சென்னையில் 2 காவலர்களுக்கு டெங்கு காய்ச்சல்- அரசு மருத்துவமனையில் சிகிச்சை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் இரண்டு காவலர்களுக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி கண்டறியப்பட்டுள்ளதால் அவர்களுக்கு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் 4000 பேருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி கண்டறியப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டெங்கு கொசுவை ஒழிக்க 104 என்ற இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ள சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

Dengue cases rise in Chennai

தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களான ஈரோடு, திண்டுக்கல், கோவை, கன்னியாகுமரி, திருப்பூர், தேனி, சேலம் உள்ளிட்ட 10 மாவட்டங்களை சேர்ந்த சுமார் 4000 பேருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி கண்டறியப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

அரசு மருத்துவமனை , ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அனைத்து தனியார் மருத்துவமனைகளில் இருந்தும் பெறப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் இந்த விபரம் தெரியவந்துள்ளது. பெரும்பாலான மாவட்ட அரசு மருத்துவமனை மற்றும் கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர் பற்றாகுறை காரணமாக காய்ச்சல் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு உரிய சிகிச்சை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டாலோ அல்லது பகல் நேரத்தில் அதிக அளவில் கொசுக்கள் கடித்தாலோ மக்கள், 104 என்ற அவசர உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதோடில்லாமல் பிரபல திரை கலைஞர்கள் மூலமும், டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தை சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகின்றது.

சென்னையில் மழையும், வெயிலும் மாறி மாறி தாக்கி வருவதால் கொசுக்களின் உற்பத்தியும் அதிகரித்து விட்டது. டெங்கு காய்ச்சலின் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இரண்டு காவலர்களுக்கு டெங்கு அறிகுறி உள்ளதால் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய குற்றப்பிரிவைச் சேர்ந்த திபு, ஆயுதப்படையில் உள்ள பார்த்திபன் ஆகியோருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி உள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காவலர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

டெங்கு காய்ச்சலுக்கு மருந்துகளோ அதி நவீன மருத்துவ சிகிச்சைகளோ தேவையில்லை. டெங்கு கொசு கடிப்பதினால் உடலில் உள்ள ரத்த அணுக்கள் குறைந்துவிடாமல் பாதுகாக்கும் வகையில் அதிக அளவு தண்ணீர், பழங்கள், நிலவேம்பு கசாயம், பப்பாளி இலைச்சாறு போன்றவற்றை உட் கொண்டாலே ரத்த அணுக்கள் அதிகரித்து, உடல் நிலை சீராகி, டெங்கு காய்ச்சல் குணமாகும் எனவே மக்கள் அச்சப்பட தேவையில்லை என்கின்றனர் மருத்துவர்கள்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Two dengue cases are being treated at the Rajiv Gandhi Government General Hospital. 2 Cops name Parthiban and Thibu are being treated.
Please Wait while comments are loading...