடுத்தாரே ஜெயலலிதா; வருமான வரி வழக்கில், அபராதத் தொகையைக் கட்டி விடுகிறேன் என்று சொன்னாரே; அதற்கும் ஜெயலலிதா கூறிய கதைக்கும்தான் பொருத்தம் இருக்கிறதே தவிர, கழகப் பொருளாளர் பேசியதற்கும் ஜெயலலிதா கூறிய கதைக்கும் எந்தவிதமான சம்மந்தமும் இல்லை. ஏதோ தனது பண்பாட்டுக்கேற்ப தேர்ந்தெடுத்த திருட்டுக் கதையை அங்கே சொல்லியிருக்கிறார், அவ்வளவுதான்!

நிவாரண நிதி

நிவாரண நிதி

ஜெயலலிதா தனது பேச்சில், இடது கைக்குக் கூடத் தெரியாமல், வலது கை கொடுக்கக்கூடிய ஈரமுள்ள இதயம் தேவை என்றெல்லாம் மழை நிவாரண நிதி வழங்குவது பற்றிக் கூறியிருக்கிறார். தி.மு.கழகத்தின் சார்பிலே கூட முதன் முதலாக ஒரு கோடி ரூபாய் மழை நிவாரண நிதி வழங்கப்பட்டது. ஆனால் அ.தி.மு.க. கட்சியின் சார்பிலே மழை நிவாரண நிதி எவ்வளவு வழங்கப்பட்டது? அது பற்றிய செய்தியே வரவில்லையே, ஏன்? ஈரமுள்ள இதயம் (!) என்பதை எடுத்துக்காட்டுவதற்காகத்தான் நிதி வழங்கவில்லையா?

அதிமுகவின் சரிவு

அதிமுகவின் சரிவு

யாருடனும் கூட்டணி இல்லை; எதிரிகள் யாரும் கண்ணுக்குத் தெரியவில்லை என்று ஏற்கனவே முழங்கிய ஜெயலலிதா, இந்தத் தேர்தலில் சூழ்நிலைக்கேற்ப முடிவெடுப்பேன் என்று கீழே இறங்கியிருப்பதில் இருந்தே, அ.தி.மு.க.வின் சரிவு தெரிகிறதல்லவா? தி.மு.க.வுக்கு பதிலளிக்க அமைச்சர்களுக்கெல்லாம் உத்தரவு பிறப்பித்திருக்கிறார் ஜெயலலிதா! தி.மு.கழகம் கடந்த பல மாதங்களாக, இந்த ஆட்சியினர் மீதும், அமைச்சர்கள் மீதும் பலவகையிலும் குற்றஞ்சாட்டிக் கூறியிருக்கிறதே, முதலில் அதற்கெல்லாம் பதில் கூறுங்கள்!

110வது விதி

110வது விதி

கடந்த ஐந்தாண்டு காலத்தில் அரசின் சார்பாகவும், நிதி நிலை அறிக்கைகளிலும், முதலமைச்சர் அன்றாடம் 110வது விதியின் கீழ் படித்த அறிக்கைகளிலும் செய்த வெற்று விளம்பர அறிவிப்புகளில் எதையெதை நிறைவேற்றியிருக்கிறீர்கள் என்பதற்கான பதிலைக் கூறுங்கள்! முதலீட்டாளர்கள் மாநாட்டில், முதல் அமைச்சர் இரண்டு லட்சத்து 42 ஆயிரம் கோடி ரூபாய்க்கு முதலீடுகள் வந்து விட்டதாக அறிவித்தாரே, அந்த முதலீடுகள் எல்லாம் வந்து விட்டதா என்பது பற்றி விளக்கம் அளியுங்கள்!

செய்தீ்ர்களா?

செய்தீ்ர்களா?

செம்பரம்பாக்கம் ஏரியைத் திறக்க ஏன் தாமதம் செய்தீர்கள்? எந்த இடத்திலே தாமதம் ஏற்பட்டது? அதற்கெல்லாம் யார் காரணம்? ஏன் நீதி விசாரணை என்றதும் நெளிகிறீர்கள்? இதற்குப் பதில் கூறுங்கள்!

"செய்வீர்களா? செய்வீர்களா?" என்று ஒவ்வொரு தேர்தல் கூட்டத்திலும், கடந்த தேர்தலின் போதும் மக்களைப் பார்த்துக் கேட்டாரே, இதே ஜெயலலிதா; இப்போது அவரைப் பார்த்து, "செய்தீர்களா? செய்தீர்களா?" என்று தமிழக மக்களே, திரும்பிக் கேளுங்கள்! அந்தக் கேள்வி முழக்கம் மாநிலமெங்கும் எதிரொலிக்கும்போது தான் "வரலாறு திரும்புகிறது" என்பது வாய்மையே என வாய் ஜாலக்காரர்களுக்குப் புரியும்!

English summary
DMK supremo Karunanidhi has requested the TN people to question CM Jayalalithaa whether she has fulfilled all the promises.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X