For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

“பூ” கேட்கும் மகளிர்க்கு “காகிதப் பூ”: தேர்தலுக்காகவே பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு - கருணாநிதி சாடல்

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: சட்டசபைத் தேர்தலுக்காகவே உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவித இடஒதுக்கீடை அதிமுக அரசு அறிவித்துள்ளது "பூ" கேட்போருக்கு "காகிதப் பூ" வழங்குவது போல் உள்ளது என திமுக தலைவர் கருணாநிதி விமர்சனம் செய்துள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை ஐம்பது சதவிகிதமாக உயர்த்த வகை செய்யும் மசோதாவினை அ.தி.மு.க. அரசு அவசர அவசரமாக, பேரவையின் இறுதி நாளன்று எந்தவிதமான முன்னறிவிப்பும், விவாதமும் இல்லாமல் ஒரே நாளில் முன்மொழிந்து அன்றைக்கே பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றியிருக்கிறார்கள்.

DMK chief M. Karunanidhi’s statement

மகளிர்பால் அ.தி.மு.க. அரசுக்கு திடீரென்று இவ்வளவு அக்கறை வரக் காரணம் விரைவில் வரவிருக்கின்ற சட்டப் பேரவைப் பொதுத் தேர்தல்தான் என்பது கிராமங்களிலே உள்ள சிறுமிகளுக்குக் கூடப் புரியும்.

இது தொடர்பாக கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

ஐந்தாண்டு கால ஆட்சியில் இதைப் பற்றி அரைக்கணம் கூட நினைத்துப் பார்க்காமல், தேர்தல் இரண்டு மாதங்களில் வருகிறது என்றதும், இந்த அறிவிப்பினைச் செய்து தாய்மார்களின் கவனத்தைக் கவர்ந்து காரியத்தைச் சாதித்துக் கொள்ள முயற்சிக்கிறார்கள். ஆனால் அ.தி.மு.க. அரசு "காரியம் ஆகும் மட்டும் காலைப்பிடி; காரியம் ஆனபிறகு கழுத்தைப் பிடி" என்ற பழமொழிக்கேற்பவே நடந்து கொள்கிறது என்பது தமிழ்நாட்டுத் தாய்மார்களுக்கு நன்றாகவே தெரியும்!

பொதுவாக இதுபோன்ற முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்கள் பேரவையில் இரண்டு நாட்கள் முன்பாகவே முன்மொழியப்பட்டு, அதற்குப் பிறகு ஒரு நாள் நிகழ்ச்சி நிரலில் முன்கூட்டியே குறிப்பிட்டு, அதன் பிறகு விவாதித்து முடிவெடுப்பதுதான் வழக்கம். ஆனால் இந்தத் தீர்மானத்தைப் பொறுத்தவரை தீர்மானம் முன்மொழிதலும், விவாதித்தலும் ஒரே நாளில் நடைபெற்றிருப்பதிலிருந்தே, ஆளுங்கட்சியினரின் தேர்தல் நேரச் சலுகை இது என்பது நன்றாகவே விளங்குகிறது.

ஆனால், தாய்மார்களுக்கு முதன் முதலாக உள்ளாட்சிகளில் 33 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது 1996ஆம் ஆண்டு தி.மு. கழக ஆட்சியிலேதான். அதன் காரணமாக தமிழகம் முழுவதிலும் 44,143 பெண்கள் உள்ளாட்சி நிர்வாகங்களில் பதவி பெற்றனர்.

1989ல் இந்தியாவிலேயே முதல் முறையாக அரசுப் பணிகளில், வேலை வாய்ப்புகளில் பெண்களுக்கு 30 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் திட்டம் தி.மு. கழக ஆட்சியில்தான் நடைமுறைப்படுத்தப்பட்டு, பல்லாயிரக்கணக்கான பெண்கள் அரசு வேலை வாய்ப்புகள் பெற வழிவகுக்கப்பட்டது.

1990ல் தி.மு. கழக ஆட்சியிலேதான் இந்தியாவிலேயே முதல்முறையாக பெண்களுக்குச் சம சொத்துரிமை வழங்கி, தனிச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. உள்ளாட்சி அமைப்புகளில் மகளிர்க்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.

இந்தியாவிலேயே முதல் முறையாக பெண்களுக்கு சொத்துரிமை, காவல் துறையில் முதன் முதலாக பெண்கள் நியமனம், விதவை மறுமணத் திட்டம், கலப்பு திருமணத் திட்டம், திருமண உதவித் திட்டம், விதவை பெண்களின் மகள் திருமண உதவித் திட்டம், மகப்பேறு நிதியுதவித் திட்டம், ஆதரவற்ற, விதவை, கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு மாத ஓய்வூதியம், சத்துணவு பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம், ஓய்வூதியத் திட்டம் என பல்வேறு திட்டங்களை திமுக ஆட்சியில் செயல்படுத்தியுள்ளோம்.

கூடுதல் செவிலியர்கள் நியமனம் மூலம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு, திருக்கோயில் அறங்காவலர் குழுக்களில் பெண்கள் நியமனம், மகளிர் சுய உதவிக் குழுக்கள் தொடக்கம், முதல்முறையாக தொழில் தொடங்கும் பெண்களுக்கு மானியம், தொழில் வளாகங்களில், தொழில் மனை ஒதுக்கீட்டில் பெண் தொழில்முனைவோருக்கு முன்னுரிமை, மீனவப் பெண்களுக்கு இலவச மோட்டார் வாகனம், மகளிர் நியாய விலை கடைகள், அதிக அளவில் பெண் ஆசிரியர்கள் நியமனம் என திமுக ஆட்சியில் பெண்களுக்காக எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம்.

இதிலிருந்து மகளிர் கவனத்தைத் திசை திருப்பவே, இந்த 50 சதவிகித இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. மூன்றரைக் கோடிப் பெண்களின் மதுவிலக்கு எனும் உள்ளக் கிடக்கையை நிறைவேற்றாமல், 50 சத இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றியிருப்பது "பூ" கேட்கும் மகளிர்க்கு "காகிதப் பூ" வைக் காட்டுவதற்கு ஒப்பானதாகும் என்று கருணாநிதி கூறியுள்ளார்..

English summary
DMK chief M. Karunanidhi’s statement
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X