For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அன்னியச் செலவாணி மோசடி பேர்வழிக்கு அறிக்கை ஒரு கேடா.. டி.டி.வி.தினகரனை விட்டு விளாசும் திமுக எம்எல்ஏ

“பெராவில் 28 கோடி ரூபாய் அபராதம் செலுத்த உயர்நீதிமன்றமே” உத்தரவிட்ட பிறகு டி.டி.வி. தினகரனை எப்படி அழைப்பது? உத்தமர் என்றா அழைக்க முடியும்? என கேட்டுள்ளார் திமுக எம்.எல்.ஏ ராஜா.

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: அன்னியச் செலவாணி மோசடி பேர்வழிக்கு அறிக்கை ஒரு கேடா, என கூறி, அதிமுக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனை விட்டு விளாசியுள்ளார் திமுக எம்எல்ஏடி.ஆர்.பி.ராஜா. ஸ்டாலின் குறித்து தினகரன் நேற்று அறிக்கை வெளியிட்ட நிலையில், அவருக்கு எம்.எல்.ஏ ஒருவரை வைத்து பதிலடி கொடுக்க செய்துள்ளது திமுக.

திமுக எம்.எல்.ஏ, டி.ஆர்.பி. ராஜா, வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியுள்ளதாவது:

"அன்னியச் செலவாணி மோசடிப் பேர்வழிக்கு அறிக்கை விடுவதெல்லாம் ஒரு கேடா?" என்றுதான் அதிமுகவில் "கூவத்தூர்" மிரட்டல் மூலம் துணைப் பொதுச் செயலாளர் பதவியை அபகரித்துக் கொண்டிருக்கும் திரு டி.டி.வி தினகரனின் அறிக்கையை பார்த்ததும் எண்ணத் தோன்றுகிறது.

"தங்கத்தைப் பார்த்து இழித்ததாம் பித்தளை" என்பது போல் திரு டி.டி.வி.தினகரன், அப்பழுக்கற்ற, அரசியல் நேர்மைக்கு இலக்கணமாகத் திகழும் ஸ்டாலினை பார்த்து விமர்சிப்பது விரக்தியின் விளிம்பில் நிற்பவரின் புலம்பல் போல் இருக்கிறது.

குற்றவாளிகள் வழிகாட்டு அரசு

குற்றவாளிகள் வழிகாட்டு அரசு

இப்போதுள்ள அரசு "குற்றவாளி வழி காட்டும் அரசுதான்" என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அதை தாங்கிக் கொள்ள முடியாமல் அறிக்கை என்ற பெயரில் வாந்தி எடுத்திருக்கும் திரு டி.டி.வி. தினகரனைப் பார்த்து உள்ளபடியே பரிதாபப்படுகிறேன்.

பெரா பேர்வழி

பெரா பேர்வழி

இந்த அரசு குற்றவாளிகளின் வழிகாட்டுதலில் செயல்படும் "பினாமி அரசு" என்று ஸ்டாலின் மட்டுமல்ல- இன்றைக்கு ஏழரை கோடி தமிழர்களும் குற்றம் சாட்டுவதை "பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டு விட்டது" என்று "பெரா பேர்வழி" கருதுவது போல் தெரிகிறது.

குடியுரிமை பொய்

குடியுரிமை பொய்

குடியுரிமையிலேயே பொய் சொல்லி "பெராவில் 28 கோடி ரூபாய் அபராதம் செலுத்த உயர்நீதிமன்றமே" உத்தரவிட்ட பிறகு டி.டி.வி. தினகரனை எப்படி அழைப்பது? பெரா பெனால்டிக்குரியவரை உத்தமர் என்றா அழைக்க முடியும்? இன்றைய நிலையில் நீங்கள் குறிப்பிடும் "ஓ.பி.எஸ்" அணி அல்ல- "இ.பி.எஸ்" அணி கூட உங்களை உத்தமர் என்று கூறமாட்டார்களே? திரு டி.டி.வி. தினகரனுக்கு இரு முகம். ஒன்று "பெரா குற்றவாளி" முகம். இன்னொன்று "சொத்துகுவிப்பு வழக்கு குற்றவாளிகளின்" முகமூடி அணிந்த முகம்.

இரு குற்றவாளிகள்

இரு குற்றவாளிகள்

ஆகவே "பெரா குற்றவாளியும்" "சொத்துக் குவிப்பு ஊழல் குற்றவாளிகளும்" சேர்ந்து கொண்டு "இ.பி.எஸ்" ஆட்சிக்கு வழிகாட்டினால் அந்த ஆட்சி "குற்றவாளிகளின் பினாமி ஆட்சி" "ஊழல் பேர்வழிகள் வழி காட்டும் ஆட்சி" "தமிழகத்தை கொள்ளையடித்தவர்கள் வழிகாட்டும் ஆட்சி" என்று சொல்வதுதானே பொருத்தமாக இருக்கும். அதை விடுத்து "சொக்கத்தங்கங்கள் வழிகாட்டும் ஆட்சி" என்றால், மக்கள் எங்களை எள்ளி நகையாட மாட்டார்களா?

