For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திமுகவின் சுடரொளி பேராசிரியர் க.அன்பழகன்... 96 வயது இளைஞரின் பிறந்தநாளுக்கு ஸ்டாலின் வாழ்த்து!

திமுக பொதுச்செயலாளர் அன்பழகனின் 96வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு செயல்தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்துகளை தெரிவித்து இனிப்புகளை தந்துள்ளார்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

சென்னை : திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க. அன்பழகனின் 96வது பிறந்தநாளை முன்னிட்டு அந்தக் கட்சியின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் துரைமுருகன் உள்ளிட்டோர் நேரில் வாழ்த்து தெரிவித்ததோடு, இனிப்புகளை கொடுத்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

திமுகவின் தொடக்க காலத்தில் இருந்து அதன் தூணாகவும் கொண்ட கொள்கையில் நெறி பிரழாமலும் இருந்து வருபவர் பேராசிரியர் க.அன்பழகன். கருணாநிதியை விடவும் வயதில் மூத்தவரான அன்பழகன் இன்று தனது 96-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், அவரது இல்லத்துக்கு நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

அன்பழகனுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி ஸ்டாலின், அவருக்கு இனிப்பு ஊட்டி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து மு.க.ஸ்டாலின், க.அன்பழகன், துரைமுருகன் உள்ளிட்ட திமுக தலைவர்கள் அண்ணா நினைவிடத்திற்கும், பெரியார் நினைவிடத்திற்கும் சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

ஸ்டாலின் வாழ்த்து மடல்

ஸ்டாலின் வாழ்த்து மடல்

பேராசிரியர் அன்பழகன் பிறந்தநாளை முன்னிட்டு மு.க.ஸ்டாலின் இன்று முகநூலில் ஒரு வாழ்த்துச் செய்தியை பதிவிட்டுள்ளார் அதில், கழகத்தின் பொதுச்செயலாளராகவும், தலைவர் கலைஞர் அவர்களின் அரசியல் பயணத்தின் நெடுகிலும் உற்ற தோழராகவும், எந்தநிலையிலும் திராவிட இயக்கக் கொள்கைகளிலிருந்து இம்மியளவும் விலகாத உறுதி மிக்க மூத்த தலைவராகவும் விளங்குகிற இனமானப் பேராசிரியர் அவர்களின் 96வது பிறந்தநாள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொன்னாள்.

கட்சியை ஊக்குவித்தவர்

கட்சியை ஊக்குவித்தவர்

தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - தலைவர் கலைஞர் ஆகியோரைத் தலைவர்களாக ஏற்று, திராவிட இயக்கம் வேரூன்றிப் பரவிட அயராது பாடுபட்டு வருபவர் நம் பேராசிரியர். கழகத்தின் இளைஞரணி தொடங்கப்பட்டதிலிருந்து அதன் வளர்ச்சிக்கு உரமூட்டும் வகையில் எனக்கும் என்னுடன் இணைந்து இளைஞரணியில் பணியாற்றியோருக்கும் திராவிட இயக்க தத்துவங்களை உற்சாகத்துடன் போதித்தவர். கழகத்தின் எதிர்கால வளர்ச்சியினைக் கருத்திற்கொண்டு, என்னை ஊக்கப்படுத்தி, உரிய அறிவுரை வழங்கி தொடர்ந்து வழிகாட்டி கொண்டிருப்பவர்.

வேகம் குறையாத இளைஞர்

வேகம் குறையாத இளைஞர்

பேராசிரியர் என்கிற சொல்லுக்கேற்ப கழகம் எனும் பல்கலைக்கழகத்தில் இன்றைய இளைய தலைமுறைக்கும் இணையற்ற முறையில் கொள்கை வகுப்பெடுப்பவர்தான் நமது இனமானப் பேராசிரியர் அவர்கள். பகுத்தறிவுச் சுடர் கொளுத்தி சனாதன இருட்டை விரட்டியடிக்கும் அவரது உறுதிமிக்க பணி, 96 வயதிலும் வேகம் குறையாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

ஆதிக்க நச்சுகளை அழிப்பவர்

ஆதிக்க நச்சுகளை அழிப்பவர்

தொண்டறத்தால் பொழுதளக்கும் தூய கொள்கை வீரரான நம் இனமானப் பேராசிரியர் அவர்கள் தமிழை உயிர்மூச்சாகக் கொண்டு, தமிழினத்தின் முன்னேற்றத்திற்காகத் தளராது பாடுபடுபவர். தமிழ்ப் பண்பாட்டை எந்த ஆதிக்க இனமும் ஆக்கிரமித்துவிடக்கூடாது என்பதற்காக திராவிடக் கொள்கை எனும் வேலியை வலுவாக அமைத்துப் பாதுகாப்பவர். வள்ளலார் இராமலிங்க அடிகள், தமிழ்த் தென்றல் திரு.வி.க ஆகியோரின் கருத்துகளிலிருந்து சாறு எடுத்து, தமிழ்ப் பண்பாட்டின் ஆணி வேர்களில் படிந்துள்ள ஆதிக்க நச்சுகளை அடியோடு அழித்தொழிக்கும் பணியை எப்போதும் தொடர்பவர்.

நீங்கா நிழல்

நீங்கா நிழல்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொடக்க நாளிலிருந்து இன்றளவும் கழகத்தின் வளர்ச்சிக்கான உழைப்பினை நல்கி, கழகத்திற்கு நண்பர்கள் என்றால் தனக்கும் நண்பர்கள், கழகத்திற்கும் தலைவர் கலைஞருக்கும் எதிரிகள் என்றால் தனக்கும் எதிரிகள் என்கிற உறுதிமிக்க நிலைப்பாட்டில் ஊன்றியிருப்பவர். அரசியல் ஆதாயங்களுக்காக எவர் எங்கே சென்றாலும், கழகத்தின் வளர்ச்சியிலும் நெருக்கடிகளிலும் அறிவாலயமே என்றும் தமது வாழ்விடம் என்பதை கலைஞரின் நீங்கா நிழலாக இருந்து நிரூபித்து வருபவர்.

நலமோடு வாழ வேண்டும்

நலமோடு வாழ வேண்டும்

தலைவர் கலைஞர் அவர்களின் வழிகாட்டுதலில் வீறுநடை போடும் கழகத்திற்கு, இனமானப் பேராசிரியரே தத்துவ ஆசான். அவர் கற்றுத் தரும் கொள்கைப் பாடம் கழகத்தின் எதிர்காலப் பயணத்திற்கு என்றென்றும் கருவூலமாகத் துணைநிற்கும். தலைவர் கலைஞருக்குத் தோழராகவும், கழக பணிகளை இன்முகத்தோடு தன் தோளில் சுமப்பவருமான இனமானப் பேராசிரியப் பெருந்தகை அவர்கள் நூறாண்டு கடந்து நலமோடு வாழ அன்புடன் வாழ்த்தி வணங்குகிறேன் என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

English summary
DMK general secretary Anbazhagan is celebrating his 96th birthday today, on this occasion stalin wished him and shared the happines with him at Anbazhagan residence.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X