அப்பா எப்போ வருவீங்கப்பா? விமான நிலையத்தில் காத்திருக்கும் மீனவர்களின் குழந்தைகள்
ராமேஸ்வரம்: தூக்கு தண்டனையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள 5 மீனவர்களின் குடும்பத்தினரும்,குழந்தைகளும் விடிய விடிய தூங்காமல் அவர்களின் வரவை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
சிறையில் இருந்து விடுதலையாகி வரும் தந்தையின் முகத்தினை முதன் முறையாக காண திருச்சி விமானநிலையத்தில் காத்திருக்கின்றனர் சில குழந்தைகள்
எமர்சன், அகஸ்டஸ், வில்சன், லாங்லெட், பிரசாந்த் ஆகிய 5 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கடந்த 2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது போதை பொருள் கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 30ஆம் தேதி தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் அதிர்ச்சியும், போராட்டமும் நடைபெற்றது. அரசியல் கட்சித்தலைவர் பலரும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமேஸ்வரத்தில் கொண்டாட்டம்
இந்த நிலையில் அப்பாவி மீனவர்கள் 5 பேரும் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டதோடு அவர்கள் விடுதலை செய்யப்பட்டதாக நேற்று செய்தி வெளியானது. அந்த நிமிடம் முதல் ராமேஸ்வரம் மீனவர்கள் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தூக்கு தண்டனையில் இருந்து மீண்டுள்ள மீனவர்கள் 5 பேரும் இலங்கையில் இருந்து விமானம் மூலம் இன்று திருச்சிக்கு வர உள்ளனர்.

மீனவர்களுக்கு வரவேற்பு
இதையடுத்து, திருச்சி வரும் மீனவர்களை வரவேற்க மீனவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் இன்று அதிகாலை 3 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து திருச்சிக்கு புறப்பட்டு சென்றனர்.
கடந்த 3 ஆண்டுகளாக தங்கள் கணவர் மற்றும் மகன்களின் குரலை மட்டுமே கேட்டு வந்த மீனவர்களின் மனைவியரும் அவர்களது பெற்றோரும் அவர்களை நேரில் காண ஆர்வத்துடன் சென்றுள்ளனர்.

மீனவர்களின் குழந்தைகள்
இதில் மீனவர்கள் எமர்சன் மற்றும் பிரசாந்த் ஆகிய இருவருக்கும், அவர்கள் சிறைக்கு சென்ற சில மாதங்களுக்கு பின்னர் குழந்தைகள் பிறந்துள்ளது. இதனால், பிறந்தது முதல் தங்கள் தந்தையின் முகத்தை அந்த இரு குழந்தைகளும் நேரில் பார்க்க வாய்ப்பு கிடைக்கவில்லை. ஓரளவு விவரம் புரிந்து கொள்ளும் நிலையில் உள்ள அந்த குழந்தைகளுக்கு அவர்கள் தந்தையின் முகங்களை புகைப்படங்களின் மூலமே தெரிந்து கொண்டனர்.

விடிய விடிய தூங்காமல்
இந்நிலையில், மீனவர்கள் விடுவிக்கப்பட்ட செய்தி அந்த குழந்தைகளிடம் தெரிவிக்கப்பட்டது. இதை அறிந்ததும், தங்கள் தந்தையை முதன் முறையாக நேரில் சந்திக்க ஆவலுடன் நேற்று இரவு முழுவதும் தூங்கா விழிகளுடன் காத்திருந்தனர்.

அப்பாவின் முகம் காண
வாலேஸ் மற்றும் ஜெயேஸ் ஆகிய அந்த இரு குழந்தைகளுடன் மற்ற குழந்தகளும் இன்று திருச்சிக்கு வரும் தங்கள் தந்தையின் முகம் காண உறவினர்களுடன் உற்சாகமாக விமான நிலையத்தில் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

குழந்தைகள் ஏமாற்றம்
ஆனால் விடுதலையான மீனவர்கள் திருச்சி வராமல் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக கூறப்பட்டது. டெல்லியில் இருந்து அவர்கள் சொந்த ஊர் திரும்புவார்கள் எனவும் தகவல்கள் வெளியானது. இதனையடுத்து திருச்சி விமானநிலையத்தில் காத்திருந்த உறவினர்கள் ஏமாற்றமடைந்தனர். குழந்தைகளும் சோகத்தில் ஆழ்ந்தனர்.