சூப்பட் டூப்பர் சகவாசம்

சூப்பட் டூப்பர் சகவாசம்

டி.டி.வி.தினகரன் அந்நியச் செலாவனி மோசடி குற்றம் புரிந்தவர் என்று சென்னை உயர்நீதிமன்றமே கூறிவிட்டது. சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு வருடம் சிறைத் தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்றம் தினகரனின் சொந்தங்கள் அடங்கிய "முகமூடி அணிகள்" எப்படி பொதுச் சொத்தை கொள்ளையடித்தார்கள் என்பதை சுட்டிக்காட்டி விட்டது. ஒரு வேளை அந்த உச்சநீதிமன்ற தீர்ப்பை படிக்கவில்லையென்றால் "சூப்பர் டூப்பர்" சகவாசம் கொண்ட டி.டி.வி. தினகரன் ஒரு முறை படித்துப் பார்த்து "குற்றவாளி" என்பதன் அர்த்தத்தை புரிந்து கொள்ளலாமே தவிர இது மாதிரி "தகரடப்பா" போன்ற தரங்கெட்ட, துருப்பிடித்த அறிக்கைகளை விடக்கூடாது.

லண்டன் ஹோட்டல் வழக்கு

லண்டன் ஹோட்டல் வழக்கு

சொத்துக் குவிப்பு வழக்கில் "தன்னை அரசியலில் காலூன்ற வைத்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா" மீதான வழக்கை விரைவுபடுத்தி, சிறைதண்டனையை உறுதி படுத்த "லண்டன் ஹோட்டல்" வழக்கிலிருந்து தப்பித்துக் கொண்ட ஞாபகம் திரு டி.டி.வி.தினகரனுக்கு திடீரென்று வந்திருக்கிறது. அந்த "தப்பித்த அனுபவத்தில்" இப்போது "தான் திருடி பிறரை நம்ப மாட்டார்" என்பது போல் தலைவர் கருணாநிதி அவர்களையும், ஸ்டாலின் அவர்களையும் விமர்சிக்க முயன்றிருக்கிறார்.

தினகரன் சாயம் வெளுத்துப்போச்சு

தினகரன் சாயம் வெளுத்துப்போச்சு

இந்த மாபெரும் இயக்கத்தின் அந்த தலைவர்களை விமர்சிக்க அருகதையோ யோக்யதையோ மருந்துக்குக் கூட உங்களுக்கு இல்லை என்பதை முதலில் உணர வேண்டும். இன்றைக்கு, "சசிகலாவின் கணவர் எம். நடராஜனை மருத்துவமனைக்கு அனுப்பியாச்சு", "திரு திவாகரனையும் அவரது சொந்தங்களையும் விரட்டியடிச்சாச்சு" "திருமதி சசிகலாவோ பெங்களூர் சிறையில்" என்ற அகங்காரத்தில் ஒரு புறமும், "ஓ.பி.எஸ்"ஸையும் வெளியேற்றியாச்சு" "இ.பி.எஸ்"ஸையும் அடக்கி வச்சாச்சு" என்று இன்னொரு புறம் கனவும் கண்டு கொண்டிருக்கும் திரு டி.டி.வி. தினகரனின் சாயம் வெளுத்துப் போச்சு என்பதை ஏனோ அவர் புரிந்து கொள்ள மறுக்கிறார்.

போயஸ் தோட்டம் பறிபோக வாய்ப்பு

போயஸ் தோட்டம் பறிபோக வாய்ப்பு

"முகத்திரை" போட்டுக்கொண்டோ "முக்காடு" போட்டுக் கொண்டோ இனியும் அதிமுக தொண்டர்களை ஏமாற்ற முடியாது என்பது "ஓ.பி.எஸ். அணி" நடத்திய உண்ணாவிரதத்தில் பகிரங்கமாகத் தெரிந்து விட்டதால், அத்துமீறி நுழைந்து இருக்கின்ற போயஸ் தோட்டமும் பறிபோய்விடுமோ என்ற பீதியில் டி.டி.வி.தினகரன் தளபதியைப் பார்த்த "பிதற்றல் அறிக்கை" ஒன்றை எழுதச் சொல்லி வெளியிட்டுள்ளார்.

