For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோவை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: பெங்களூர் வாலிபர் கைது

By Mayura Akilan
Google Oneindia Tamil News

கோவை: கோவை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பெங்களூரு வாலிபரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் கோவை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரியின் இ-மெயில் முகவரிக்கு நேற்று பிற்பகல் ஒரு தகவல் வந்தது. அதில் ‘‘அறிவிக்கப்பட்ட குற்றவாளிகள் 2 பேர் கோவையில் சுற்றித் திரிகிறார்கள். அவர்கள் கோவை விமான நிலையத்தை தகர்க்க போகிறார்கள். இதனை நான் வேலை பார்க்கும் ஓட்டலுக்கு வந்த 2 பேர் பேசிக்கொண்டிருந்த போது கேட்டேன்'' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த இ-மெயில் தகவல் விமான நிலைய அதிகாரிகளுக்கும், கோவை மாநகர போலீசுக்கும் தெரிவிக்கப்பட்டது. மறு நிமிடமே போலீஸ் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டது. விமான நிலைய தொழிற்பாதுகாப்பு படையினர் விமான நிலையத்தை தீவிரமாக கண்காணிக்க தொடங்கினார்கள்.

விமான நிலைய பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். விமான நிலையத்துக்கு வந்த பயணிகளின் உடமைகள் அனைத்தும் சோதனையிடப்பட்டது. தீவிர சோதனைக்குப் பின்னரே பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

இதற்கிடையே அதிரடி நடவடிக்கையாக மிரட்டல் இ-மெயில் எங்கிருந்து வந்தது? என்று போலீசார் ஆராயத் தொடங்கினார்கள். அப்போது பீளமேடு சித்ரா பஸ் நிறுத்தம் அருகேயுள்ள கம்ப்யூட்டர் சென்டரில் இருந்து அந்த இ-மெயில் அனுப்பப்பட்டது தெரியவந்தது. அந்த கம்ப்யூட்டர் சென்டரில் உள்ள கேமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது இ-மெயில் அனுப்பப்பட்ட நேரத்தில் வந்து சென்ற ஒரு வாலிபரின் உருவம் அதில் பதிவாகி இருந்தது.

அந்த வாலிபரை பொறி வைத்துப் பிடிக்க கண்காணிப்பு பணியை முடுக்கி விட்டனர். வாகன சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டது. இரவு 9 மணி அளவில் அந்த பகுதியில் ஒரு வாலிபர் நடந்து வந்தார். அவரது தோற்றம் கேமிராவில் பதிவாகி இருந்த தோற்றத்தைப்போல் இருந்தது.

எனவே போலீசார் அவரை அப்படியே பீளமேடு போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்து தங்கள் பாணியில் விசாரித்தனர். விசாரணையில் அந்த வாலிபர் தான் இ-மெயிலில் தகவல் அனுப்பியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.

பெங்களூரைச் சேர்ந்த சாஜின்பாபு என்ற அந்த வாலிபர் 10-ம் வகுப்பு வரை படித்துள்ளார். கடந்த 2003-ம் ஆண்டு வீட்டை விட்டு வெளியேறி ஜம்மு காஷ்மீரில் ஒரு ஓட்டலில் வேலை பார்த்தார்.

அங்கிருந்து கோவை வந்த அவர் இங்குள்ள பிரபல ஓட்டலில் வேலை பார்த்தார். அவரது நடவடிக்கைகள் பிடிக்காத ஓட்டல் நிர்வாகம் சாஜின்பாபுவை வேலையில் இருந்து நீக்கியது. அதன் பின்னரும் அவர் கோவையிலேயே சுற்றித் திரிந்தார்.

அவர் தீவிரவாதிகளை பார்த்தது உண்மையா? அல்லது வேண்டுமென்றே இவரே இ-மெயில் அனுப்பினாரா? என்று போலீசார் விசாரித்தனர். அப்போது சாஜின் வேண்டுமென்றே மிரட்டல் இ-மெயிலை அனுப்பியது தெரியவந்தது. அதன்பேரில் போலீசார் அவரை கைது செய்தனர்.

இருப்பினும் சாஜின் போலீசாரிடம் முன்னுக்குப்பின் முரணாக தகவல் அளித்து பேசுவதால் போலீசாருக்கு அவர் மீது சந்தேகம் வலுத்துள்ளது. ஒரு வேளை தீவிரவாதிகளுக்கும் சாஜின்பாபுவுக்கும் ரகசிய தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

சாஜினின் தேவைகளை நிறைவேற்ற பணம் கொடுப்பது யார்? அவர் உண்மையில் தீவிரவாதிகளை பார்த்திருக்கலாமோ? என்ற சந்தேகங்களும் எழுந்துள்ளது. ஆனால் போலீசாரின் சந்தேகங்களுக்கு சாஜினின் பதில் உருப்படியாக இல்லை.

எனவே போலீசார் சாஜின்பாபுவை ரகசிய இடத்தில் வைத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

பிரபல தீவிரவாதி இமாம் அலியின் நினைவு நாள் வருகிற 29-ந்தேதி கடைபிடிக்கப்பட உள்ளது. அன்று கோவை, மதுரையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து கோவை மாநகர போலீசார் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர்.

பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கோவை நகரமே பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நிலையில் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பெங்களூர் வாலிபரை போலீசார் கோவையில் கைது செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

English summary
A Bangalore youth was arrested for issuing bomb threat to Coimbatore airport.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X