For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சம்பா சாகுபடி தோல்விக்கு மத்திய அரசு இழப்பீடு தர வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் சம்பா சாகுபடி தோல்விக்கு மத்திய அரசும் காரணம் என்பதால் பயிர்க்கடன் தள்ளுபடி, இழப்பீடு ஆகியவற்றுக்கான செலவில் பாதியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாட்டில் சம்பா சாகுபடிக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடும்படி கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் ஆணையிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வினாடிக்கு 2000 கனஅடி வீதம் மட்டும் தண்ணீர் திறக்க ஆணையிட்டிருக்கிறது.

central Govt should waive crop loans in Tamil Nadu - ramadoss

இது தமிழகத்திற்கு எந்த வகையிலும் பயனளிக்காது. மாறாக, சம்பா பயிரை காப்பாற்றுவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு மிகப்பெரிய பின்னடைவாகவே அமையும். மேட்டூர் அணையில் இன்றைய நிலவரப்படி 62 அடி, அதாவது 26.25 டி.எம்.சி அளவுக்கு மட்டுமே தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 2278 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், அணையிலிருந்து பாசனத்திற்கு குறைந்த அளவு தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

அணையில் குடிநீர் உள்ளிட்ட தேவைகளுக்காக குறைந்தபட்சம் 20 டி.எம்.சி நீர் இருப்பு வைக்கப்பட வேண்டும். இப்போதுள்ள அளவில் நீர் வரத்தும், வெளியேற்றமும் நீடித்தால் ஒரு வாரத்திற்கு மட்டுமே தண்ணீர் திறக்க முடியும். கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 2000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டாலும், அதில் பாதிக்கும் குறைவான அளவே மேட்டூர் அணைக்கு வந்து சேரும்.

தொடர்ந்து 10 நாட்களுக்கு மேல் தண்ணீர் வந்தால் மட்டும் தான் காவிரி பாசன மாவட்டங்களுக்கு ஒரு நாளைக்கு தண்ணீர் திறக்க முடியும். காவிரி பாசன மாவட்டங்களுக்கு 10 நாட்களுக்கு திறக்க மேட்டூர் அணையில் இப்போதுள்ள தண்ணீர் போதுமானதல்ல என்பதால், கர்நாடகத்திலிருந்து வினாடிக்கு 2000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டாலும் அதனால் எந்த நன்மையும் ஏற்படப்போவதில்லை.

சம்பா சாகுபடிக்காக காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும் என்ற தமிழகத்தின் கோரிக்கையை கணிவுடன் பரிசீலித்த உச்சநீதிமன்றம், போதுமான அளவுக்கு இல்லாவிட்டாலும், ஓரளவாவது தண்ணீர் திறக்க ஆணையிட்டது. முதலில் வினாடிக்கு 10,000 கனஅடி நீர் திறக்க ஆணையிட்ட நீதிபதிகள், பின்னர் அதை 12,000 கனஅடியாக உயர்த்தினர். இந்த அளவு பின்னர் வினாடிக்கு 6000 கனஅடியாக குறைக்கப்பட்டிருந்தாலும், இதேநிலை நீடித்திருந்தால் தமிழகத்திற்கு சம்பா சாகுபடிக்கு தேவையான அளவு தண்ணீர் கிடைத்திருக்கும்.

ஆனால், மத்திய அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கத் தடை போட்டதுடன், உயர்நிலை தொழில்நுட்பக்குழுவை அமைத்து அதன் பரிந்துரைப்படி தான் செயல்பட வேண்டும் என்று நெருக்கடி கொடுத்ததால் தான் தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவை வினாடிக்கு 2000 கனஅடியாக உச்ச நீதிமன்றம் குறைத்தது.

காவிரியில் தண்ணீர் திறக்கும்படி உயர்நிலைக்குழு பரிந்துரைக்கவில்லை என்ற போதிலும், மறு உத்தரவு வரும் வரை தமிழகத்திற்கு அதே அளவு தண்ணீர் திறக்க உச்சநீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது. எனினும், இது தமிழகத்தின் தண்ணீர் தேவை என்ற யானைப்பசிக்கு சோளப்பொறி போடுவதற்கு இணையானதே.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பெய்தாலும் கூட, மேட்டூர் அணையில் போதிய நீர் இல்லாத நிலையில் சம்பா பயிர்களை காப்பாற்றுவது சாத்தியமில்லை. காவிரி பாசன மாவட்டங்களில் கடந்த 5 ஆண்டுகளாக குறுவை சாகுபடி முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு சம்பா பயிர் வெள்ளத்தில் மூழ்கி வீணாய் போனது.
இந்த ஆண்டும் சம்பா பயிர் வறட்சியால் பாதிக்கப்படுவது உறுதியாகிவிட்ட நிலையில், இந்த மோசமான சூழலில் இருந்து தமிழக விவசாயிகளை பாதுகாப்பது எப்படி? என்பதை தமிழக அரசு ஆராய வேண்டும். தமிழகத்தில் விவசாயிகளின் இன்றைய நிலை குறித்து உயர்நிலைக் குழு அறிக்கையில் தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது.

"தமிழகத்தில் பாசனத்திற்கு தண்ணீர் இல்லாததால் காவிரி பாசன மாவட்டங்களில் உள்ள உழவர்களும், உழவுத் தொழிலாளர்களும் வேலை தேடி வேறு இடங்களுக்கு இடம் பெயருகின்றனர். அவர்களில் பலர் கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொள்ளும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்'' என வல்லுனர் குழு அதன் அறிக்கையில் கூறியுள்ளது.

காவிரி பாசன மாவட்ட உழவர்கள் மற்றும் உழவுத் தொழிலாளிகளின் இந்த நிலையை உணர்ந்து, உச்சவரம்பு இல்லாமல் அனைத்து விவசாயிகளின் பயிர்க்கடனையும் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.25,000 வீதமும், நிலமற்ற கூலித் தொழிலாளர்களுக்கு ஒருமுறை உதவியாக ரூ.25,000 இழப்பீடு வழங்க வேண்டும்.

அத்துடன் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் வேலை வழங்கப்படும் நாட்களின் எண்ணிக்கையை 150 ஆக உயர்த்த வேண்டும். உழவர்களின் இந்த நிலைக்கு மத்திய அரசும் காரணம் என்பதால் பயிர்க்கடன் தள்ளுபடி, இழப்பீடு ஆகியவற்றுக்கான செலவில் பாதியை ஏற்றுக்கொள்ள வேண்டும்" இவ்வாறு ராமாதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

English summary
Pmk founder ramadoss urges to central government should waive crop loans in Tamil Nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X