நானும் அரசியல்வாதிதான்

நானும் அரசியல்வாதிதான்

"ஜெயலலிதாவின் மரணத்திற்கு விசாரணை கமிஷன் வேண்டும்" என்றும் "ஒரு குடும்பத்தின் பிடியில் அதிமுக போய்விடக்கூடாது என்பதும்தான் எங்கள் தர்மயுத்தம்" என்று உண்ணாவிரதம் இருந்த ஓ.பி.எஸ். அணியின் குற்றச்சாட்டிற்கு பதில் சொல்ல வக்கற்ற திரு டி.டி.வி.தினகரன் "நானும் அரசியல்வாதிதான்" என்று அடாவடியாக அதிமுகவினரை மிரட்டலாம். "எடுபிடிகளாக" கை கட்டி நிற்கும் நிர்வாகிகளை அச்சுறுத்தலாம். ஆனால் எங்கள் தளபதியையோ- ஏன் தி.மு.க.வில் உள்ள அடிமட்ட தொண்டனிடம் கூட உங்கள் ஜம்பம் பலிக்காது என்பதை புரிந்துகொள்ள இன்னும் குறைந்தது இருபது ஆண்டுகளாவது தமிழக அரசியல் பற்றி நீங்கள் "பாலபாடம்" கற்க வேண்டும்.

இனிப்பு சாப்பிட்டார்

இனிப்பு சாப்பிட்டார்

"முன்னாள் முதல்வர் அம்மையார் ஜெயலலிதாவின் மர்ம மரணம் பற்றி விசாரணை கமிஷன் கேட்கிறார்கள்" என்ற ஒரே காரணத்திற்காக தன் எடுபிடிகளை ஏவிவிட்டு முன்னாள் முதலமைச்சர் மீது "இனிப்பு சாப்பிட்டார்" "2014 ஆம் ஆண்டு அவருக்கு உடம்பு சரியில்லாமல் போய்விட்டது" என்றெல்லாம் அவதூறுகளை கூச்சமின்றி பரப்பி, அவர் மறைந்து விட்டார் என்ற குறைந்த பட்ச நாகரீகம் கூட காட்டாமல் தாறுமாறாக விமர்சித்து, "குற்றவாளிகளை" காப்பாற்ற முயற்சிக்கும் திரு டி.டி.வி. தினகரன் தமிழக அரசியல் பற்றியோ, தி.மு.க. பற்றியோ பேசுவதற்கு வெட்கமாக இல்லையா?

விபரீத மர்மம்

விபரீத மர்மம்

முன்னாள் முதல்வர் அம்மையார் ஜெயலலிதா அவர்களைப் பற்றியே கவலைப்படாத டி.டி.வி.தினகரன் "குற்றவாளி திருமதி சசிகலா பற்றி" இவ்வளவு தூரம் கவலைப்பட்டு அறிக்கை விட்டிருப்பதைப் பார்த்தாலே, மறைந்த முன்னாள் முதல்வருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள், போயஸ் கார்டனில் அவருக்கு நேர்ந்த விபரீதங்கள் எல்லாவற்றிலும் மர்மம் என்ற அனைவரின் குற்றச்சாட்டுகளிலும் ஆயிரத்தெட்டு அர்த்தங்கள் இருக்கிறது என்பது புலனாகிறது.

விவரம் தெரியாத தினகரன்

விவரம் தெரியாத தினகரன்

மறைந்த ஜெயலலிதா அவர்களின் சொத்துக்கள், போயஸ் தோட்டம், அவருடைய கார்கள், நாற்காலி அனைத்தையும் அபகரித்துக் கொண்டிருக்கும் திரு டி.டி.வி தினகரன் இது போன்ற அறிக்கைகள் விடுவதற்கு கூச்சமாக இல்லையா? "காவிரி எங்கே தோன்றுகிறது? "முல்லைப் பெரியாறு எந்த வருடம் பிறந்தது?, தமிழக அரசியலின் அரிச்சுவடியே தெரியாது? என்ற நிலையில் "துரோகத்தின் மொத்த உருவமாக இருக்கும் உங்களுக்கு" தமிழக மக்கள் பிரச்சினைகளில் அக்கறை இருப்பது போல் அரிதாரம் பூசி முந்திரிக்கொட்டை போல் அறிக்கை விடுவது ஏன்?

கருவாடு மீனாகாது

கருவாடு மீனாகாது

மறைந்த முன்னாள் சபாநாயகர் காளிமுத்து அவர்கள் கூறியது போல் "கருவாடு ஒரு போதும் மீனாகாது" என்பதை டி.டி.வி. தினகரன் உணர்ந்து கொண்டால் நல்லது. தேர்தல் ஆணையத்தால் "அனாமதேயம்" என்று அறிவிக்கப்பட்டு விட்ட உங்களுக்கு ஸ்டாலின் பற்றி கூறுவதற்கு என்ன அருகதை இருக்கிறது என்பதை யோசித்துப் பார்க்காமல், மல்லாக்கப் படுத்துக் கொண்டு உமிழ்ந்தால் அது உங்கள் முகத்தில்தான் விழும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அரைவேக்காட்டு அரசியல் செய்யும் உங்களை கையில் அம்மையார் ஜெயலலிதாவின் சொத்துக்களும், எம்.ஜி.ஆர் வளர்த்த அதிமுகவும் மாட்டிக் கொண்டு சின்னாபின்னமாகிறதே என்ற வருத்தம்தான் என் போன்றோருக்கு வருகிறது.

