For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கம்.... பண்டிகை கொண்டாட சொந்த ஊர் திரும்பும் பயணிகள்

தீபாவளி பண்டிகை கொண்டாட சென்னையில் இருந்து பல்லாயிரகணக்கான பயணிகள் சிறப்பு பேருந்துகள் மூலம் சொந்த ஊர் பயணித்தனர்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்லும் பயணிகளுக்காக சென்னையில் இருந்து நேற்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இதில் நேற்று முன்பதிவு செய்த பயணிகள் சொந்த ஊருக்கு பண்டிகை கொண்டாட உற்சாகமாக கிளம்பினர்.

தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னையிலிருந்து ஏராளமான பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்று வர வசதியாக, அன்றாட பேருந்துகள் உள்பட சிறப்பு பேருந்துகளையும் சேர்த்து, மொத்தம் 11,225 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

Deepavali special buses operated from Chennai

கோயம்பேடு பேருந்து நிலையம், தாம்பரம்- சானடோரியம், பூந்தமல்லி, அண்ணாநகர் மேற்கு போக்குவரத்துக் கழக பேருந்து நிலையம், மாநில தேர்தல் ஆணைய அலுவலகம் முன்பு, என 5 இடங்களிலிருந்து இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தீபாவளி பண்டிக்கைக்காக, நேற்று 26ம் தேதி முதல் 28ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு தமிழகம் முழுவதும் 21,289 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் சென்னையில் இருந்து மட்டும் 11,225 பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்த பேருந்துகள் சென்னையில் தற்காலிகமாக ஏற்படுத்தப்பட்டுள்ள பேருந்து நிலையங்களிலிருந்து இயக்கப்படுகின்றன.

சிறப்பு பேருந்துகள்

சிறப்புப் பேருந்துகளுக்கான முன்பதிவு மையம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மட்டும் 29 முன்பதிவு மையம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. சென்னையில் இருந்து நேற்று சிறப்பு பேருந்துகள் மூலம் வெளியூர் செல்வதற்காக, 13ஆயிரத்து 850 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

இதற்கிடையே தீபாவளிக்காக சென்னையில் 5 இடங்களில் இருந்து வெளிஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

எந்த ஊர் பயணிகள் எங்கு செல்ல வேண்டும்?

செங்குன்றம் வழியாக ஆந்திரா செல்லும் அனைத்து தமிழக மற்றும் ஆந்திர மாநில பேருந்துகள் அண்ணாநகர் மேற்கு மாநகர பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகின்றன.

காஞ்சிபுரம் செல்லும் பேருந்துகள் மற்றும் கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் , செல்லும் பேருந்துகள் கோயம்பேடு எதிரே உள்ள மாநில தேர்தல் ஆணைய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகின்றன.

திண்டிவனம், வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் மார்க்கமாக செல்லும் அனைத்து பேருந்துகளும் தாம்பரம் சானிடோரியம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகின்றன.

வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மற்றும் ஒசூருக்கு செல்லும் பேருந்துகள் பூந்தமல்லியில் இருந்து இயக்கப்படுகின்றன. திருச்சி,மதுரை, மயிலாடுதுறை, நாகை, வேளாங்கண்ணி, நெல்லை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, விழுப்புரம், திருவண்ணாமலை, சேலம், கோவை செல்லும் பேருந்துகள் வழக்கம் போல கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து செல்கின்றன.

200 சிறப்பு பேருந்துகள்

போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முன்பதிவு செய்த பயணிகள் மேலே குறிப்பிட்டுள்ள பேருந்துகள் புறப்படும் இடங்களுக்கு சென்று பயணம் மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இது தவிர, சென்னை கோயம்பேட்டிலிருந்து தற்காலிக பேருந்து நிலையத்திற்கு பொதுமக்கள் சென்று வர ஏதுவாக மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 200 சிறப்புப் பேருந்துகள் இணைப்பு பேருந்துகளாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும், மற்றும் இயக்கம் குறித்து புகார் தெரிவிப்பதற்கும் 044 24794709 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பண்டிகை கொண்டாட பயணம்

தீபாவளி பண்டிகை 29ம் தேதி சனிக்கிழமையன்று கொண்டாடப்படுகிறது. புதன்கிழமையன்று இரவு முன்பதிவு செய்திருந்த பயணிகள் மட்டுமே பயணம் செய்தனர். அதிக அளவில் கூட்ட நெரிசல் காணப்படவில்லை. இன்று வேலை தினம் என்பதால் பலரும் இன்று பணிக்கு சென்று போனஸ் போன்றவைகளை பெற்றுக் கொண்டு இன்று இரவு சொந்த ஊர் பயணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இன்றும் வெள்ளிக்கிழமை இரவும் பேருந்துகளில் கூட்ட நெரிசல் அதிகம் காணப்படும் என்று போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை திரும்ப சிறப்பு பேருந்துகள்

தீபாவளி பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடி விட்டு சென்னை திரும்பும் பயணிகளுக்காகவும் அக்டோபர் 30, 31ம் தேதியும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆம்னி பேருந்துகளில் ஆயிரக்கணக்கில் பணம் வசூலிப்பதால் பல்லாயிரக்கணக்கான பயணிகள் சிறப்பு பேருந்துகளில் பயணிக்க ஆர்வம் காட்டுவதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்ல ஒரு லட்சத்து 57 ஆயிரத்து 500 பேர் முன்பதிவு செய்துள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

English summary
A total of 11,225 buses operated to various places in Tamil Nadu from Chennai on Wednesday during the Deepavali season.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X