For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'காங்கிரஸ், இடதுசாரிகள் பக்கம் நிற்போம்!' தி.மு.கவைக் கொதிக்க வைக்கும் வி.சி.க விருது விழா

விடுதலை சிறுத்தைகளின் காங்கிரஸுடனான நெருக்கத்தால் திமுக அதிருப்தி அடைந்துள்ளது.

By Mahalakshmi D
Google Oneindia Tamil News

சென்னை: கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு அம்பேத்கர் சுடர் விருதை வழங்க இருக்கிறார் திருமாவளவன். ' இதே விழாவில் திருநாவுக்கரசருக்கும் விருது வழங்கப்படுகிறது. காங்கிரஸ், இடதுசாரிகள் பக்கம் நாங்கள் இருப்போம் என்பதை விருது விழா மூலம் தெரிவிக்கிறார் திருமாவளவன். இதனால் தி.மு.க தரப்பில் கொதிப்பில் உள்ளனர்' என்கின்றனர் வி.சி.க நிர்வாகிகள்.

ஒவ்வொரு ஆண்டும் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் விருது வழங்கும் விழா நடந்து வருகிறது. இந்த ஆண்டு விருதுப் பட்டியல் குறித்து அறிவிப்பு வெளியிட்ட திருமாவளவன், ' அம்பேத்கர் சுடர், பெரியார் ஒளி, காமராஜர் கதிர், அயோத்திதாசர் ஆதவன், காயிதேமில்லத் பிறை, செம்மொழி ஞாயிறு ஆகிய ஆறு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சமூகநீதிக்கும் தமிழ்மொழி மேம்பாட்டுக்கும் பாடுபடுவோரை சிறப்பிக்கும் விதமாக இந்த விருதுகளை அளித்து வருகிறோம்.

DMK upset over VCK

தி.மு.க தலைவர் கருணாநிதி, கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு உள்ளிட்ட பல தலைவர்களுக்கு இவ்விருதுகள் அளிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், 2018-ம் ஆண்டுக்கான அம்பேத்கர் சுடர் விருதுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன், பெரியார் ஒளி விருதுக்கு ஆந்திராவைச் சேர்ந்த மக்கள் பாடகர் கத்தார், காமராஜர் கதிர் விருதுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர், காயிதேமில்லத் பிறை விருதுக்கு 'வைகறை வெளிச்சம்' இதழாசிரியர் மு.குலாம் முகமது, அயோத்திதாசர் ஆதவன் விருதுக்கு மருத்துவர் அ.சேப்பன் (மறைவுக்கு பின்), செம்மொழி ஞாயிறு விருதுக்கு 'பெருங்கவிக்கோ' வா.மு.சேதுராமன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விருதுகள் வரும் 15-ம் தேதி மாலை சென்னை காமராஜர் அரங்கில் நடக்கும் விழாவில் அளிக்கப்படும்' என அறிக்கை வெளியிட்டிருந்தார். விருது விழா குறித்து நம்மிடம் பேசிய வி.சி.க மாநில நிர்வாகி ஒருவர், " மூன்றாவது அணிக்கு ஆதரவு தெரிவித்ததன் மூலம், ஸ்டாலின் மீது காங்கிரஸ் நிர்வாகிகள் மனவருத்தத்தில் இருந்தனர். ' இப்படியொரு முயற்சி நடந்தால், அது பா.ஜ.கவுக்கு சாதகமாக முடியும்' என அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில், ராகுல்காந்தியை நேரில் சந்தித்துப் பேசினார் திருமாவளவன். ' நாங்கள் நடத்தும் 'தேசம் காப்போம்' மாநாட்டுக்கு வரவேண்டும் என ராகுலுக்கு அழைப்புவிடுத்திருக்கிறோம்' எனத் தெரிவித்தார் திருமா. அதாவது, காங்கிரஸ் இருக்கும் அணியில் நாங்கள் இருப்போம் என்பதைத்தான் மறைமுகமாகச் சுட்டிக் காட்டியிருந்தார். இதற்கு வி.சி.கவுக்குள்ளேயே சிலர் எதிர்ப்பு காட்டினர்.

' தி.மு.கவுக்கும் நாங்கள் அழைப்புவிடுத்துள்ளோம். எனவே, தி.மு.கவைப் புறக்கணித்துவிட்டு இந்த முடிவை எடுக்கவில்லை' எனவும் விளக்கம் கொடுத்தனர். அதேநேரம், வரும் 15ம் தேதி நடக்கும் விருது விழாவில் இடதுசாரி முதல்வர் பினராயிக்கும் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசருக்கும் விருது அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் எங்கள் நிலைப்பாட்டை உறுதியாகத் தெரிவித்துவிட்டோம். இனி முடிவெடுக்க வேண்டியது தி.மு.கதான்" என்றவர்,

" கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, ஒரே ஒரு தொகுதியை எங்களுக்கு வழங்கினார் கருணாநிதி. ' இன்னும் ஒரு தொகுதி வேண்டும்' எனத் திருமா வலியுறுத்தியபோது, ' உங்களுக்கெல்லாம் ஒரு சீட்டே அதிகம்' எனக் கிண்டல் அடித்தார் துரைமுருகன். இதனால் ஏற்பட்ட மனவருத்தத்தில் தொண்டர் ஒருவர் தீக்குளிப்பு முயற்சி வரை சென்றார்.

இந்தமுறை இதுபோன்ற எந்தப் பேச்சுக்களும் தி.மு.க தரப்பில் இருந்து வருவதற்கு வாய்ப்பில்லை. காங்கிரஸ் கூட்டணியில் நாங்கள் வலுவாக இருக்கிறோம். தமிழகத்தில் அதற்கான தொடக்கத்தை திருமா முன்னெடுத்துச் செல்கிறார். அந்தவகையில், டெல்லியில் நடந்த ராகுலுடனான சந்திப்பை தி.மு.க தரப்பினர் ரசிக்கவில்லை. இதைப் பற்றியெல்லாம் நாங்கள் கவலைப்படவில்லை. பா.ஜ.கவுக்கு எதிராக வலுவான அணியைத் தமிழகத்தில் கட்டமைக்க வேண்டியது அவசியம். அதைநோக்கிய பயணத்தில் தி.மு.கவும் எங்களுடன் இணையும் என உறுதியாக நம்புகிறோம்" என்றார் விரிவாக.

English summary
Sources said that DMK High Command very upset over VCK's move to Congress.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X