ரகசிய உடன்பாடு

ரகசிய உடன்பாடு

இன்றைய நிலையில் அதிமுகவிற்குள் யாரும் திரு டி.டி.வி. தினகரனை மதிப்பதில்லை. தொண்டர்களோ "பிள்ளை பிடிக்கும் பூச்சாண்டியைப் பார்ப்பது" போல் திரு டி.டி.வி. தினகரனைப் பார்த்து மிரண்டு ஓடுகிறார்கள். முதலமைச்சராகியிருக்கும் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் போன்றோர் உங்களிடம் தற்காலிகமாக "அடகு" வைக்கப்பட்டுள்ள அதிமுக தலைமையை நிரந்தரமாக மீட்பது எப்படி என்ற "ரகசிய உடன்பாட்டிற்கு" ஏற்கனவே வந்து விட்டார்கள்.

பதவியும் பறிபோகும்

பதவியும் பறிபோகும்

விரைவில் தேர்தல் கமிஷன் அங்கீகாரம் செய்யாத துணைப் பொதுச் செயலாளர் பதவியும் பறிபோகப் போகிறது. போயஸ் தோட்டத்திலிருந்தும் வெளியேற வேண்டிய நிலையும் வரப் போகிறது என்ற ஆத்திரத்திலும், ஆதங்கத்திலும் "ஸ்டாலின் பற்றி விமர்சித்து" தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள டி.டி.வி. தினகரன் முயலுகிறார். அது பகல் கனவு. பலிக்காது!

ஜனநாயக போராட்டங்கள்

ஜனநாயக போராட்டங்கள்

"யாரைப் பார்த்து இயலாமையால்" என்று உளறுகிறீர்கள் திருவாளர் டி.டி.வி.தினகரன் அவர்களே? எங்கள் ஸ்டாலின் அரசியல் நாகரீகத்தின் அவதாரமாக இருந்து கண்ணியம் காக்கிறார். "இந்த ஆட்சியை தூக்கியெறிய வேண்டும்" என்று மக்கள் அனைவரும் ஏகோபித்த கருத்தில் இருந்தும் கூட, ஜனநாயக ரீதியில் மட்டும் போராட்டங்களை நடத்தி அமைதி காக்கிறார்.

பெங்களூர்-பெரா குற்றவாளிகள்

பெங்களூர்-பெரா குற்றவாளிகள்

"குறுக்கு வழியில்" ஆட்சிக்கு வரத் துடிப்பது "பெங்களூர்" மற்றும் "பெரா" குற்றவாளிகளின் நோக்கமாக இருக்கலாம். ஆனால் ஸ்டாலின் எந்த பதவிக்கும் நேரடியாக மக்களை சந்தித்தே வந்திருக்கிறார் என்ற குறைந்தபட்ச அரசியல் அறிவைக் கூட நீங்கள் இழந்தது ஏன்? இன்றைக்கு ஸ்டாலின் போகிற இடமெல்லாம் "இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்புங்களே" என்று முறையிடாத தாய்மார்கள் இல்லை. மாணவர்கள் இல்லை. இளைஞர்கள் இல்லை. ஆனாலும் பேரறிஞர் அண்ணா கற்றுக் கொடுத்த "கடமை, கண்ணியம், கட்டுப்பாடு", தலைவர் கருணாநிதியிடம் பயின்ற அரசியல் பண்பாடு போன்றவற்றை மனதில் வைத்து ஸ்டாலின் அமைதியாக இருக்கிறார்.

ஒரு நிமிடம் போதும்

ஒரு நிமிடம் போதும்

ஆகவே, எங்கள் ஸ்டாலினை வீணாக சீண்ட வேண்டாம் என்று டி.டி.வி. தினகரனை எச்சரிக்க விரும்புகிறேன். மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப "குற்றவாளி" பினாமியின் ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப ஸ்டாலின் தீர்மானித்து விட்டால் ஒரு நிமிடம் கூட "குற்றவாளி"கள் வழிகாட்டும் அதிமுக ஆட்சி தமிழகத்தில் தொடர முடியாது என்பதை மட்டும் நன்கு ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று டி.டி.வி. தினகரனை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

English summary
DMK MLA Raja slam AIADMK dy chief T.T.V. Dinakaran for accusing M.K.Stalin.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X